மலையாள நடிகர் ஜெயராம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தங்கக் கதவை அளித்தாரா?

ஆன்மிகம் சினிமா

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகர் ஜெயராம், தங்கக் கதவை தானமாக அளித்துள்ளதாக ஃபேஸ்புக்கில் ஒரு செய்தி மற்றும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். அதன் விவரம் உங்கள் பார்வைக்கு.

வதந்தியின் விவரம்

நடிகர் ஜெயராமன் அவர்கள் சபரிமலை கோவிலுக்கு தங்கத்திலான கதவுகளை சொந்த செலவில் அர்பணித்தார்.

Archive Link

தமிழர்களின் இஷ்ட தெய்வங்களுள் ஒன்றாக ஐயப்பன் இருக்கிறார். இதனால், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகத்திலிருந்து செல்கின்றனர். கடந்த மார்ச் 11ம் தேதி, சபரிமலை நடை திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போது, தமிழ், மலையாள திரைப்பட நடிகர் ஜெயராம் தன்னுடைய சொந்த செலவில் ஐயப்பன் கோயிலுக்கு தங்கத்தாலான கதவை அளித்திருக்கிறார் என்ற செய்தி வெளியாகி, பக்தர்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது. கதவு அருகே ஜெயராம் அமர்ந்திருக்கும் காட்சிகள் இந்த செய்தியை உறுதிபடுத்தும் வகையில் இருந்தன. எனவே, இதை உண்மை என்று எண்ணிய பக்தர்கள் அதிக அளவில் ஷேர் செய்துள்ளனர்.

உண்மை அறிவோம்

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற கோயில்களுள் ஒன்று சபரிமலை. இங்கு ஆண்டுதோறும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து ஐயப்பனை தரிசித்து செல்கின்றனர். கேரளா, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா என இந்தியா முழுவதும் இருந்து ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கான பக்தர்கள் இங்கு வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக மகர ஜோதியைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடுவது வழக்கம்.

சமீபத்தில், கோவில் கருவறை கதவில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து  புதிய கதவு தயாரிக்கப்பட்டது. தேக்கு மரத்தாலான கதவின் மீது நான்கு கிலோ தங்கத்தாலான தகடும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கதவைப் பொருத்துவதற்கான பிரசன்னம் சமீபத்தில் பார்க்கப்பட்டது. அதன் அடிப்படையில் புதிய தங்க கதவு, எலம்பள்ளி தர்மசாஸ்தா கோவிலில் இருந்து மார்ச் 10ம் தேதி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இந்த கதவை தேவசம் போர்டு அதிகாரிகள் பெற்று அன்று இரவே பொருத்தியுள்ளனர். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்த கதவு ஊர்வலமாக கொண்டுவரும் நிகழ்வில் நடிகர் ஜெயராம் கலந்துகொண்டுள்ளார். நடிகர் ஜெயராம் ஒவ்வொரு மாதமும் சபரிமலை செல்லும் வழக்கத்தை கொண்டுள்ளார். இதுதொடர்பாக சபரிமலை தேவசம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archive link

அந்த வகையில், மார்ச் மாதம் நடைபெற்ற நடை திறப்பின்போது நடிகர் ஜெயராம் சபரிமலை வந்துள்ளார். நடைதிறப்பின் அடையாளமாக நடிகர் ஜெயராம் குத்துவிளக்கேற்றினார் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

பிரபலங்கள் என்ற வகையில் குத்துவிளக்கேற்ற ஜெயராம் அழைக்கப்பட்டார். கோவில் நடை திறப்பின்போது பிரபலங்கள் குத்துவிளக்கேற்றுவது வழக்கம்தான் என்றும் தேவசம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த கதவை உண்ணி நம்பூதிரி என்பவர் தலைமையிலான ஐயப்ப பக்தர்கள் குழு நன்கொடையாக அளித்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஐயப்பன் கோயிலுக்கு புதிய தங்க கதவை நன்கொடையாக அளித்ததாக ஜெயராம் எங்கேயும் தெரிவிக்கவில்லை. கூகுளில் தேடியபோது அது தொடர்பான பேட்டி, பதிவு எங்கும் இல்லை. கூகுளில் நடை திறப்பு, தங்க கதவு பற்றிய செய்தி மட்டுமே கிடைத்தது. ஜெயராம் தங்க கதவு அளித்ததாக செய்தி ஏதும் இல்லை. ஆதார புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது.

மேலும், திருவிதாங்கூர் தேவசம் போர்டும் மிகத் தெளிவாக உண்ணி நம்பூதிரி தலைமையிலான பக்தர்கள் குழுதான் அளித்தது என்று கூறியுள்ளது.

நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) சபரிமலை கோயிலுக்கு நடிகர் ஜெயராம் மாதந்தோறும் செல்வது வழக்கம். கோயில் நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும், தவறாமல் ஆர்வத்துடன் அவர் பங்கேற்பதும் உண்டு.
2) தங்க கதவை ஜெயராம் வழங்கியதாக, எங்கேயும் செய்தி வெளியாகவில்லை.
3) தங்க கதவு, பக்தர்கள் காணிக்கையாக தந்தது என்று, திருவிதாங்கூர் தேவசம் விளக்கமாகக் கூறியுள்ளது.
4) மரியாதைக்காக, தங்க கதவை திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி, ஜெயராமுக்கு, சபரிமலை தேவசம் அழைப்பு விடுத்துள்ளது.

இதன்படி, ஐயப்பன் கோயிலில் புதிய தங்கத்தாலான கதவு பொருத்தப்பட்ட செய்தியில், தங்க கதவுக்கு அருகே ஜெயராம் நின்றிருந்ததால், அதை அவர்தான் அளித்துள்ளார் என்று தவறுதலாக நினைத்து, ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர் என்பது இதன்மூலமாக சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு

உரிய ஆதாரங்களின்படி, ஐயப்பன் கோவிலுக்கு தங்கத்தாலான கதவை அளித்தது ஜெயராம் இல்லை; சில பக்தர்கள்தான் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத, போலி புகைப்படங்கள், வீடியோ, செய்திகள் போன்றவற்றை நமது வாசகர்கள் யாரும் பகிர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். அப்படி நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால், உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு நீங்கள் ஆளாக நேரிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Avatar

Title:மலையாள நடிகர் ஜெயராம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தங்கக் கதவை அளித்தாரா?

Fact Check By: Praveen Kumar 

Result: False

 • 7
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  7
  Shares