குஜராத்தில் உள்ள அதானி துறைமுகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு பசுக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

துறைமுகத்தில் லாரிகளில் பசு மாடுகள் இறக்குமதி / ஏற்றுமதிக்காகத் தயாராக வைக்கப்பட்டிருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. வீடியோவில், "அதானி துறைமுகம், குஜராத்" என்று தமிழில் எழுதப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், "பசுக்கள்,, காளைகள் மோடி ஆட்சியில் வெளிநாடுகளுக்கு சுற்றுலாவுக்கும்,, கல்வி கற்ப்பதற்க்கும் செல்லுவதற்கு குஜராத்தில் அதானி க்கு விற்க்கப்பட்ட (இந்திய அரசுக்கு சொந்தமானது.. அது பழைய வரலாறு) அதானி க்கு சொந்தமான துறைமுகத்தில் கப்பலில் ஏறுவதற்கு முன் அதன் பாஸ்போர்ட் டுகள் சரிபார்க்க நின்றபோது எடுக்கப்பட்ட பதிவு.. ஹிந்து மக்களின்?????நம்பிக்கை துரோகி இப்ப யாரு??? துறைமுகமா?? அ தானியா?? இல்லை,,இல்லை இது காங்கிரஸ் ஆட்சியில் எடுக்கப்பட்டது என ஓடோடி வரும் ஆரிய அடிமைகளா?? .. இன்னொரு உயிரை கொன்று புசிப்பார்கள் மிருகம்?! அந்த மிருகத்திற்க்கே மக்கள் வணங்கும்,, நேசித்திடும் ஒரு உயிர் உள்ள வாய் பேசினார் ஜீவனை வாரி வழங்கிட துனை நிற்பவன் மனித பிறவியே கிடையாது,, விலங்கினும் கீழானவன்.. மாபெரும் அந்த உலக மகா நடிகன்,,உத்தமன் யார்????" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive

உண்மை அறிவோம்:

குஜராத்தில் உள்ள துறைமுகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு பசு மாடுகள் ஏற்றுமதி செய்யப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், எந்த இடத்திலும் இது குஜராத்தில் உள்ள அதானி துறைமுகம் என்பதற்கான ஆதாரங்களைக் காட்டவில்லை. மேலும் இந்தியாவிலிருந்து பசுக்கள் உயிருடன் ஏற்றுமதி செய்யப்படுவதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. எனவே, சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.

முதலில் வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது நமக்கு இந்த வீடியோ தொடர்பாக எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை. வேறு வேறு ரிவர்ஸ் இமேஜ் தேடல் தளங்களில் இந்த புகைப்படங்களைப் பதிவேற்றி தேடினோம். அப்போது சில ஃபேஸ்புக் பயனர்கள் இந்த வீடியோவை தங்கள் பக்கங்களில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது.

ஏப்ரல் 19, 2024 அன்று ஒரு வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அரபு மொழியில் இருந்த பதிவுகளை மொழிமாற்றம் செய்து பார்த்த போது அதில் ஈத் அல் அதாவுக்கு தயாராகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஈத் அல் அதா என்றால் என்ன என்று தேடிய போது பக்ரீத் பண்டிகையின் மற்றொரு பெயர் என்று தெரிந்தது. ஆனால் இந்த வீடியோ குஜராத்தில் அதானி துறைமுகத்தில் எடுக்கப்பட்டது என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் நமக்கு கிடைக்கவில்லை.

உண்மைப் பதிவைக் காண: Facebook

சரி, இந்த துறைமுகம் குஜராத்தில் உள்ள அதானி துறைமுகம் தானா என்று அறிய கூகுள் மேப்பில் உள்ள அதானி துறைமுகத்துடன் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ காட்சியை ஒப்பிட்டுப் பார்த்தோம். குஜராத்தில் நான்கு இடங்களில் அதானி துறைமுகம் இருப்பது தெரிந்தது. பிரபலமான முந்ரா துறைமுகத்துடன் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள துறைமுக கட்டிடங்கள் ஒத்துப்போகவில்லை. மற்ற துறைமுக கட்டிடங்களும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவுடன் ஒத்துப்போகவில்லை.

உண்மைப் பதிவைக் காண: marinetraffic.com I Archive

அடுத்ததாக நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள கட்டிடங்களைப் புகைப்படங்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, ஈராக்கில் உள்ள உம் கசார் (Umm Qasr) துறைமுகத்தில் உள்ள கட்டிடத்துடன் இந்த புகைப்படம் ஒத்துப்போவதைக் காண முடிந்தது.

உண்மைப் பதிவைக் காண: theanimalreader.com I Archive

இதன் அடிப்படையில் உம் கசார் துறைமுகம், உயிருள்ள பசுக்கள் இறக்குமதி, பக்ரீத் உள்ளிட்ட சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது பிரேசில் நாட்டிலிருந்து ஈராக்கிற்கு 19000 பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பது தொடர்பான செய்திகள் நமக்கு கிடைத்தன. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ ஈராக்கில் எடுக்கப்பட்டது என்று நேரடியாகக் குறிப்பிட்டு எந்த ஒரு பதிவும் நமக்கு கிடைக்கவில்லை.

அதே நேரத்தில் குஜராத்திலிருந்து உயிருடன் பசுக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் தவறாகப் பதிவிட்டவர்கள் மீது குஜராத் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருப்பதாக செய்திகள் கிடைத்தன. இவை எல்லாம் இந்த வீடியோ வெளிநாட்டில் எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்கின்றன.

முடிவு:

ஈராக்கில் உள்ள ஒரு துறைமுகத்தில் பசுக்கள் உயிருடன் இறக்குமதி செய்யப்பட்ட வீடியோவை எடுத்து குஜராத்தில் இருந்து பசுக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:குஜராத்திலிருந்து பசுக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False