
சந்திரயான் 3 வெற்றிக்கு பெரிதும் உதவியர்களுக்கு நன்றி – பாராட்டு விழா புகைப்படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ராமர், லட்சுமணன் போன்று வேடம் அணிந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பூஜை செய்யும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சந்திரயான் வெற்றிக்கு பெரிதும் உதவியவர்களுக்கு நன்றி பாராட்டு விழா…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை கருத்தானாந்த சுவாமிகள் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஆகஸ்ட் 27ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த புகைப்படம் மற்றும் தகவலை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சில ஆண்டுகளுக்கு முன்பு நவராத்திரி விழாவின் போது ராமர் – லட்சுமணன் போன்று வேடம் அணிந்தவர்களைப் பிரதமர் நரேந்திர மோடி பூஜை செய்து வணங்கினார். அந்த படத்தை இப்போது சந்திரயான் 3 வெற்றியுடன் தொடர்புப்படுத்தி பலரும் பகிர்ந்து வருகின்றனர். நையாண்டிக்காக இப்படி பகிர்கின்றார்களா அல்லது வேண்டுமென்றே வதந்தி பரப்பும் நோக்கத்திற்காக இப்படி செய்கிறார்களா என்று தெரியவில்லை. இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்று அறிய ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: abplive.com I Archive
இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். அப்போது 2017ம் ஆண்டு இந்த புகைப்படத்தை அனைத்து ஊடகங்களும் வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அதில், தசரா விழாவின் போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஊடகங்கள் மட்டுமின்றி பிஐபி எனப்படும் அரசு ஊடக நிறுவனமும் கூட இந்த நிகழ்வின் படத்தை தன்னுடைய எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டிருந்தது. அதில் விஜயதசமி விழாவில் பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியின் வீடியோவை தேடினோம். பிரதமர் மோடியின் யூடியூப் பக்கத்திலும் கூட அது பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. வீடியோவின் 11.10வது நிமிடத்தில் பிரதமர் மோடி பூஜை செய்ய வரும் பகுதிகள் தொடங்குகின்றன.
இவை எல்லாம் இந்த புகைப்படம் சந்திரயான் 3 வெற்றி விழாவின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பதை உறுதி செய்கின்றன. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
சந்திரயான் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் ராமர், லட்சுமணன் வேடம் அணிந்தவர்களுக்கு பூஜை செய்த பிரதமர் மோடிஎன்று பரவும் பதிவு தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:‘சந்திரயான் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்குப் பாராட்டு விழா’ என்று பரவும் விஷமம்!
Written By: Chendur PandianResult: False
