FACT CHECK: விவசாயிகள் போராட்டத்தில் ஆசாதி கோஷமிட்ட மாணவர்கள்- உண்மை என்ன?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் மாணவர்கள் ஆசாதி கோஷத்துடன் பங்கேற்றார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

செங்கொடியுடன் மாணவர்கள் ஊர்வலமாக ஆசாதி கோஷம் எழுப்பியபடி செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திருடனுக்கு #தேள் கொட்டுன மாதிரி இருக்குமே😜😝 விவசாயிகளுக்கு ஆதரவாக மானவர்கள் மீண்டும் ஆஷாதி முழக்கம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Allah is one என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Iglass Abu என்பவர் 2020 டிசம்பர் 4ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து போராட்டம் தொடர்பாக பல உண்மையான தகவலுடன் வதந்திகளும் பரப்பப்பட்டு வருகின்றன. இவற்றைப் பற்றி தொடர்ந்து ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டு வருகிறது.

டெல்லியில் மாணவர்கள் ஆசாதி கோஷத்துடன் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றார்கள் என்று குறிப்பிட்டு வெளியான இந்த பதிவை ஆய்வு செய்தோம். வீடியோ காட்சிகளை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது நமக்கு இது தொடர்பான தகவல் கிடைக்கவில்லை.

வீடியோவில் எஸ்.எஃப்.ஐ மாணவர்கள் என்று கோஷம் வருவதால் டெல்லியில் எஸ்.எஃப்.ஐ மாணவர்கள் ஆசாதி கோஷம் எழுப்பியபடி விவசாயிகள் பேரணியில் பங்கேற்றார்களா என்று தேடினோம். அப்போது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் ஆசாதி கோஷத்துடன் பல முறை பேரணி, ஊர்வலம் நடத்தியது தொடர்பான வீடியோ நமக்கு கிடைத்தது. அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவில் கோஷம் எழுப்பும் பெண் இருக்கும் பல வீடியோக்கள் இருந்தன. அவருடைய பெயர் திப்சிதா தார் (Dipsita dhar) என்பது தெரியவந்தது. அவர் எஸ்.எஃப்.ஐ அமைப்பின் இணைச் செயலாளராக இருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

திப்சிதா தார், எஸ்.எஃப்.ஐ, ஆசாதி கோஷம், டெல்லி விவசாயிகள் பேரணி என பல்வேறு கீ வார்த்தைகளைக் கொண்டு தொடர்ந்து தேடினோம். அப்போது, இந்த வீடியோ 2018ம் ஆண்டு யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பது நமக்கு தெரியவந்தது. 

அதில், 2018ம் ஆண்டு டெல்லியில் நடந்த விவசாயிகள் பேரணியில் (கிசான் முக்தி மார்ச்) பங்கேற்பதற்காக டெல்லி பல்கலைக் கழகங்களில் இருந்து எஸ்.எஃப்.ஐ மாணவர்கள் பேரணியாகப் புறப்பட்டுச் சென்றனர்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வீடியோவை SFI CEC Social Media என்ற சேனல் 2019 டிசம்பர் 2ம் தேதி பதிவேற்றம் செய்திருந்தது.

அசல் பதிவைக் காண: YouTube 

இதே வீடியோவை சிறந்த கோஷம் என்று குறிப்பிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்ட யூடியூப் பக்கம் 2019 ஏப்ரல் 14ம் தேதி பதிவேற்றம் செய்திருந்தது.

2018ம் ஆண்டும் தற்போது நடைபெறுவது போல மிகப் பிரம்மாண்ட விவசாயிகள் பேரணி நடந்தது. இது தொடர்பாக தேடியபோது பல செய்திகள் நமக்கு கிடைத்தன. எஸ்.எஃப்.ஐ இந்த வீடியோவை 2018 டிசம்பர் 2ம் தேதி பதிவிட்டுள்ளது, அதே நேரத்தில் டெல்லியில் விவசாயிகள் பேரணியும் நடந்துள்ளது. எனவே, அப்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.

அசல் பதிவைக் காண: bbc.com I Archive

இதன் மூலம் 2018ம் ஆண்டு நடந்த விவசாயிகள் பேரணியில் பங்கேற்கச் சென்ற டெல்லி பல்கலைக் கழக மாணவர்களின் வீடியோவை தற்போது நடந்தது போன்று பதிவிட்டிருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2018ம் ஆண்டு நடந்த விவசாயிகள் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து எஸ்.எஃப்.ஐ மாணவர் அமைப்பு மேற்கொண்ட பேரணி வீடியோவை தற்போது நடந்தது போல வெளியிட்டிருப்பது தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:விவசாயிகள் போராட்டத்தில் ஆசாதி கோஷமிட்ட மாணவர்கள்- உண்மை என்ன?

Fact Check By: Chendur Pandian 

Result: False