கேரளா கோவிலுக்குள் காலணியுடன் வந்த இஸ்லாமியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
கேரளாவில் உள்ள ஒரு கோவிலில் செருப்பு மற்றும் ஷு அணிந்து நடனமாடிய இஸ்லாமியர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
கருப்பு நிற உடை அணிந்த சிலர் குழுவாக நடனமாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "கேரளாவில் உள்ள கோவிலில் செருப்பு மற்றும் ஷு அணிந்து இஸ்லாமியர் பிரவேசம். பாட்டு டான்ஸ் என களை கட்டும் நிகழ்ச்சி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இஸ்லாமியர்கள் இந்து கோவிலுக்குள் செருப்பு காலுடன் நுழைந்து நடனமாடினார்கள் என்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. கேரளாவில் நடந்த அதிர்ச்சிகரமான, மரியாதைக் குறைவான சம்பவம் என்று வெளியான செய்தியை இணைத்து பதிவிடப்பட்டுள்ளது. ஆனால், பார்ப்பதற்கு அவர்கள் ஒரு வீட்டின் முன்பு நடனமாடுவது போல உள்ளது. எனவே, இது பற்றி அறிந்துகொள்ள ஆய்வு செய்தோம்.
இந்த சம்பவம் கேரளாவில் எந்த கோவிலில் நடந்தது என்று எந்த தகவலும் இல்லை. பதிவர் அளித்திருந்த செய்தி இணைப்பிலாவது இந்த கோவில் பற்றி தகவல் உள்ளதா என்று பார்த்தோம். அந்த செய்தியிலும் தகவல் ஏதும் இல்லை. கேரளாவை ஆளும் இடதுசாரி அரசு வாக்கு வங்கி அரசியலுக்காக கோவிலுக்குள் மிலாடி நபி கொண்டாட்டத்தை நடத்த அனுமதி அளித்துள்ளது என்பது போல குற்றச்சாட்டுக்கள் மட்டுமே இருந்தது.
உண்மைப் பதிவைக் காண: organiser.org I Archive
தொடர்ந்து தேடிய போது மலப்புரம் பாலூரில் உள்ள சுப்பிரமணியன் ஸ்வாமி கோவிலில் இது நடந்ததாக ஒரு செய்தி கிடைத்தது. அதிலும் கூட இந்து கோவிலில் இஸ்லாமியர்கள் செருப்பு காலுடன் வந்து அவமரியாதை என்பது போலக் குறிப்பிட்டிருந்தனர். மேலும் அந்த கோவில் அரசு கட்டுப்பாட்டில் இல்லை என்றும், தனி நபர் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் விவரம் அறிய நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளம் குழுவினரின் உதவியை நாடினோம். இது தொடர்பாக அந்த கோவிலை நிர்வகித்து வரும் விஷ்ணு தாசை தொடர்புகொண்டு பேசி அவர் கூறிய விவரங்களை நம்மிடம் தெரிவித்தனர்.
அவர் கூறுகையில், "இந்த கோவில் எங்கள் குடும்பத்தால் நிர்வகிக்கப்படும் குடும்ப கோவிலாகும். இதை அரசு நிர்வகிக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையின் போது அந்த பகுதி இஸ்லாமிய சமூகத்தினருக்கு பாயாசம் வழங்கப்படுவது வழக்கம். மிலாடிநபி, ஓணம் என இரண்டு பண்டிகையும் ஒரே சமயத்தில் வந்ததால் இரண்டையும் கொண்டாடினோம். டிசம்பரில் கிறிஸ்மஸ் பண்டிகையும் இங்கு கொண்டாடப்படுவது வழக்கம்தான். எங்கள் இல்லம், கோவில் எல்லாம் ஒரே வளாகத்தில் உள்ளது. நடனமாடிய பகுதி கோவில் இல்லை. அது கோவிலின் வெளிப்பகுதிதான். அது புனிதமான கோவில் இடம் இல்லை. அந்த வழியாக வந்துதான் எங்கள் இல்லத்திற்குள் செல்ல முடியும். எங்கள் குடும்பம் பரம்பரை பரம்பரையாக ஜோசியம் வேலை செய்து வருகிறோம். ஜோசியம் பார்க்க அனைவரும் வருவார்கள். அப்படி எங்கள் இல்லத்துக்கு வருபவர்கள் அந்த வழியாகத்தான் காலணி அணிந்து வருவது வழக்கம். அதே நேரத்தில் கோவிலுக்குள் காலணி அணிந்து செல்ல அனுமதிப்பது இல்லை" என்று நம்மிடம் தெரிவித்தனர்.
கூகுள் மேப்-ல் அந்த கோவிலை தேடிப் பார்த்தோம். கோவிலுக்குள் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள், வீடியோக்கள் அதில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. வீடியோ ஒன்றில், இஸ்லாமியர்கள் நடனமாடிய பகுதியில் கார் நிற்பதை காண முடிந்தது. புகைப்படங்களில் பலரும் செருப்பு அணிந்து இருப்பதையும் காண முடிகிறது.
இதன் மூலம் இஸ்லாமியர்கள் காலணி அணிந்து இந்து கோவிலுக்குள் செல்லவில்லை என்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்பது உறுதியாகிறது.
முடிவு:
கேரளாவில் குடும்பம் ஒன்றுக்கு சொந்தமான கோவில் மற்றும் இல்லத்திற்கு இடைப்பட்ட பகுதியில் இஸ்லாமியர்கள் நடனமாடிய நிகழ்வை தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram