
ஆரவல்லி மலைத் தொடரைக் காக்கப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாக செல்லும் நிகழ்வின் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் ஆங்கிலத்தில் SAVE SRAVALLI என்று எழுதப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “ஆரவல்லி மலைகளை பாதுகாக்க போராட்டத்தை மக்கள் ஆரம்பித்துள்ளனர். இந்த அளவு கொடுமை பிரிட்டிஷ்காரன் கூட செய்யல ..ஒவ்வொரு மாநில மக்களும் ஒவ்வொரு ரீதியிலும் துன்புறுத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள் .. மொத்தத்தில் இந்திய குடிமக்கள் எவனுமே சந்தோஷமாக இல்லை சங்கிகளைத் தவிர” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஆரவல்லி மலைத் தொடர் தொடர்பாக மத்திய அரசின் பரிந்துரைகளை ஏற்று உச்ச நீதிமன்றம் மறுவரையறை வழங்கியது. இதைத் தொடர்ந்து வட இந்தியாவில் போராட்டங்கள் வெடித்தன. அப்படி ஆரவல்லி மலைத் தொடர் பாதுகாப்புக்காக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
சில வாரங்களுக்கு முன்பு பீகார் தேர்தல் தொடர்பாக இதே வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தனர். பீகாரில் பாஜக வெற்றிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக இந்த வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தனர். அது தவறானது என்று அப்போது நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். தற்போது, ஆரவல்லி மலை பாதுகாப்புக்காக அதே வீடியோவை சிலர் பதிவிட்டுள்ளனர். எனவே, இது தொடர்பாக விரைவு ஆய்வு செய்தோம்.
இந்த பேரணி குஜராத் மாநிலம் நேத்ராங் (Netrang) என்ற ஊரில் 2025 நவம்பரில் நடந்தது. குஜராத்தின் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ-வான சைதர் வாஸ்வா (Chaitar Vasava) அப்போது ஆதிவாசி இனத் தலைவரான மறைந்த பிர்சா முண்டாவின் 150வது ஆண்டு விழாவைக் கொண்டாடியபோது அதில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான ஆதிவாசி இன மக்கள் என்றும் செய்திகள் நமக்குக் கிடைத்தன.
அப்போதே நேத்ராங் என்ற ஊரின் கூகுள் ஸ்ட்ரீட் வியூ காட்சியும், வீடியோவில் இடம் பெற்ற பகுதிகளின் தோற்றமும் ஒன்றாக இருப்பதை உறுதி செய்திருந்தோம். மேலும், வீடியோவில் பிர்சா முண்டாவின் ஓவியத்துடன் கூடிய பேனர்கள் இடம் பெற்றிருந்ததையும் ஆதாரமாகக் காட்டியிருந்தோம்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இந்த வீடியோவில் Super Zankar என்று ஒரு வாகனத்தில் எழுதியிருப்பதைக் காண முடிகிறது. இதன் அடிப்படையில் தேடிய போது, நவம்பர் 15, 2025 அன்று குஜராத் மாநிலம் நேத்ராங் என்ற ஊரில் பிர்சா முண்டாவின் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்ட போது Super Zankar இசைக் குழுவின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகப் பல வீடியோக்கள் நமக்குக் கிடைத்தன.

உண்மைப் பதிவைக் காண: Instagram I Archive
அதில் இடம் பெற்ற இடங்களும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள இடமும் ஒன்றாக இருப்பதை காண முடிந்தது. இவை எல்லாம் இந்த வீடியோ ஆரவல்லி மலைத்தொடரைப் பாதுகாக்க மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ இது இல்லை என்பதை உறுதி செய்தன.
முடிவு:
பிர்சா முண்டாவின் 150வது பிறந்த நாள் விழாவையொட்டி குஜராத் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ஏற்பாடு செய்திருந்த பேரணி வீடியோவை ஆரவல்லி மலைத் தொடரை காக்க போராடும் மக்கள் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:ஆரவல்லி மலையைக் காக்க போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False


