FACT CHECK: யோகி ஆதித்யநாத் மீது 2021 டிசம்பரில் நடந்த தாக்குதலை ஊடகங்கள் மறைத்தனவா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்ற வாகனத்தை பொது மக்கள் தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டதாகவும் அந்த செய்தியை ஊடகங்கள் மறைத்துவிட்டதாகவும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

வாகன அணிவகுப்பை சிலர் தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்துகின்றனர். கல்லூரி வாசல் போன்று காட்சியளிக்கும் இடத்தில் மாணவிகள் போல தோற்றம் அளிக்கும் சிலர் போராட்டம் நடத்துகின்றனர். 

நிலைத் தகவலில், “பிரேக்கிங் நியூஸ்:- உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது இன்று பகிரங்க தாக்குதல். இதை எந்த டிவி சேனலும் காட்டவில்லை. 

Breaking News:- Open attack on UP CM Yogi Adityanath today. No TV channel has shown it” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த பதிவை இந்த நாடு எங்கே போகிறது? என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 டிசம்பர் 18ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உத்தரப்பிரதேச முதல்வர் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பதிவிடப்பட்டுள்ளது. எதற்காக, எங்கு, எப்போது நடந்தது என்று குறிப்பிடவில்லை. “இன்று” நடந்தது என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் 2021 டிசம்பரில் இந்த சம்பவம் நடந்ததாக புரிந்துகொள்ள முடிகிறது.

2022ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பல்வேறு வளர்ச்சிப் பணிகளை திறந்து வைக்கும் பணியில் அம்மாநில முதல்வர் யோகி ஆதத்யநாத் ஈடுபட்டுள்ளார். அவருக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது போன்ற தோற்றத்தை இந்த பதிவு ஏற்படுத்துகிறது. எனவே, இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்ற வாகனத்தை மாணவர்கள் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தியது உண்மைதான் என்று தெரிந்தது. ஆனால், இந்த சம்பவர் 2021ல் நடைபெறவில்லை, 2017ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடந்தது என்று செய்திகள் பல நமக்குக் கிடைத்தன.

அசல் பதிவைக் காண: indianexpress.com I Archive 1 I hindustantimes.com I Archive 2 I abplive.com I Archive 3

இந்தியன் எக்ஸ்பிரஸ் 2017ம் ஆண்டு வெளியிட்ட செய்தியில் இந்த வீடியோவும் இருந்தது. அதில் லக்னோ பல்கலைக்கழகத்தில் படிக்கும் சமாஜ்வாடி கட்சியைச் சார்ந்த மாணவர்கள் யோகி ஆதித்யநாத் வாகன அணிவகுப்பை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தியதாக குறிப்பிட்டிருந்தனர். 

இந்தியன் எக்ஸ்பிரஸ் மட்டுமின்றி 2017ம் ஆண்டு இது தொடர்பாக முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பதையும் காண முடிந்தது.

யோகி ஆதித்யநாத் வாகனத்தைப் பல்கலைக் கழக மாணவர்கள் 2017ம் ஆண்டு முற்றுகையிட்ட சம்பவத்தின் வீடியோவை 2021ம் ஆண்டில் பதிவிட்டு, இந்த செய்தியை ஊடகங்கள் மறைத்துவிட்டன என்று விஷமத்தனமாக வதந்தி பரப்பியிருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு உண்மையுடன் தவறான தகவலும் கலந்தது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

யோகி ஆதித்யநாத் வாகனத்தை பொது மக்கள் தாக்கியதாக பகிரப்படும் வீடியோ 2021ல் எடுக்கப்பட்டது இல்லை என்பதையும் அதை ஊடகங்கள் மறைக்கவில்லை என்பதையும் தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:யோகி ஆதித்யநாத் மீது 2021 டிசம்பரில் நடந்த தாக்குதலை ஊடகங்கள் மறைத்தனவா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply