தைவானுக்கு அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி விமானப் படை பாதுகாப்புடன் சென்ற வீடியோவா இது?

சமூக ஊடகம் | Social சமூகம் சர்வதேசம் | International

தைவானுக்கு அமெரிக்காவின் சபாநாயகர் நான்சி பெலோசி வந்த போது, அவரை மிகவும் பாதுகாப்பாக அழைத்துச் சென்ற காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

கடலில் போர் கப்பல்கள் அணிவகுத்து நிற்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. கப்பலில் இருந்து வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. வானில் ஒரு விமானத்தை ராணுவ விமானங்கள் மிகவும் பாதுகாப்பாக அழைத்து செல்வது போல காட்சிகள் இருந்தன. 

நிலைத் தகவலில், தைவானில் அமெரிக்க ஏர் ஃபோர்ஸ் ஒன் வருகை, அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி. 20 போர் விமானங்கள் நான்சி பெலோசியின் விமானத்தை அமெரிக்க போர் விமானங்கள் உட்பட அழைத்துச் சென்றன. நான்சி பெலோசியை ஏற்றிச் செல்லும் விமானத்தில் சீனத் தலையீடு ஏதேனும் ஏற்பட்டால் துப்பாக்கிச் சூடு நடத்த அமெரிக்க விமானப்படைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தைவான் வான்வெளிக்குள் நுழைந்தால் விமானத்தை சுட்டு வீழ்த்துவோம் என்று சீனாவின் பகிரங்க அச்சுறுத்தலை மீறி தைவானில் அமெரிக்க விமானப்படை விமானத்தை தரையிறக்கியதன் மூலம் ஷி ஜின்பிங்கின் முகத்தில் இராணுவம் நேரடியாக துப்பியது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வீடியோ பதிவை Saravanaprasad B என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 ஆகஸ்ட் 3ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோ மற்றும் தகவலை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு சென்றதிலிருந்து சீனா – தைவானிடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு சென்ற காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. 

அமெரிக்காவின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் வந்த அமெரிக்க சபாநாயகருக்கு கடற்படை மற்றும் விமானப்படை பாதுகாப்பு அளிப்பது போலவும், ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை 10க்கும் மேற்பட்ட ராணுவ விமானங்கள் பாதுகாப்பாக அழைத்து சென்றது போலவும் வீடியோ உள்ளது. இந்த வீடியோ உண்மையில் நான்சி பெலோசி தைவானுக்கு வந்த காட்சி தானா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: YouTube

வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ 2021ம் ஆண்டிலேயே சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. நான்சி பெலோசி தைவானுக்கு ஆகஸ்ட் 2, 2022 அன்று தான் சென்றார். ஆனால் நமக்குக் கிடைத்த யூடியூப் வீடியோ 2021 ஏப்ரலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

அந்த வீடியோவில் அமெரிக்க கடற்படை போர் கப்பல்கள் மேற்கு பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் சுற்றி வருகின்றன என்ற வகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், தெற்கு சீன கடலில் அமெரிக்கா – பிலிப்பைன்ஸ் போர்ப் பயிற்சி என்றும் சிலர் குறிப்பிட்டு இந்த வீடியோவை பகிர்ந்திருந்தனர்.

2021 ஏப்ரல் மாதமே இந்த வீடியோ பகிரப்பட்டிருப்பதன் மூலம், இது 2022 ஆகஸ்ட் 2ம் தேதி அமெரிக்க சபாநாயகர் நான்சி வந்த விமானத்தின் காட்சியாக இருக்க முடியாது என்பது தெளிவாகிறது. இந்த ஆதாரத்தின் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தைவானுக்கு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் மிகவும் பாதுகாப்பாக வந்த காட்சி என்று பரவும் வீடியோ அமெரிக்க – பிலிப்பைன் போர் ஒத்திகையின் போது எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தைவானுக்கு அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி விமானப் படை பாதுகாப்புடன் சென்ற வீடியோவா இது?

Fact Check By: Chendur Pandian 

Result: False