திருட்டு விசாவில் அமெரிக்க சென்றாரா மதுவந்தி?- உண்மை ஆராயாமல் பகிரப்படும் வதந்தி

சமூக ஊடகம் தமிழ் செய்திகள்

‘’திருட்டு விசாவில் அமெரிக்க சென்று பிடிபட்ட மதுவந்தி,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு வைரல் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

ஜூன் 10, 2020 அன்று வெளியிடப்பட்ட இந்த ஃபேஸ்புக் பதிவில், ஒய் ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி பற்றி Indiaglitz இணையதளம் வெளியிட்ட செய்தியின் லிங்கை இணைத்துள்ளனர். அத்துடன், 2019ம் ஆண்டு திருட்டு விசாவில் சிகாகோ சென்ற மதுவந்தியை அமெரிக்க அதிகாரிகள் பிடித்து கைது செய்து, உடனடியாக, இந்தியா அனுப்பி வைத்தனர் என்று தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இந்த ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதை உண்மை என்றே நாமும் முதலில் நம்பினோம். இருந்தாலும், சந்தேகத்தின் பேரில் ஆதாரத்திற்காக, இதில் இணைக்கப்பட்டுள்ள India glitz செய்தியின் லிங்கை கிளிக் செய்து படித்துப் பார்த்தோம். அதில், உள்ள தகவலோ வேறு விதமாக இருந்தது. 

Indiaglitz News Link Archived Link 

இதன்படி, கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி அமெரிக்கா சென்றிருக்கிறார். ஆனால், அங்கே அவரது விசா தொடர்பான ஆவணங்களை சரிபார்க்கும்போது சில குறைபாடுகள் உள்ளதாக தெரியவந்திருக்கிறது. இதன்பேரில், அவரை இந்தியாவிற்கே திருப்பி அனுப்பிவிட்டனர். அதேசமயம், அவர் திருட்டு விசாவில் அமெரிக்கா சென்று பிடிபட்டுவிட்டதாக, சமூக ஊடகங்களில் வதந்தி பரவியிருக்கிறது. இதன்பேரில், மதுவந்தி மறுப்பு தெரிவித்துள்ளார். விரைவில் தகுந்த ஆவணங்களை எடுத்துக் கொண்டு மீண்டும் அமெரிக்கா செல்ல மதுவந்தி தயாராகி வருவதாக, Indiaglitz செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, தன்னைப் பற்றி பரவிய திருட்டு விசா தகவலை மறுத்து ஊடகங்களுக்கு மதுவந்தி விளக்கம் அளித்திருக்கிறார். இதனையே Indiaglitz ஊடகமும் செய்தியாக வெளியிட்டுள்ளது.

ஆனால், நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவிலோ, Indiaglitz வெளியிட்ட செய்தியை தவறாக புரிந்துகொண்டு, மதுவந்தி திருட்டு விசாவில் அமெரிக்கா சென்று பிடிபட்டார் என்று அரைகுறையாக தகவல் பகிர்ந்துள்ளனர். 

இந்த பதிவின் கமெண்டிலேயே சிலர், ‘’விசா தொடர்பான சரிபார்ப்பு ஆவணங்கள், டெபாசிட் தொகை உள்ளிட்டவற்றில் ஏதேனும் குறைபாடு இருந்திருக்கலாம். அதனால், மதுவந்தியை திருப்பி அனுப்பியிருப்பார்கள். திருட்டு விசாவில் அமெரிக்கா செல்ல முடியாது,’’ என்றும் குறிப்பிட்டுள்ளதைக் காண முடிகிறது.  

இந்த விசயத்தில் தொடர்புடைய மதுவந்தி ஏற்கனவே இதுபற்றி ஊடகங்களுக்கு விளக்கம் அளித்திருக்கிறார். விசா தொடர்பான Supporting documents குறைபாடாக இருந்தது என்றும், விரைவில் புதியதாக விசாவிற்கு விண்ணப்பித்து அமெரிக்கா செல்வேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது புரியாமல் அவர் திருட்டு விசா தயாரித்ததாக, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் குற்றம்சாட்டியுள்ளனர். ஒருவர் விரும்பினால் திருட்டு பாஸ்போர்ட் வேண்டுமானால் தயாரிக்கலாம். அதற்கான சாத்தியங்கள் உண்டு; திருட்டு விசா தயாரிக்க வாய்ப்பில்லை. காரணம், விசா வழங்கும் பொறுப்பு முழுக்க நாம் எந்த நாடு செல்கிறோமோ அந்த நாட்டின் வசம் உள்ளது. சில நாடுகள் ஆன்லைன் வழியாகவும், சில நாடுகள் நாம் அங்கே சென்று சேர்ந்த பிறகு நேரடியாகவும், சில நாடுகள் நேர்முகத் தேர்வு நடத்திய பிறகும் விசா வழங்குகின்றன.

அதிலும் குறிப்பாக, அமெரிக்கா செல்ல நாம் விசா பெற வேண்டுமெனில், அதற்கு கடுமையான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதுபற்றி விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும். மதுவந்தி மட்டுமல்ல, ஷாரூக்கான் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் அமெரிக்கா சென்றபோது விசா ஆவணங்கள் சரிபார்ப்பில் நிறைய இடையூறுகளை சந்தித்திருக்கிறார்கள். இதெல்லாம் கடந்த காலத்தில் வெளியான செய்திகள்.

தவிர விசா குறைபாடுகள் தொடர்பாக அமெரிக்கா கூறும் விசயங்களை அறிய விரும்பினால் இங்கே கிளிக் செய்யவும். 

இதுவரை நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவரும் உண்மையின் விவரம்,

1) மதுவந்தி திருட்டு விசாவில் அமெரிக்கா சென்றதாக 2019ம் ஆண்டு சமூக ஊடகங்களில் தகவல் பரவியிருக்கிறது. இதனை உடனடியாக, அவர் மறுத்து, உரிய விளக்கமும் அளித்துள்ளார்.

2) மதுவந்தியின் விளக்கத்தை Indiaglitz ஊடகம் செய்தியாக வெளியிட்டுள்ளது. அந்த செய்தியை தவறாகப் புரிந்துகொண்டு, நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் ஆதாரத்திற்காக இணைத்ததோடு, கூடுதலாக தவறான குற்றச்சாட்டையும் பகிர்ந்துள்ளனர்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் நம்பகத்தன்மை இல்லை என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:திருட்டு விசாவில் அமெரிக்க சென்றாரா மதுவந்தி?- உண்மை ஆராயாமல் பகிரப்படும் வதந்தி

Fact Check By: Pankaj Iyer 

Result: Partly False