
பாஜக நிர்வாகி பேரணியில் பெண்ணிடம் முத்தம் பெற்றது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த நபர் பா.ஜ.க-வைச் சார்ந்தவரா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
வாகனத்தில் பேரணியாக செல்வது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. முதல் வரிசையில் நிற்கும் தலைவர் ஒருவரை பின்னால் நின்றுகொண்டிருக்கும் பெண்மணி அழைக்கிறார். அவர் திரும்பி அந்த பெண்ணிடம் பேசுகிறார். மீண்டும் மீண்டும் பின்னால் திரும்பிப் பேசுவது அந்த பெண்மணி அவருக்கு முத்தம் கொடுத்தது போலத் தெரிகிறது.
நிலைத் தகவலில், “நம் கட்சி பாலியல் ஜல்சா கட்சி என்பதை எப்படி நிரூபிப்பாய் கண்ணே’
இந்தா பிடிச்சுக்கோ உம்மா, பப்பளிக்காவது, மந்திரியாவது, சோசியல் மீடீயாவது, எல்லாம் கூந்தலுக்கு சமம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ பதிவை Mayandi Rajan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 மார்ச் 12ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பா.ஜ.க நிர்வாகிகள் பொது இடங்களிலும் கூட பெண்களிடம் அத்துமீறி நடந்துகொள்வார்கள் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பா.ஜ.க நிர்வாகி ஒருவர் பெண்மணி ஒருவருடன் பொது இடத்தில் நெருக்கமாக நடந்துகொள்வது போன்று தகவல் பகிரப்பட்டுள்ளது.
வீடியோ தெளிவாக இல்லை. இருப்பினும் தொடக்கத்தில் காட்டப்படும் கொடி பா.ஜ.க-வினுடையது இல்லை. மேலும் மகாராஷ்டிர முதல்வர் ஷிண்டே போன்று ஒருவர் காணப்படுகிறார். எனவே, சந்தேகத்தின் அடிப்படையில், “சிவசேனா நிர்வாகி பொது இடத்தில் பெண்ணுக்கு முத்தம்” என்று கூகுளில் ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினோம். அப்போது இது தொடர்பான செய்திகள் நமக்கு கிடைத்தன.

உண்மைப் பதிவைக் காண: timesnownews.com I Archive
அதில் வீடியோவில் இருக்கும் நபர் ஷிண்டே பிரிவு சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ பிரகாஷ் சர்வே என்பதும் அந்த பெண்மணி அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷீத்தல் மத்ரே என்பதும் தெரியவந்தது. சிவ சேனாவின் ஆசிர்வாத யாத்திரையின் போது இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டது என்றும் தெரிந்தது. ஆனால், இந்த வீடியோ உண்மையில்லை, மார்பிங் செய்யப்பட்டது என்று எம்.எல்.ஏ தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டதும் தெரிந்தது. இதன் அடிப்படையில் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்ட இரண்டு பேரை மகாராஷ்டிரா போலீஸ் கைது செய்துள்ளதும் தெரியவந்தது. அரசியலில் உள்ள பெண்கள் சந்திக்கும் பிரச்னை என்று ஷீத்தல் விளக்கம் அளித்திருப்பதாகவும் செய்திகள் கிடைத்தன.
இதன் மூலம் இந்த நபர் பா.ஜ.க-வைச் சார்ந்தவர் இல்லை என்பதும், அதன் கூட்டணிக் கட்சியான சிவ சேனா கட்சியைச் சார்ந்தவர் என்பதும் உறுதியாகிறது. இதன் அடிப்படையில் பொது இடத்தில் பெண்ணிடம் நெருக்கமாக இருந்த பா.ஜ.க நிர்வாகி என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருடன் பேசிய, மார்ஃபிங் செய்யப்பட்டது என்று கூறப்படும் வீடியோவை பா.ஜ.க நிர்வாகி என்று குறிப்பிட்டு தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:பேரணியில் முத்தம் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
