
விமான விபத்திற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
விமான சிப்பந்திகள் விமானநிலையத்தில் நடந்து வரும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விமான விபத்தில் உயிரிழந்த பணியாளர் ஒருவரால் விபத்துக்கு ஒரு சில நிமிடங்கள் முன் எடுக்கப்பட்ட மனதை உருக்கும் காணொளி..! அடுத்த நிமிடம் நிச்சயமில்லாத வாழ்க்கை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அகமதாபாத்திலிருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் தரையில் விழுந்து வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் விமான சிப்பந்திகள், பயணிகள் மற்றும் மருத்துவக் கல்லூரி விடுதியிலிருந்தவர்கள் என 265 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விமானப் பணியாளர்கள் கடைசியாக எடுத்த வீடியோ என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்துவிட்டது, அப்படி இருக்கையில் எப்படி இந்த வீடியோவை விமானப் பணியாளர்கள் பதிவேற்றியிருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. ஒரு சில நிமிடங்களில் எடிட் செய்து வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றியிருக்க வாய்ப்பில்லை என்பதால் இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.
உண்மைப் பதிவைக் காண: bhaskarenglish.in I Archive I timesofindia I Archive
முதலில் விபத்தில் உயிரிழந்த விமானப் பணியாளர்கள் இந்த வீடியோவில் உள்ளார்களா என்று பார்த்தோம். விமானத்தில் விமானிகள் உள்பட மொத்தம் 9 ஏர் இந்தியா சிப்பந்திகள் இருந்ததாகச் செய்திகள் கூறுகின்றன. அவர்களின் புகைப்படங்கள் செய்தி ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அந்த படத்தில் உள்ள யாரும் இந்த வீடியோவில் இல்லை. எனவே, இது பழைய வீடியோவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வீடியோவை ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, ஜூன் 9, 2025 அன்று அதாவது விமான விபத்து நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி இருப்பது தெரிந்தது. அதில், “ULH flight se phle ka motivation 🙏🏻” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ULH என்றால் என்ன என்று தேடிப் பார்த்த போது, அது சௌதி அரேபியாவில் உள்ள அல்-உலா (Al-Ula) சர்வதேச விமானநிலையத்தின் கோட் (Code) என்பது தெரியவந்தது.
உண்மைப் பதிவைக் காண: instagram.com I Archive
மேலும் அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதே போன்று வேறு சில வீடியோக்களும் இருந்தன. இந்த வீடியோவை முதலில் இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்த Yashasvi Sharma விடம் இந்த வீடியோ தொடர்பாக விளக்கம் பெற முயற்சி செய்துள்ளோம். ஆனால், அவரை நம்மால் தொடர்புகொள்ள முடியவில்லை. அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக சமூக ஊடகங்களில் பரவும் வதந்தி தொடர்பான தகவலை அளித்து அவரது விளக்கத்தைக் கேட்டுள்ளோம். அவர் நமக்குப் பதில் அளித்தால் அதை பகிர்கிறோம்.
விபத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்பு இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. விபத்தில் பலியான விமான பணியாளர்கள் யாருடைய தோற்றமும் இந்த வீடியோவில் உள்ளவர்களுடன் ஒத்துப்போகவில்லை. இவை எல்லாம் இந்த வீடியோ அகமதாபாத் விமான விபத்து நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்று பரவும் தகவல் தவறானது என்பதை உறுதி செய்கின்றன.
முடிவு:
விமான பணியாளர்கள் ஜூன் 9, 2025 அன்று வெளியிட்ட வீடியோவை அகமதாபாத் விமான விபத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:விமான விபத்திற்கு முன்பாக ஏர் இந்தியா பணியாளர்கள் எடுத்த வீடியோ இதுவா?
Fact Check By: Chendur PandianResult: False
