
டெல்லியில் வாக்கு திருட்டுக்கு எதிராக கண்டன காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட சூழலில், காங்கிரஸ் கட்சிக்கு கூடிய கூட்டம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
மைதானம் முழுக்க மக்கள் கூடியிருக்கும் புகைப்படம் ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “காங்கிரஸ் எங்கே… காங்கிரஸ் இனி அவ்வளவு தான்… காங்கிரஸ் இல்லாத இந்தியா… என்று கூறியவர்களுக்கு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
டெல்லியில் 2025 டிசம்பர் 14ம் தேதி வாக்குத் திருட்டுக்கு எதிராக ராம் லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில், டிசம்பர் 15ம் தேதி காங்கிரஸ் கட்சி எங்கே என்று கேட்டவர்களுக்கான பதில் என்று மைதானம் முழுக்க மக்கள் கூடியிருந்த புகைப்படம் ஒன்றை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.
நேரடியாக இது டெல்லியில் காங்கிரஸ் கட்சி நடத்திய பேராட்டத்தின் போது எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால், போராட்டம் நடந்து முடிந்த சூழலில் இந்த பதிவு வெளியாகி இருப்பது மறைமுகமாக டெல்லி போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2019ம் ஆண்டிலிருந்து இந்த புகைப்படம் செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. இதே புகைப்படத்தை 2021ம் ஆண்டு காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து ஏற்பாடு செய்திருந்த பேரணி என்று குறிப்பிட்டு ஒருவர் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது.

உண்மைப் பதிவைக் காண: peoplesdemocracy.in I Archive
2019ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி வெளியாகி இருந்த பதிவு ஒன்றில் மேற்கு வங்கம் கொல்கத்தாவின் பிரிட்ஜ் மைதானத்தில் இடதுசாரி கூட்டணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் தேடிய போது, பிப்ரவரி 3, 2019ம் ஆண்டு கொல்கத்தாவில் இடதுசாரிகள் சார்பில் பேரணி நடந்ததாகப் பல செய்திகள் நமக்குக் கிடைத்தன. பிரபல புகைப்படங்கள் விற்பனை தளமான alamy.com-ல் கூட இந்த புகைப்படம் வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது. அதிலும் இடதுசாரிகள் நடத்திய பேரணி என்றே குறிப்பிட்டிருந்தனர்.

உண்மைப் பதிவைக் காண: alamy.com I Archive
இதன் மூலம் காங்கிரஸ் கட்சி நடத்திய பேரணியில் கூடிய மக்கள் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதியாகிறது. இந்த புகைப்படத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு கம்யூனிஸ்ட் ஆதரவு அமைப்புகள் நடத்திய பேரணியின் புகைப்படத்தை காங்கிரஸ் கட்சியின் கூட்டம் போல தவறாக பகிரப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
2019ம் ஆண்டு கொல்கத்தாவில் இடதுசாரிகள் நடத்திய பேரணியின் புகைப்படத்தை காங்கிரஸ் கட்சிக்கு கூடிய மக்கள் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:காங்கிரஸ் கட்சிக்கு கூடிய கூட்டம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False


