இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும் என்று யூதர்கள் வன்முறையில் ஈடுபட்டனரா?

Communal False சர்வதேசம் | International

ஈரான் உடனான போரை உடனே நிறுத்த வேண்டும் என்று இஸ்ரேல் நாட்டில் உள்ள யூதர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

வன்முறையாளர்கள் பலரும் சேர்ந்து போலீஸ் வாகனத்தைத் தாக்கி, அதை தலைகீழாகத் திருப்பிப் போடுவது, இருசக்கர வாகனத்தைத் தாக்கி தீவைத்து எரித்தது போன்ற காட்சிகள் கொண்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ISREL போர் நிறுத்தம் செய்ய வேண்டும் யூதர்கள் போராட்டம்…!!இஸ்ரேல் போலீஸ் தாக்குதல் வாகனம் தீக்கரை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இஸ்ரேல் மீது ஈரான் நடத்தி வரும் பதிலடி தாக்குதலில் இஸ்ரேலியர்கள் பாதிக்கப்பட்டதாகவும் இதனால் அவர்கள் போரை நிறுத்த போராடி வருவதாகவும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று யூதர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக ஒரு வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றி தேடினோம். அப்போது, இந்த வீடியோ 2026 பிப்ரவரி 16ம் தேதி சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. ஈரான் மீது இஸ்ரேல் -அமெரிக்கப் படைகள் பிப்ரவரி 28ம் தேதிதான் தாக்குதல் நடத்தின. அதைத் தொடர்ந்துதான் ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியது. ஆனால் தாக்குதலுக்குக் கிட்டத்தட்ட 14 நாட்களுக்கு முன்பு இந்த வீடியோ வெளியாகி இருப்பதன் மூலம் இது போரை நிறுத்த யூதர்கள் போராடிய சம்பவம் இல்லை என்பது தெளிவானது.

Archive

தொடர்ந்து இந்த வீடியோ தொடர்பாக தேடினோம். அப்போது தீவிர பழமைவாதம் பின்பற்றும் யூதர்கள் இருக்கும் பினி பிராக் (Bnei Brak) என்ற பகுதிக்கு சென்ற இரண்டு பெண் இஸ்ரேலிய ராணுவ வீரர்களை அந்த பழமைவாத யூதர்கள் தாக்கியதாகவும் அவர்களை இஸ்ரேல் போலீசார் பாதுகாப்பாக மீட்டதாகவும் செய்திகள் நமக்கு கிடைத்தன. 

உண்மைப் பதிவைக் காண: israelnationalnews.com I Archive

இஸ்ரேலில் தீவிர பழமைவாத யூதர்கள் உள்ளிட்ட ஒரு சிலரைத் தவிர்த்து அனைவருக்கும் கட்டாய ராணுவ சேவை உள்ளது. இந்த நிலையில் தீவிர பழமைவாதத்தைப் பின்பற்றும் யூதர்களுக்கும் கட்டாய ராணுவ சேவை என்று அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த யூதர்கள் வசிக்கும் பகுதிக்கு சமூக சேவை செய்யும் நோக்கில் இரண்டு இஸ்ரேலிய பெண் ராணுவ வீரர்கள் வந்துள்ளனர். 

இதைத் தவறாகப் புரிந்துகொண்ட அந்த யூதர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை இஸ்ரேல் பிரதமர் கண்டித்ததாகவும் கூட செய்திகள் நமக்கு கிடைத்தன. இவை எல்லாம் இந்த வீடியோ இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி யூதர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக பரவும் தகவல் தவறானது என்பதை உறுதி செய்தது.

முடிவு:

ஈரான் உடனான போரை இஸ்ரேல் உடனே நிறுத்த வேண்டும் என்று இஸ்ரேலில் உள்ள யூதர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக பரவும் வீடியோ தவறானது என்பதை ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Result Stamp

Title: இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும் என்று யூதர்கள் வன்முறையில் ஈடுபட்டனரா?

Fact Check By: Chendur Pandian

Result: False

Leave a Reply