
‘அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசியில் உரையாடினேன்’ என்று மோடி ட்வீட் பதிவிட்டதற்கு, ‘மோடியுடன் நான் பேசவில்லை’ என்று ஜோ பைடன் பதில் ட்வீட் செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2
பிரதமர் மோடி வெளியிட்ட ட்வீட் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட ட்வீட்களை இணைந்து புகைப்பட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்வீடில், “அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேசினேன். அவருக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தேன். பிராந்திய பிரச்னைகள் குறித்து அவருடன் பேசினேன். இருவரும் இணைந்து செயலாற்ற வேண்டியவற்றில் முதலில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது பற்றி கூறினேன். பருவநிலை மாற்றம் தொடர்பாக இரு தரப்பினரும் ஒத்துழைப்பு அளிப்பது ஒப்புக்கொண்டோம்” என்று கூறியதாக உள்ளது.
இதற்கு ஜோ பைடன், “நானோ என் அலுவலகத்தைச் சார்ந்தவர்களோ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று இருந்தது.
இந்த பதிவை Tp Jayaraman என்பவர் 2021 பிப்ரவரி 13 அன்று வெளியிட்டுள்ளார். நிலைத் தகவலில், “அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசியில் பேசியதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் பதிவிட்டார். அப்படி அவர் ஒன்றும் என்னுடன் பேசவில்லை என்று ஜோ பைடன் டிவிட்டர் பதிவிட்டுள்ளார். வெட்கக்கேடு. எது எதில் பொய் சொல்வது என்று கணக்கு வழக்கு இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார். பலரும் இந்த புகைப்பட பதிவை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேசியதாக பதிவிட்டிருந்தார். இது தொடர்பான செய்தி வெளியாகி இருந்தது. இதன் அடிப்படையில் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில் இருந்து அந்த பதிவை எடுத்தோம்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நான் பேசவில்லை என்று ஜோ பைடன் பதிவிட்டிருந்தால் அது மிகப்பெரிய செய்தி ஆகியிருக்கும். எனவே, அப்படி எதுவும் செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடினோம். எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. ஜோ பைடன் ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்தோம். அதிலும் அப்படி ஒரு பதிவு இல்லை.
அவர் ட்வீட் பதிவிட்டு பிறகு அகற்றியிருந்தால் அதுவே மிகப்பெரிய செய்தியாகி இருக்கும். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. எனவே, வெள்ளை மாளிகை செய்திக் குறிப்பு எதுவும் கிடைக்கிறதா என்று தேடினோம். அப்போது, பிப்ரவரி 8, 2021 அன்று வெளியிட்ட அறிக்கை நமக்கு கிடைத்தது.

அசல் பதிவைக் காண: whitehouse.gov I Archive 1 I mea.gov.in I Archive 2
அதில், “அதிபர் ஜோசப் ஆர்.பைடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினார்” என்று குறிப்பிட்டிருந்தனர். இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டிருந்த அறிக்கையிலும் ஜோ பைடனுடன் மோடி பேசியதாக தெரிவித்திருந்தனர்.
இதன் மூலம் நரேந்திர மோடி பேசியதாக ட்வீட் வெளியிட்டதற்கு நானோ, என் அலுவலகத்தில் உள்ளவர்களோ பேசவில்லை என்று ஜோ பைடன் ட்வீட் செய்தார் எனும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
நரேந்திர மோடியுடன் நான் பேசவில்லை என்று ஜோ பைடன் ட்வீட் செய்தார் என்று பகிரப்படும் ட்வீட் பதிவு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:ஜோ பைடனுடன் பேசியதாக மோடி பொய் சொன்னாரா?– போலி ட்வீட்டால் பரபரப்பு
Fact Check By: Chendur PandianResult: False
