
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு விருந்து வைத்தபோது இதுதான் நடந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஒருவர் நடனமாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நேற்று எடப்பாடி கொடுத்த இரவு விருந்தில் இதுதான் நடந்ததாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
உண்மைப் பதிவைக் காண: x.com I Archive
உண்மை அறிவோம்:
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2025 ஏப்ரல் 23ம் தேதி தன் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு விருந்து அளித்தார். காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த விருந்து தொடர்பாக பலரும் சமூக ஊடகங்களில் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். அதனுடன், எம்.எல்.ஏ-க்கள் நடனமாடினார்கள் என்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கூவத்தூரில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் தங்கவைக்கப்பட்டிருந்த போது ராஜன் செல்லப்பா நடனமாடினார் என்று அப்போது இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தனர். இது தொடர்பாக ராஜன் செல்லப்பாவும் கூட போலீஸில் புகார் செய்திருந்தார். எனவே, அது தொடர்பான செய்தி, வீடியோக்களை தேடி எடுத்தோம்.
இந்த வீடியோவை 2017ம் ஆண்டு மலையாளத்தின் மாத்ருபூமி உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்டிருந்ததைக் கண்டறிந்தோம். 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ம் தேதி இந்த வீடியோவை அவர்கள் வெளியிட்டிருந்தனர். அதில், மதுரை எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா (கூவத்தூர்) கோல்டன் பே ரிசார்டில் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோவில் இருப்பது ராஜன் செல்லப்பா இல்லை. கன்னியாகுமரி மாவட்ட பாஜக நிர்வாகி ஜெயசீலன் ராஜரத்தினம் கூவத்தூர் சம்பவத்துக்கு சில மாதங்களுக்கு முன்பாக நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடிய வீடியோ இது என்று தமிழ் ஊடகங்களில் வெளியான செய்தியையும் தேடி எடுத்தோம்.
உண்மைப் பதிவைக் காண: dailythanthi.com I Archive
இதனுடன் ராஜன் செல்லப்பா போலீசில் அளித்த புகார் தொடர்பான செய்தியையும் தேடி எடுத்தோம். அதில், “வாட்ஸ்–அப்பில் வெளியான வீடியோவில் நடனம் ஆடுவது நான் அல்ல. என் மீது அவதூறு பரப்புகிறார்கள் என்று மதுரை வடக்கு தொகுதி ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. போலீசில் புகார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இவை எல்லாம் எடப்பாடி பழனிசாமி 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி தன் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு அளித்த விருந்தின் போது இந்த வீடியோ எடுக்கப்படவில்லை என்பதை உறுதி செய்கின்றன.
முடிவு:
எடப்பாடி பழனிசாமி அளித்த விருந்தில் நடனமாடிய அதிமுக எம்.எல்.ஏ-க்கள் என்று பரவும் மிகவும் பழையது, வீடியோவில் இருப்பது எம்.எல்.ஏ இல்லை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:“எடப்பாடி பழனிசாமி அளித்த விருந்தில் எம்.எல்.ஏ-க்கள் நடனம்” என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
