விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக-வுக்கு அதிமுக தொண்டர்கள் ஒரு போதும் ஓட்டு போட மாட்டார்கள் என்று சிவி சண்முகம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் புகைப்படத்துடன் ஊடகம் ஒன்று வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "CV சண்முகம் காட்டம். புரட்சித் தலைவி அம்மாவின் பெயரையோ, போட்டோவையோ பயன்படுத்த பாமக விற்கு எந்த யோக்கியதையும் கிடையாது. பாஜகவோடு கூட்டு சேர்ந்து கொண்டு அதிமுகவை அழிக்க நினைத்த பாமக விற்கு அதிமுக தொண்டன் ஒருபோதும் ஓட்டு போட மாட்டான்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் புறக்கணிப்பு செய்துள்ளது. எனவே, அதிமுக-வினர் தங்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று திமுக, பாமக, நாம் தமிழர் கட்சியினர் பிரசார மேடைகளில் பேசி வருகின்றனர். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி போன்றோர் இதுதொடர்பாக நேரடி வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

Maalaimalar Link l Hindu Tamil Link

இந்த நிலையில் அதிமுக தொண்டர்களின் ஓட்டு பாமக-வுக்கு கிடைக்காது என்று அதிமுக மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் கூறியதாக சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். சிவி சண்முகம் இப்படி கூறியிருக்க வாய்ப்பு உள்ளதால் இது உண்மையாக இருக்கலாம் என்று பலரும் பகிர்ந்து வந்தனர்.

Archive

ஆனால், இந்த தகவல் உண்மையில்லை என்று சிவி சண்முகம் தரப்பில் இருந்தே மறுப்பு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட அதிமுக ஐடி விங் சார்பில் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், "அதிமுகவின் நிலைப்பாடு தேர்தல் புறக்கணிப்பு மட்டுமே.! விழுப்புரம் மாவட்ட செயலாளர் அண்ணன் #CVe_சண்முகம்_MP அவர்களின் பெயரை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை தவறுதலாக பதிவிடும் சமூக விரோதிகளுக்கு கண்டனம்..! இது சமூக விரோதிகளால் பரப்பப்படும் தவறான அறிக்கை..!" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: hindutamil.in I Archive

மேலும், இந்த பதிவு தொடர்பாக போலீசிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்து தமிழில் வௌியான செய்தியில், "முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் உதவியாளர் ராஜாராம், நேற்று இரவு திண்டிவனம் ரோஷணை போலீஸில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “சமூக வலைதளத்தில் சி.வி.சண்முகம் குறித்து அவதுாறாக கருத்துப் பரப்பி வருகின்றனர். தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது. சி.வி.சண்முகம் டெல்லியில் உள்ளதால், அவர் கூறியதன் பேரில் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டதாக அவரது உதவியாளர் ராஜாராம் தெரிவித்துள்ளார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இவை எல்லாம் பாமக-வுக்கு எந்த ஒரு அதிமுக தொண்டனும் வாக்களிக்க மாட்டான் என்று சிவி சண்முகம் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்தன.

முடிவு:

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக-வுக்கு அதிமுக தொண்டர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று சிவி சண்முகம் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அதிமுக தொண்டர்கள் பாமக.,வுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று சிவி சண்முகம் கூறினாரா?

Written By: Chendur Pandian

Result: False