காமன்வெல்த் போட்டியில் இதுவரை இல்லாத அளவில் இந்தியா அதிக வெற்றி பெற்றதா?

அரசியல் இந்தியா விளையாட்டு

காமன்வெல்த் போட்டியில் இதுவரை இல்லாத வகையில் வீரர்கள் அதிக அளவில் பதக்கம் வென்றதாகவும் அதற்கு மோடி தலைமையிலான அரசே காரணம் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

காமன்வெல்த் போட்டியில் பிரதமர் மோடியின் நடவடிக்கையால்தான் இந்தியா நான்காவது இடத்தை பிடித்து என்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். 2022 காமன்வெல்த் போட்டியின் பதக்கப் பட்டியலுடன் இந்த பதிவை பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

Archive

BJP Erode South District என்ற ட்விட்டர் ஐடி-யில் 2022 ஆகஸ்ட் 9ம் தேதி வெளியிட்டிருந்த பதிவில், “காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஐந்தாவது இடத்தில் இருந்து பதக்க பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியது இந்தியா. இதுவரை இந்தியா பெறாத இடம் காரணம் தற்போது திறமையான வீரர்களை தேடி அவர்களை இங்கு அனுப்பிய  நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான பாஜக அரசு. அரசியல் தலையீடு இல்லாமல் திறமையை மட்டுமே நம்பியதால் உலக அரங்கில் இந்தியா தலை நிமிர்கிறது. தேசிய மாடல்” என்று குறிப்பிட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

Arun Kumar Kumar Arani என்பவர் வெளியிட்டிருந்த பதிவில், “இத்தனை காலமாக பதக்க பட்டியலில் இந்தியா கீழிருந்து எத்தனையாவது இடத்தில் இருக்கிறது என்று பார்த்திருப்போம் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களின் முயற்சியால் பதக்க பட்டியலில் இந்தியா தற்போது நான்காம் இடத்திற்கு முன்னேறி உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார். 

இவர்களைப் போல பலரும் மோடி ஆட்சியால்தான் இந்தியா நான்காவது இடத்தை பிடித்தது என்று குறிப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

நடந்து முடிந்த காமன்வெல்த் 2022 போட்டியில் இந்தியா 22 தங்கப் பதக்கங்களுடன் நான்காவது இடத்தை பிடித்தது. முன்பு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் காமன்வெல்த் போட்டியில் ஊழல் நடந்தது என்றும், பதக்கங்கள் பெற முடியவில்லை என்றும், ஆனால் தற்போது மோடி ஆட்சியில் இந்தியா பதக்கங்களை குவித்துள்ளது என்றும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: results.gc2018.com I Archive

உண்மையில் இந்தியா காமன்வெல்த் போட்டி பதக்க பட்டியலில் முதன் முறையாக முன்னேறியுள்ளதா என்று பார்த்தோம். கடைசியாக நடந்த 2018 போட்டியில் இந்தியா 26 தங்கப் பதக்கங்களுடன் 3வது இடத்தை பிடித்திருந்தது தெரிந்தது. 2014ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா 15 தங்க பதக்கங்களுடன் 5வது இடத்தை பிடித்திருந்தது. அதற்கு முன்பு 2010ம் ஆண்டு இந்தியாவில் காமன்வெல்த் போட்டி நடந்த போது, 38 தங்கப் பதக்கங்களுடன் 2வது இடத்தை பிடித்திருந்தது தெரிந்தது. அதற்கு முன்பு 2006ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் கூட இந்தியா 22 தங்கப்பதக்கம் வென்று நான்காவது இடத்தைப் பிடித்திருப்பது தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: d2010results I Archive

நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில் இதற்கு முன்பு நடந்த போட்டிகளிலும் கூட இதே போன்று வெற்றியை இந்தியா பதிவு செய்திருப்பதை காண முடிகிறது. இதன் மூலம் பிரதமர் மோடி ஆட்சியில் விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்ததால்தான் இந்தியா அதிக பதக்கங்கள் பெற்று முதன் முறையாக டாப் 5க்குள் வந்துள்ளது, பதக்கப் பட்டியலில் முன்னிலை பிடித்துள்ளது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பிரதமர் மோடி விளையாட்டுத் துறையில் காட்டிய ஆர்வம் ஒத்துழைப்பு காரணமாகத்தான் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவால் நான்காவது இடத்தை பிடிக்க முடிந்தது என்றும், முதன் முறையாக பதக்கப் பட்டியலில் டாப் 5க்குள் இந்தியா வந்துள்ளது என்றும் பரவும் பதிவுகள் தவறானவை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:காமன்வெல்த் போட்டியில் இதுவரை இல்லாத அளவில் இந்தியா அதிக வெற்றி பெற்றதா?

Fact Check By: Chendur Pandian 

Result: Misleading