பொள்ளாச்சியில் மாணவியை மிரட்டி ஆபாச படம் எடுத்த நாம் தமிழர் கட்சியினர்? – ஃபேஸ்புக்கில் பரவும் பகீர் செய்தி!
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவியை மிரட்டி நாம் தமிழர் கட்சியினர் ஆபாச படம் எடுத்ததாகவும், அவர்களுக்கு பொது மக்கள் தர்ம அடி கொடுத்ததாகவும் ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
பிப்ரவரி 26, 2019 தேதியிட்ட நியூஸ் 18 தமிழ்நாடு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், இரண்டுபேரை காவலர் ஒருவர் அழைத்துச் செல்வது போன்ற படம் உள்ளது. அதில், “பொள்ளாச்சியில் கல்லூரி மாணவியை மிரட்டி வலுக்கட்டாயமாக ஆபாசப் படம் எடுத்த நாம் தமிழர் கட்சியினர்! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!” என்று இருந்தது.
இந்த பதிவை, R Parameshwar என்பவர் ஜூலை 19, 2019 அன்று வெளியிட்டுள்ளார்.
நிலைத்தகவலில், “வருஷம் முழுக்க கற்பழிப்பு தான் நம்ம நாய் டம்ளர் தும்பிகளுக்கு.. தலைவன் சாமான் பெரிய இடமா பார்த்து விஜயலக்ஷ்மி, மலேஷியா பொண்ணுங்கன்னு கற்பழிப்பான். தொண்டனுங்க ஸ்கூல் புள்ளைங்க கால்லேஜ் புள்ளைங்கன்னு கற்பழிப்பாய்ங்க. கேட்டா டமிலன் டா கத்திட்டு ஓடிடுவாய்ங்க” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இது உண்மை என்று நம்பி அந்தக் கட்சியினரைத் திட்டி வருகின்றனர். பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
படத்தில் இருப்பவர்கள் பொள்ளாச்சியில் ஏராளமான இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து பணம் பறித்த கும்பலைச் சேர்ந்தவர்கள் போல் இருந்தனர். அவர்களுக்கு அ.தி.மு.க நிர்வாகிகள் ஆதரவு இருப்பதாக அப்போதே எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இது தொடர்பாக விகடன் வெளியிட்ட செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
ஆனால், நியூஸ் கார்டு பார்க்க உண்மையானது போல் இருந்தது. இதனால், இது வேறு சம்பவமா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
முதலில், படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இவர்கள் பொள்ளாச்சியில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த கும்பலை சேர்ந்தவர்கள்தான் என்பது உறுதியானது.
மேற்கண்ட பதிவில் இருந்த படம், புதிய தலைமுறை வெளியிட்ட வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டது போல தெரிந்தது.
நியூஸ் கார்டின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். 2019 பிப்ரவரி 26ம் தேதி நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்ட நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். அப்போது மேற்கண்ட பதிவில் இருப்பது போன்று எந்த ஒரு நியூஸ் கார்டையும் நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிடவில்லை என்பது தெரிந்தது.
அதேநேரத்தில், பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக பிப்ரவரி 26ம் தேதி க்ரைம் டைம் என்ற நிகழ்ச்சியில் செய்தி வெளியாக உள்ள அறிவிப்பு ஒன்று கிடைத்தது.
அதேபோல், வைகோ தொடர்பாக சமூக ஊடகங்களில் நியூஸ் 18 தமிழ்நாடு பெயரில் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்ற அறிவிப்பும் கிடைத்தது.
பிப்ரவரி 26ம் தேதி நியூஸ் 18 தமிழ்நாடு-ல் வெளியான பொள்ளாச்சி குற்றவாளிகள் தொடர்பான க்ரைம் டைம் செய்தியை ஆய்வு செய்தோம். அதில் எந்த இடத்திலும் கைது செய்யப்பட்டவர்கள் நாம் தமிழர் கட்சியினர் என்று குறிப்பிடவில்லை. வேறு ஒரு அரசியல் கட்சியினர் மீதுதான் பலரும் குற்றம்சாட்டியிருந்தனர். ஆளுங்கட்சி என்பதால் போலீசார் வழக்கு விசாரணைக்கு அவர்களை உட்படுத்தவில்லை என்றும், தவறினால் அவர்கள் படத்தை போஸ்டர் அடித்து ஒட்டுவோம் என்றும் தெரிவித்திருந்தனர். எந்த இடத்திலும் நாம் தமிழர் கட்சியானாருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு என்று இல்லை.
நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிடும் நியூஸ் கார்டையும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டையும் ஒப்பிட்டோம். இரண்டிலும் ஃபாண்ட் வேறுபாடு இருந்தது.
நியூஸ் 18 தமிழ்நாடு வாட்டர்மார்க் லோகோ மையப் பகுதியில் இல்லாமல் சற்று கீழே இருந்தது. உண்மையான கார்டில், நியூஸ் 18 தமிழ்நாடு என்ற கருப்பு வெள்ளை நிறத்தில் இருக்கிறது. லோகோவில், தமிழ்நாடு என்ற பகுதியில் பின்னணி நிறம் இருக்காது. ஆனால், போலி கார்டில் ‘தமிழ்நாடு’ பகுதியின் பின்னணியில் சிவப்பு நிறம் இருந்தது. இதன் மூலம் இது போலியாக உருவாக்கப்பட்டது என்பது உறுதியானது.
நம்முடைய ஆய்வில்,
படத்தில் இருக்கும் நபர்கள் பொள்ளாச்சி பாலியல் அத்துமீறல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பது உறுதியாகி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆளும் கட்சியினர் மீது குற்றம்சாட்டும் நியூஸ் 18 வெளியிட்ட வீடியோ கிடைத்துள்ளது.
இவர்கள் நாம் தமிழர் கட்சியினர் என்பதற்கு ஆதாரம் இல்லை.
இந்த நியூஸ் கார்டை நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பொய்யானது விஷமத்தனமானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Title:பொள்ளாச்சியில் மாணவியை மிரட்டி ஆபாச படம் எடுத்த நாம் தமிழர் கட்சியினர்? – ஃபேஸ்புக்கில் பரவும் பகீர் செய்தி!
Fact Check By: Chendur PandianResult: False