தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் புதிய காரில் செல்ல, பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு பயணிக்க பஸ்ஸில் கால் வைக்கக் கூட இடமில்லை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் இப்போது எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் காரில் ஏறும் புகைப்படம் மற்றும் மாணவர்கள் பஸ்ஸில் தொங்கிக்கொண்டு செல்லும் புகைப்படத்தை சேர்த்து பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "புதிய மாடல் Innova காரில் மந்திரி, கால் வைக்க கூட இடம் இல்லாமல் மக்கள்... வாழ்க #திராவிட_மாடல்!' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த படத்தை கோவை மனோஜ் என்ற ஃபேஸ்புக் ஐடியைக் கொண்டவர் 2023 ஆகஸ்ட் 9ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த பதிவை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அமைச்சர் புதிய காரில் செல்வது மிகப்பெரிய குற்றம் போல பதிவிடப்பட்டுள்ளது. நாட்டில் எல்லோருக்கும் எல்லாம் கிடைத்துவிடவில்லை. அதை வைத்து அவருக்கு கிடைக்கவில்லை ஆனால் அமைச்சர், முதலமைச்சர், பிரமருக்கு இந்த வசதி தேவையா என்று எல்லாம் பதிவிட்டுக்கொண்டிருந்தால் தேவையற்ற பிரச்னைகள்தான் எழும்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் புதிய காரில் செல்கிறார், ஆனால் மாணவர்களுக்கு பஸ்ஸில் இடம் இல்லை என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர். எல்லா ஆட்சிக் காலத்திலும் மாணவர்கள், பொது மக்கள் பஸ்ஸில் இடம் இல்லாமல் தொங்கிக்கொண்டுதான் செல்கின்றனர். தங்கள் ஆட்சிக் காலத்தில் மாணவர்கள் எல்லாம் பஸ்ஸில் அமர்ந்து பயணித்தது போன்று அ.தி.மு.க-வினர் பலரும் இதை பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இந்த புகைப்படத்தை பல ஆண்டுகளாக பார்த்து வருகிறோம். எனவே, இந்த புகைப்படம் தற்போது எடுக்கப்பட்ட என்று மட்டும் ஆய்வு செய்தோம்.

புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். 2016ம் ஆண்டிலிருந்து இந்த புகைப்படம் சமூக, செய்தி ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது.

உண்மைப் பதிவைக் காண: dtnext.in I Archive

2016ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி இந்த புகைப்படத்துடன் dtnext.in செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. படம் தொடர்பான குறிப்பில், "தரமணி அருகே மாணவர்கள் பஸ்ஸில் படியில் தொங்கிக்கொண்டு (ஃபுட்போர்ட்) பயணம் செய்தனர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 2017ம் ஆண்டில் இதே படத்தை வேறு ஒரு ஊடகம் பயன்படுத்தியிருந்தது. இப்படி 2016ம் ஆண்டு தொடங்கி 2023 வரையிலும் இந்த படத்தை பலரும் செய்தி, சமூக ஊடகங்களில் பயன்படுத்தி வந்திருப்பதைக் காண முடிந்தது.

உண்மைப் பதிவைக் காண: behindwoods.com I Archive

இந்த புகைப்படம் முதன் முதலில் எப்போது எடுக்கப்பட்டது என்பதைக் கண்டறிய முடியவில்லை. 2016ம் ஆண்டு இந்த புகைப்படம் செய்திகளில் பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்போது தமிழ்நாட்டில் ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க தான் ஆட்சியிலிருந்தது. தங்கள் ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட படத்தை இப்போது அமைச்சர் காரில் செல்லும் படத்துடன் தொடர்புப்படுத்தி தவறாகப் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

திமுக ஆட்சியில் மாணவர்கள் பஸ்ஸில் இடமில்லாமல் தொங்கிக்கொண்டு செல்கிறார்கள் என்று பரவும் புகைப்படம் 2016ல் அதிமுக ஆட்சிக்காலத்தில் இருந்து செய்தி, சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு வந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:திமுக ஆட்சியில் மாணவர்கள் பஸ்ஸில் தொங்கும் அவலம் என்று பரவும் படம் தற்போது எடுக்கப்பட்டதா?

Written By: Chendur Pandian

Result: False