ரூ.15 லட்சம் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றாரா மோடி?

அரசியல் சமூக ஊடகம்

‘’ரூ.15 லட்சம் பணம் போடுறேன்னு பொய் பிரச்சாரம் பண்ணி மக்களை ஏமாத்தி ஜெயித்தவர் மோடி‘’, என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

C:\Users\parthiban\Desktop\modi 2.png

Archived Link

அச்சம் தவிர் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை மே 28ம் தேதி வெளியிட்டுள்ளது. இதில், ரஜினிகாந்த் ஊடகங்களில் அளித்த பேட்டியை மேற்கோள் காட்டி, அதன் கீழே, நாட்டாமை படத்தில் மனோரமா பேசும் காட்சி புகைப்படத்தை இணைத்துள்ளனர். ‘’நேரு, இந்திரா காந்தி இவங்கெல்லாம் எப்பய்யா 15 லட்சம் போடுறேன்னு பொய் பிரச்சாரம் பண்ணி மக்களை ஏமாத்தி ஜெயிச்சாங்க,’’ என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்படுவதுபோல, ரஜினிகாந்த் பேட்டி அளித்த வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

C:\Users\parthiban\Desktop\modi 3.png

இதன்படி, மே 28ம் தேதி தனது போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ‘’நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய் போன்ற தலைவர்களுக்குப் பின் மக்களை ஈர்க்கக்கூடிய தலைவராக மோடி உள்ளார்,’’ என்று பேசுகிறார். ஆனால், நாம் ஆய்வு செய்யும் பதிவில் நேரு, இந்திராவுக்குப் பின் மோடிதான் மக்களை ஈர்க்கும் தலைவராக உள்ளார் என்று கூறியுள்ளனர். இது தவறான தகவல். ரஜினி பேட்டி தொடர்பாக, நியூஸ்18 வெளியிட்ட வீடியோ ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதுபோல, எங்கேனும் மோடி ரூ.15 லட்சம் பணத்தை இந்தியர்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவேன் என்று கூறியுள்ளாரா எனத் தேடிப் பார்த்தோம். அப்போது, 2013ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தார் பகுதியில் தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி பேசும் வீடியோ ஆதாரம் ஒன்று கிடைத்தது. அதில்தான், முதல்முறையாக இந்த ரூ.15 லட்சம் விவகாரம் பற்றி அவர் பேசியிருக்கிறார்.

அதாவது, ‘’வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்டு இந்தியா கொண்டு வர பாஜக வெற்றி பெற்றால் நடவடிக்கை எடுப்போம். ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை பணம் செலுத்தும் அளவுக்கு வெளிநாட்டு வங்கிகளில் இந்திய அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்,‘’ என்றுதான் பிரதமர் மோடி பேசுகிறார். எங்கேயும், தேர்தலில் நான் வெற்றி பெற்றால் ரூ.15 லட்சம் பணத்தை இந்தியர்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவேன் என்று, அவர் கூறவில்லை. இதுதொடர்பாக, மோடி தனது அதிகாரப்பூர்வ யூ டியூப் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

எனவே, ரஜினிகாந்த் பேசியதில் ஒரு சில வார்த்தைகளை அடிப்படையாக வைத்தும், மோடி பற்றி பகிரப்படும் வதந்தியை உண்மை என நம்பியும், இத்தகைய ஃபேஸ்புக் பதிவை தயாரித்து வெளியிட்டுள்ளனர். இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ள தகவல் தவறானது என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ரூ.15 லட்சம் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றாரா மோடி?

Fact Check By: Parthiban S 

Result: False