பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைந்துவிட்டார் என்று கண்ணீர் அஞ்சலி பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Lata 2.png
Facebook LinkArchived Link

லதா மங்கேஷ்கர் படத்துடன் கண்ணீர் அஞ்சலி போட்டோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "#லதா_மங்கேஷ்கர்- பாடலால் பிரபஞ்சத்தை வசப்படுத்திய குயில்_பறந்து விட்டது !!! குயில் பாடல்கள் இங்கே சாகா_வரத்துடன் !!" என்று ரைமிங்காக பதிவிட்டுள்ளனர்.

இந்த பதிவை ஜீவா என்பவர் 2019 நவம்பர் 15ம் தேதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.

உண்மை அறிவோம்:

தலைவர்கள், பிரபலங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலே அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி பதிவுகள் சமூக ஊடகங்களில் வெளியாகிவிடுகிறது. இதைப் போன்ற பதிவுதான் லதா மங்கேஷ்கர் விவகாரத்திலும் நடந்துள்ளது. பிரபல பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த நவம்பர் 11ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் வெளியானதும் பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனைகள், விருப்பத்தை தெரிவித்தனர். ஆனால், சிலரே அவர் மறைந்துவிட்டார் என்று கூறி இரங்கல் பதிவை வெளியிட்டனர்.

இதனால், லதா மங்கேஷ்கர் குடும்பத்தினர் அதிகாரப்பூர்வ பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டனர். அதில், "லதா மங்கேஷ்கர் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அனைவரின் பிரார்த்தனைக்கும் நன்றி. அவர் விரைவில் முழு நலம் பெற்று வீடு திரும்புவார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். எங்களின் தனிமை சுதந்திரத்துக்கு மதிப்பளித்த அனைவருக்கும் நன்றி" என்று குறிப்பிட்டிருந்தனர்.

timesofindia.indiatimes.comArchived Link 1
indiatoday.inArchived Link 2

நவம்பர் 14ம் தேதி லதா மங்கேஷ்கர் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், அவர் நலமாக உள்ளார் என்று பதிவிட்டிருந்தனர். இந்த நிலையில் நவம்பர் 15ம் தேதி அவர் மறைந்துவிட்டார் என்று சமூக ஊடகங்களில் மீண்டும் வதந்தி பரவியுள்ளது.

Archived Link

நவம்பர் 11ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் டிசம்பர் 8ம் தேதி வீடு திரும்பிவிட்டார். இது குறித்து டிசம்பர் 8ம் தேதி ட்விட்டர் பக்கத்தில் லதா மங்கேஷ்கர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வணக்கம், கடந்த 28 நாட்களாக நான் ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் இருந்தேன். எனக்கு நிமோனியா பாதிப்பு இருந்ததாக கண்டறிந்தனர். முற்றிலும் நலமான பிறகே வீடு திரும்புவது சரியாக இருக்கும் என்று கருதிய டாக்டர்கள் என்னை நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்க வைத்தனர்.

இன்று, மை மற்றும் பாபாவின் ஆசிர்வாதத்தால் நான் என்னுடைய வீட்டுக்கு திரும்பியுள்ளேன். என்னுடைய நலம்விரும்பிகள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்கள் வேலை செய்துள்ளது உங்கள் ஒவ்வொருக்கும் என்னுடைய தாழ்மையான வணக்கங்கள். ப்ரீச் கேண்டி மருத்துவர்கள் ஒவ்வொருவரும் என்னுடைய பாதுகாவல் தேவதூதர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு என்றென்றைக்கும் கடமைப்பட்டவளாக உள்ளேன். நன்றி” என்று கூறியுள்ளார். இது தொடர்பான செய்திகளும் நமக்கு கிடைத்தன.

Archived Link 1NDTVArchived Link 2

லதா மங்கேஷ்கர் அனைவராலும் விரும்பப்படும் நபர்தான்… அதற்காக, தகவலை முந்தித் தருகிறேன் என்று ஒருவரின் உயிரோடு விளையாடும் வகையில் பதிவிடுவதை தவிர்ப்பது அவருக்கு நாம் அளிக்கும் மரியாதையாக இருக்கும்.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:லதா மங்கேஷ்கருக்கு கண்ணீர் அஞ்சலி பதிவிட்ட ஃபேஸ்புக் பதிவர்கள்!

Fact Check By: Chendur Pandian

Result: False