
‘’நிவர் புயல் பாதித்த மக்களுக்கு உணவு தயாரிப்பதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார்,’’ எனக் கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
இதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சமையலறை ஒன்றில், அடுப்பில் வைக்கப்பட்டுள்ள பாத்திரத்தை திறந்து பார்ப்பது போன்ற புகைப்படத்தை இணைத்துள்ளனர். இதன் மேலே, ‘’ மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்க்காக தயாராகும் உணவுகளை நேரில் சென்று ஆய்வு செய்த நமது மக்களின் முதல்வர் #களத்தில்EPS,’’ என்று எழுதியுள்ளனர்.
பலரும் இந்த புகைப்படம் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
Facebook Claim Link 1 | Archived Link 1 |
Facebook Claim Link 2 | Archived Link 2 |
Facebook Claim Link 3 | Archived Link 3 |
உண்மை அறிவோம்:
நிவர் புயல் தமிழகத்தை மிரட்டி வந்த நிலையில், தற்போது கரையை கடந்துள்ளது. அதேசமயம், புயலை ஒட்டி மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடு நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆங்காங்கே நேரில் சென்று பார்வையிட்டார்.
இதுதொடர்பான புகைப்படங்களை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் @CMOTamilNadu வெளியிட்டு வருகிறார்.
ஆனால், அவர் சென்னை மாநகராட்சி வழங்கி வரும் உணவு நிவாரண உதவிகளை பற்றி நேரில் சென்று பார்வையிட்டதாக, எந்த புகைப்படமும் பகிரவில்லை. மாறாக, வெள்ளம் பாதித்த இடங்கள், முகாம்களில் உள்ள மக்களை சந்தித்தபோது எடுத்த புகைப்படங்களையே அதிகம் அவர் பகிர்ந்துள்ளார்.
சென்னை மாநகராட்சி வெள்ளம் பாதித்த மக்களுக்கு, உணவு வழங்குவதாகக் கூறி அவர் 2 புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவை மாநகராட்சி சார்பாக வெளியிடப்பட்ட வேறு புகைப்படங்கள் ஆகும். அவர் நேரடியாகச் சென்ற புகைப்படம் இல்லை. குறிப்பாக, நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் இடம்பெற்றதைப் போல இல்லை.
எனவே, இந்த புகைப்படம் நமது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தவே, நாம் இதுபற்றி கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இது கடந்த 2020 ஏப்ரல் மாதத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரியவந்தது.
கொரோனா பாதிப்பை ஒட்டி, தமிழகம் முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்னை வாழ் ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு அம்மா உணவகம் சார்பில் தடையின்றி உணவு வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, சென்னை சாந்தோம், மயிலாப்பூர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் தரப்படும் உணவின் தரத்தை பரிசோதிக்க, அங்குள்ள அம்மா உணவகங்களை நேரில் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.
அப்போது எடுத்த புகைப்படம்தான் இது. இதுபற்றி பல்வேறு ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது. அத்துடன் வீடியோ காட்சியும் உள்ளது. அவற்றை கீழே இணைத்துள்ளோம்.
எனவே, பழைய செய்தி ஒன்று தொடர்பான புகைப்படங்களை எடுத்து, தற்போதைய நிவர் புயல் கால நிவாரணப் பணிகளுடன் தொடர்புபடுத்தி பகிர்ந்துள்ளனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:நிவர் புயல் பாதித்த மக்களுக்கு உணவு தயாரிப்பதை நேரில் பார்வையிட்டாரா எடப்பாடி பழனிசாமி?
Fact Check By: Pankaj IyerResult: Partly False
