பாத்திமா பாபுவை கடத்தினாரா ஸ்டாலின்? 30 ஆண்டுகளாகத் துரத்தும் வதந்தி!

அரசியல்

30 ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்த பாத்திமா பாபுவை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதனால், பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக பேச ஸ்டாலினுக்குத் தகுதி இல்லை என்றும் கூறி பல பதிவுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. இதன் நம்பகத் தன்மையைக் கண்டறிய ஆய்வு மேற்கொண்டோம். அதன் விவரம்:

வதந்தியின் விவரம்

30 வருஷத்துக்கு முன்னாடி சென்னையில் ஒரு பெரிய ரேப்பிஸ்ட் இருந்தானாம். அவனோட அப்பன் செல்வாக்குல ஊரையே சூறையாடி ரேப் செஞ்சிக்கிட்டு இருந்தானாம்

காலப்போக்கில் அவன் ஒரு கட்சியோட தலைவர் ஆகிட்டானாம். இப்போ அந்த முன்னாள் ரேப்பிஸ்ட் பொள்ளாச்சி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கிறானாம்

இதை சொல்ல இவனுக்கு என்ன யோக்கியதை இருக்குன்னு ஊரே காரி துப்பிகிட்டு இருக்காம்.

அந்த முன்னாள் ரேப்பிஸ்ட் யாருன்னு என்கிட்ட கேட்காதீங்க… சத்தியமா எனக்கு தெரியாது ?♂️

Archived link

இதேபோல், Students Against Corruption 2.0 என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு தகவல் பதிவிடப்பட்டுள்ளது.

நக்கீரன் செய்தி என்றால் அதில் உண்மை இருக்கும்…

அப்படி என்றால்…பாத்திமா விவகாரம் உண்மையே… அப்படித்தானே நக்கீரா…..?

???????

Archived link

30 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்த பாத்திமா பாபுவை, அரசியல் பிரபலம் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகவும், அப்போது தமிழ்நாடு அரசு முதலமைச்சராக இருந்த தனது தந்தையின் துணை கொண்டு இந்த விவகாரத்தை சரிகட்டிவிட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  யார் அந்த பிரபலம் என்று குறிப்பிடப்படவில்லை என்றாலும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு ஆகியோரின் படம் வைக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளாக தொடர்ந்து துரத்தும் வதந்தி, பாலியல் அத்துமீறல், மு.க.ஸ்டாலின் மீதான அதிருப்தி, பாத்திமா பாபு மீதான பரிவு போன்றவை இந்த பதிவை அதிக அளவில் ஷேர் செய்ய தூண்டியுள்ளது.

உண்மை அறிவோம்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மறைந்த மு.க.கருணாநிதியின் 3வது மகன் ஆவார். இவர், தன்னுடைய இளமைக் காலம் முதல் கட்சிப் பணியாற்றி வருகிறார். கடந்த 1977-ம் ஆண்டில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்திய எமர்ஜென்சியின்போது, இந்திய அளவில் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் கைது செய்யப்பட்டு, சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டனர். அப்படியான கொடுமையை சந்தித்த நபர்களில், மு.க.ஸ்டாலினும் ஒருவர். அவரது அரசியல் பயணத்தில் இந்த சம்பவம் மிக முக்கியமானது என்பதுடன், இதன்மூலமாக, அவருக்கு இந்திய அளவில் அங்கீகாரமும் கிடைத்தது என்றால் அது மிகையல்ல. இதைத்தொடர்ந்து, 1980-ல் மதுரையில் நடந்த தி.மு.கழக மாநாட்டில் இவருக்காகவே இளைஞர் அணி என்ற பிரிவை அப்போது தலைவராக இருந்த மு.கருணாநிதி தொடங்கினார்.

அதன்பிறகு, இளைஞர் அணி அமைப்பாளராக இருந்த மு.க.ஸ்டாலின், 1984ம் ஆண்டு இளைஞர் அணி செயலாளர் ஆனார். படிப்படியாக, வளர்ந்து, திமுக பொருளாளர், திமுக செயல் தலைவர் என்ற உச்சங்களை எட்டிய அவர், மு.கருணாநிதியின் மறைவை தொடர்ந்து, திமுக தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். இதுதவிர, சென்னை மாநகர மேயராகவும், தமிழக துணை முதல்வராகவும் அவர் பதவி வகித்துள்ளார். மு.க.ஸ்டாலினின் அரசியல் பயணம் பற்றி பி.பி.சி தமிழில் வெளியான கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நீண்ட அரசியல் வரலாறு கொண்ட மு.க.ஸ்டாலின் மீது சில வதந்திகள் தொடர்ந்து கூறப்படுவது உண்டு. குறிப்பாக, கடந்த 1989ம் ஆண்டில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, முதலமைச்சர் கருணாநிதியின் மகன் என்ற வகையில் மு.க.ஸ்டாலின் நிறைய அத்துமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுவது உண்டு.

இதில் ஒன்றுதான் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த பாத்திமா பாபுவை மு.க.ஸ்டாலின் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் தகவல். இந்த செய்தி 1989 முதலே பரவி வருகிறது. ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர் என்பதால், மு.க.ஸ்டாலின் நிச்சயமாக இதை செய்திருப்பார் என்றே அன்று முதல் இன்று வரையிலும் மக்கள் கருதுகின்றனர்.

இந்த வதந்திக்கு, 1989ம் ஆண்டிலேயே மு.க.ஸ்டாலினும், பாத்திமா பாபுவும் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆனாலும், இன்றளவும் இந்த வதந்தி பரவி வருகிறது.  

பிரபல அரசியல் புலனாய்வு இதழான நக்கீரன், 1989ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், இது குறித்து மு.க.ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியது. அதில், ‘’அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை. அரசியல் எதிரிகள் திட்டமிட்டு வதந்தியை பரப்புகின்றனர். பாத்திமா பாபுவை சந்தித்ததே இல்லை,’’ என்று விளக்கம் அளித்திருந்தார். ஆதார புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது. இதைச் சரியாக படிக்காமல் இன்றளவும் பலர் பகிர்ந்து வருகிறார்கள்.

அதேபோல், தமிழின் முன்னணி வார இதழான குமுதம், 1989ம் ஆண்டு பாத்திமா பாபுவிடம் ஒரு பேட்டியை எடுத்து வெளியிட்டுள்ளது. அதில், மு.க.ஸ்டாலின் தொடர்பாக பரவும் செய்தி குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “நான் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்ததே கிடையாது. அப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை. இந்த வதந்தி சமாசாரம் முழுவதும் யாரோ ஒருவரின் கற்பனையில் பிறந்துள்ளது. என்னென்னமோ நடந்ததாக எழுதி, மேலும் மேலும் மற்றப் பத்திரிகைகளில் அதை விரிவுபடுத்தி, அரசியல்வாதிகள் அதை மேடையில் பேசி, மேடையில் பேசியதை திரும்பப் பத்திரிகையில் போட்டு… இப்படியே வளர்த்துக்கொண்டே போய்விட்டார்கள்.

மக்கள் மத்தியில் டி.வி மூலம் நன்கு அறிமுகமாகி, மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்தி வரும் என்னைப் போல ஒரு பெண்ணையா அனாவசியமாகச் செய்திகளில் பெயர் அடிபடும்படி செய்திருக்க வேண்டும் என்று நினைக்கும்போது ரொம்பவும் வேதனையாக இருக்கிறது” என்று கூறியுள்ளார். குமுதம் இதழில் வெளியான கட்டுரையின் படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

இதன்படி, மேற்கண்ட வதந்திக்கு, 1989ம் ஆண்டிலேயே இருவர் தரப்பிலும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.

எனினும், சோஷியல் மீடியா வருகைக்குப் பிறகு இந்த வதந்தி புதுப் புது அவதாரம் எடுத்துக்கொண்டே இருக்கிறது. இது குறித்து கடந்த 2018ம் ஆண்டு கூட பாத்திமா பாபுவிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் , “எத்தனை ஆண்டுகள்தான் விளக்கம் அளிப்பது. அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று கூறிவிட்டேன். என்னைப் பற்றி நான் சொல்வதுதான் உண்மை. அதைத்தான் நீங்கள் நம்ப வேண்டும். அதை விட்டுவிட்டு வெளியில் பலரும் கதைகட்டுவதைப் போல, மசாலா தடவிய கற்பனைப் பொய்யைத்தான் நம்புவீர்கள் என்றால், அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அது உங்கள் இஷ்டம். இதற்கு மேல் இதைப் பற்றி கேள்வி வந்தால் நான் பதில் சொல்வதாக இல்லை” என்று கூறினார். இது தொடர்பாக தினமணி நாளிதழில் வெளியான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

மேலும், பாத்திமா பாபு தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையில் தன்னுடைய ரசிகர்கள், நலம் விரும்பிகள் மத்தியில் பேசியுள்ளார். அதன் ஆடியோ விவரம் கேட்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பாத்திமா பாபு என இருவர் தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்ட பிறகும் தி.மு.க எதிர்ப்பாளர்கள் ஸ்டாலினை பற்றி தொடர்ந்து வதந்தி பரப்பி வருவது தொடர்ந்து கொண்டே இருப்பதாக, நமது ஆய்வில் தெரியவந்தது.  

1) 30 ஆண்டுகளுக்கு முன்பு நக்கீரனில் வெளியான ஸ்டாலின் பேட்டி
2) 30 ஆண்டுகளுக்கு முன்பு குமுதத்தில் வெளியான பாத்திமா பாபுவின் பேட்டி
3) கடந்த ஆண்டு ஃபேஸ்புக்கில், பாத்திமா பாபு அளித்த நேரலை ஒலிபரப்பு

மேற்கண்ட ஆதாரங்கள் அடிப்படையில் இந்த தகவல் போலிதான் என்பது தெளிவாகிறது. பாலியல் அத்துமீறல் சம்பவம் நிகழவே இல்லை என்று, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பாத்திமா பாபுவே விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் அவரது விளக்கமே இறுதியானது.

தேர்தல் நேரம் என்பதாலும் பொள்ளாச்சி விவகாரத்தில் ஆளும் அ.தி.மு.க அரசுக்கு தி.மு.க தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதாலும் மு.க.ஸ்டாலினின் தனி மனித ஒழுக்கத்தை விமர்சனம் செய்யும் வகையில் தி.மு.க எதிர்ப்பாளர்களால் இத்தகைய பதிவுகள் தொடர்ந்து பதிவிடப்பட்டுள்ளது தெரிகிறது.

முடிவு

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மு.க.ஸ்டாலின் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வெளியான செய்தி பொய் என உறுதிபடுத்தப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத, போலி புகைப்படங்கள், வீடியோ, செய்திகள் போன்றவற்றை நமது பார்வையாளர்கள் யாரும் பகிர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். அப்படி நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால், உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு நீங்கள் ஆளாக நேரிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Avatar

Title:பாத்திமா பாபுவை கடத்தினாரா ஸ்டாலின்? 30 ஆண்டுகளாகத் துரத்தும் வதந்தி!

Fact Check By: Praveen Kumar 

Result: False

 • 2
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  2
  Shares