சீமான் போட்டோஷாப் செய்து ஏமாற்றுகிறாரா? உண்மை அறிவோம்!

அரசியல் தமிழகம்

‘’போட்டோஷாப் செய்து ஏமாற்றும் சீமான், பிரபாகரனை சந்திக்கவில்லை,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

இந்த ஃபேஸ்புக் பதிவில், திருமாவளவன் – பிரபாகரன் மற்றும் சீமான் – திருமாவளவன் மற்றும் பிரபாகரன் – சீமான் ஆகியோர் சந்தித்த புகைப்படங்களை இணைத்து, ‘’உயரம் குறைவாக உள்ளதால், சீமான் போட்டோஷாப் செய்து ஏமாற்றுகிறார்; அவர் பிரபாகரனை சந்திக்கவில்லை,’’ எனக் கூறியுள்ளனர். 

உண்மை அறிவோம்:
சீமான், பிரபாகரன் சந்திப்பு பற்றி சமூக வலைதளங்களில் சமீப காலமாகவே மிகவும் கார சாரமாக விவாதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இதுபற்றிய சர்ச்சைகளுக்கு ஏற்கனவே சீமான் பல முறை விளக்கம் அளித்திருக்கிறார். 

பிரபாகரனை சந்தித்த விசயத்தின் அடிப்படையில், சீமான் சில மிகைப்படுத்தப்பட விசயங்களை பேசிவருவதாக, தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கூறிவருகின்றனர். இதையொட்டி, சீமான் ஆதரவாளரும் சக இயக்குனருமான பாரதிராஜா கூட, இந்த சந்திப்பு எப்படி நிகழ்ந்தது, அதில் என்ன விசயங்கள் பேசப்பட்டன என்று கூறி விமர்சனம் செய்திருக்கிறார். 

இதேபோல, திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் கூட விமர்சனம் கூறியுள்ளார். 

OneIndia Tamil LinkArchived Link

எனவே, அவரை விமர்சிக்கும் பலரும் அவர் பிரபாகரனை சந்திக்கவில்லை என்று எங்கேயும் கூறவில்லை என்பதை கவனிக்க முடிகிறது. சில நிமிடங்கள் மட்டும் சந்தித்துவிட்டு, மிகைப்படுத்தி பேசுகிறார் என்றுதான் விமர்சிக்கிறார்கள். 

ஆனால், நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவு போன்ற பல இடங்களில் இந்த புகைப்படத்தை ஃபோட்டோஷாப் என்றே குறிப்பிட்டு தவறான தகவல் பகிர்கிறார்கள். சிலர் ஒல்லியாக இருக்கும்போது உயரமாக தோன்றுவார்கள், அதுவே உடல் எடை கூடி குண்டான தோற்றத்திற்கு மாறினால் அவர்களின் உயரம் குறைந்ததுபோல தோன்றும். அப்படித்தான் பிரபாகரன் பற்றிய தோற்றப் பிழையும். இயல்பாக, பிரபாகரனே உயரம் குறைவான நபர்தான்

பிரபாகரன், வைகோ, திருமாவளவன் போன்றோரை சந்தித்தபோது இருந்ததைவிட சீமானை சந்திக்கும்போது மிகவும் உடல் பருமனாக உள்ளதை அவதானிக்க முடிகிறது. 

இறுதியாக, சீமான் கடந்த 2009ம் ஆண்டில் பிரபாகரனை சந்தித்தது பற்றி ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியின் லிங்கை இங்கே இணைத்துள்ளோம். அப்போது பிரபாகரனுடன் என்ன பேசினேன் என்று சீமான் பேசிய விவரங்களுக்கும், தற்போது அவர் பேசுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளதைக் காண முடிகிறது. அது மட்டுமின்றி பிரபாகரன் மிகவும் குண்டாக இருந்ததை பற்றி அவரிடமே கேட்டதாக சீமான், அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 

Archived Link 

இறுதியாக, இந்த புகைப்படத்தின் நம்பகத்தன்மை பற்றி பெயர் வெளியிட விரும்பாத சில விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் மற்றும் ஈழப் போரில் நேரடித் தொடர்புடையவர்களிடம் பேசினோம். 

அவர்கள், ‘’இது உண்மையான புகைப்படம்தான். அதில் சந்தேகம் இல்லை. வழக்கமாக, அரசியல் பிரமுகர்கள் யாரும் பிரபாகரனை சந்தித்தால், அதுபற்றிய புகைப்படம், வீடியோவை விடுதலைப் புலிகளே அதிகாரப்பூர்வமாக வெளியிடுவது வழக்கம். ஆனால், சீமான் விடயத்தில் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. அதற்கான காரணம் அவர்களுக்கே வெளிச்சம். எனவேதான், சிலர் இந்த புகைப்படங்களின் மீது சந்தேகம் எழுப்புகிறார்கள். ஒருவேளை போர்க்காலம் என்பதால் அதற்கான சூழல் ஏற்படாமல் போயிருக்கலாம். அத்துடன்,பிரபாகரனை சந்தித்தபோது சீமான் ஒரு சினிமா இயக்குனராகவே சென்றிருந்தா ர்; அரசியல்வாதியாக அல்ல. மேலும், பாலு மகேந்திராவை பார்க்கவே பிரபாகரன் விரும்பினார். அவருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால், அவருக்குப் பதிலாக சீமானை அழைத்துச் சென்றுள்ளனர்,’’ எனக் குறிப்பிட்டனர்.  

சீமான் மட்டுமல்ல, தமிழ் சினிமாவை சேர்ந்த பலரையும் நேரில் வரவழைத்து பிரபாகரன் பேசியிருக்கிறார். இயக்குனர் மகேந்திரன் கூட சினிமாப் பணி நிமித்தமாக, 2002ம் ஆண்டில் பிரபாகரனை நேரில் சந்தித்து பேசியுள்ளார் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.  

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த விவரம், 

1) சீமான், பிரபாகரன் சந்திப்பு 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிகழ்ந்ததாக, சீமானே ஊடகங்களில் கூறியிருக்கிறார்.
2) பிரபாகரனை சந்தித்தது போது என்னென்ன விசயங்கள் பற்றி பேசினேன் என்று 2009ம் ஆண்டில் ஆனந்த விகடன் ஊடகத்திற்கு சீமான் விரிவான பேட்டி அளித்திருக்கிறார்.
3) 2009ம் ஆண்டில் சீமான் ஊடகங்களில் அளித்த பேட்டிக்கும், சமீப காலமாக அவர் பேசிவருவதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. பிரபாகரனுடனான சந்திப்பு பற்றி தற்போது அவர் சற்று மிகைப்படுத்தப்பட்ட விசயங்களை பேசுவதாக, சக அரசியல்வாதிகள் அவரை விமர்சிக்கின்றனர். மற்றபடி, ‘அவர் பிரபாகரனை சந்திக்கவே இல்லை; போட்டோஷாப் செய்த புகைப்படத்தை வைத்து ஏமாற்றுகிறார்,’ என்பது தவறான தகவல்.      

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி பிரபாகரன் – சீமான் சந்திப்பு பற்றிய புகைப்படம் பற்றி தவறான தகவல் பகிரப்படுவதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை காண நேரிட்டால், +91 9049044263 என்ற எங்களது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ஃபார்வேர்ட் செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:சீமான் போட்டோஷாப் செய்து ஏமாற்றுகிறாரா? உண்மை அறிவோம்!

Fact Check By: Pankaj Iyer 

Result: False

1 thought on “சீமான் போட்டோஷாப் செய்து ஏமாற்றுகிறாரா? உண்மை அறிவோம்!

  1. வணக்கம்..!
    முகநூலில் பதிவு செய்யப்படும் பதிவுகளின் உண்மை தன்மையை அறிவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்..!
    அந்த குழுவின் செயல்பாடுகளும் திருப்திகரமாக அமைந்து வருகிறது.. வாழ்த்துக்கள்..!

Comments are closed.