
குஜராத்தில் ஜியோ 5ஜி மொபைல் டவரை பொது மக்கள் தீ வைத்து எரித்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2
செல்போன் டவர் தீப்பிடித்து எரியும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வளர்ச்சி நாயகன் #மோடியின் குஜராத்தில் அம்பானியின் #ஜியோ 5ஜி டவரை தீயிட்டு கொளுத்திய மக்கள்… அப்படி என்னப்பா கோபம் உங்களுக்கு…??” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை Meezan – தராசு என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Jaffer Sadiq என்பவர் 2021 மே 13 அன்று பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
விவசாயிகள் போராட்டம் உச்சத்தில் இருந்த போது ஜியோ செல்போன் டவரை விவசாயிகள் எரித்தார்கள் என்று ஒரு வதந்தி பரப்பப்பட்டது. இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த நிலையில் குஜராத்தில் 5ஜி மொபைல் டவரை பொது மக்கள் தீ வைத்து எரித்தார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குஜராத்தில் இந்த சம்பவம் எங்கு, எப்போது நடந்தது என்று குறிப்பிடவில்லை. மேலும் ஜியோ டவர் எரிக்கப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. எனவே, இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
வீடியோவை Invid & WeVerifyல் பதிவேற்றி புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோ கோவாவில் எடுக்கப்பட்டதாக சில யூடியூப் வீடியோக்கள் நமக்கு கிடைத்தன. அதுவும் 2018ம் ஆண்டு இந்த வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. இதன் மூலம் குஜராத்தில் செல்போன் டவர் எரிக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானது என்று உறுதியானது.

அசல் பதிவைக் காண: YouTube 1 I YouTube 2
5ஜி பரிசோதனை மேற்கொள்ள இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு இம்மாதத்தின் தொடக்கத்தில்தான் இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இந்த சோதனையில் சீன நிறுவனங்கள் அவற்றின் தயாரிப்புகளை பயன்படுத்தக் கூடாது என்று இந்திய அரசு உறுதியாக கூறியுள்ளது.
இதன்படி பார்த்தால் இந்த தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இனி தான் சாம்சங், நோக்கியா போன்ற நிறுவனங்களுடன் இணைந்து 5ஜி சோதனை பணியை தொடங்கும் என்று தெரியவருகிறது.
அசல் பதிவைக் காண: outlookindia.com I Archive
இந்தியாவில் இன்னும் 5ஜி சேவை பரிசோதனை கூட ஆரம்பிக்கப்படவில்லை. அதற்குள்ளாக செல்போன் டவர் மூலமாக கொரோனா வைரஸ் பரவுகின்றது என்ற வதந்தி வைரலாக வட இந்தியாவில் பரவி வருவதாக செய்தி ஒன்று கிடைத்தது. “இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கப்படவில்லை. அதன் பரிசோதனை கூட இன்னும் ஆரம்பிக்கவில்லை” என்று தகவல் தொடர்பு துறை அமைச்சகம் தெரிவித்ததாக 2021 மே 18 அன்று அவுட் லுக் இந்தியாவில் செய்தி வெளியாகி இருந்தது.

அசல் பதிவைக் காண: hindustantimes.com I Archive
நம்முடைய ஆய்வில், இந்த வீடியோ 2018ம் ஆண்டு கோவாவில் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 5ஜி பரிசோதனை தொடங்கப்படவில்லை என்று தொலைத் தொடர்பு நிறுவனங்கள், மத்திய தகவல் தொடர்புத் துறை கூறியுள்ள விளக்கங்கள் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில், “குஜராத்தில் 5ஜி டவரை தீ வைத்து கொளுத்திய மக்கள்” என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
குஜராத்தில் ஜியோ செல் போன் டவர் எரிக்கப்பட்டதாக பகிரப்படும் வீடியோ 2018ம் ஆண்டு கோவாவில் நிகழ்ந்த விபத்தின் போது எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:குஜராத்தில் ஜியோ மொபைல் டவரை பொது மக்கள் தீ வைத்துக் கொளுத்தினார்களா?
Fact Check By: Chendur PandianResult: False
