எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் விவசாயிகள் போராட்டம் நடப்பதாகவும் அதில் பங்கேற்றவர்கள் போலி விவசாயிகள் என்றும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

காரில் ஒருவர் மது பானம் விநியோகம் செய்ய, வெளியில் உள்ளவர்கள் போட்டி போட்டு வாங்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் 2024 பிப்ரவரி 16ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "ஹரியானா டூப்ளிகேட் விவசாயிகள் போராட்டம், பப்பு, கெஜ்ரி ஸ்பான்சர் செய்ய, கன கச்சிதமாக நடைபெறுகிறது!!!" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளவர்கள் உண்மையான விவசாயிகள் இல்லை என்று சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு விவசாயிகள் பெயரில் போலியாக ஆட்களைத் திரட்டி போராடி வருகிறார்கள் என்றும் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர். அந்த வகையில் போலியான விவசாயிகளுக்கு மது விநியோகிப்பது போன்று பகிரப்பட்டுள்ள வீடியோ உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. 2020 ஏப்ரல் மாதம் கொரோனா ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் இருந்த காலகட்டம் ஆகும். கொரோனா ஊரடங்கில் ஏழைகளுக்கு இலவச சேவை என்று நையாண்டியாகச் சிலர் இந்த வீடியோவை 2020 ஏப்ரல் மாதம் பதிவிட்டிருந்தனர்.

ஆர்.பஞ்சாபி என்ற யூடியூப் பக்கத்திலும் இந்த வீடியோ 2020 ஏப்ரல் 11ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. அதிலும் கூட இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை. கொரோனா ஊரடங்கு காலத்தில் யாரோ ஒருவர் பொது மக்களுக்கு மது வழங்கியிருக்கலாம். அதை வைத்து இவர்கள் 2024 விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்று கூறுவது சரியானதாக இருக்காது.

கொரோனா பரவலைத் தடுக்க 21 நாள் ஊரடங்கை பிரதமர் மோடி திடீரென்று மார்ச் 24ம் தேதி அறிவித்தார். இதன் படி மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு ஏப்ரல் 14, 2020 அன்று முடிவடைந்தது. அதன் பிறகும் ஊரடங்கு தொடர்ந்தது என்பது நாம் நன்கு அறிந்ததுதான். ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ ஏப்ரல் 11, 2020 அன்று சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது. அதாவது முதல் ஊரடங்கு முடிவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு.

உண்மைப் பதிவைக் காண: Facebook I businesstoday.in I Archive

விவசாயிகள் போராட்டம் 2024 பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் தொடங்கியது. இந்த வீடியோவோ 2020 ஏப்ரல் கொரோனா ஊரடங்கு காலத்திலிருந்து சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்த வீடியோவுக்கும் 2024 டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்பும் வகையில் பழைய தொடர்பில்லாத வீடியோவை வதந்தி பரப்பும் நோக்கில் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது.

முடிவு:

2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் யாரோ ஒருவர் பொது மக்களுக்கு மது வழங்கிய வீடியோவை 2024 விவசாயிகள் போராட்டம் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:‘மது வாங்க போராடும் டூப்ளிகேட் விவசாயிகள்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False