
நாமக்கல் மருத்துவக் கல்லூரி கட்டிடம் கட்டுமானப் பணியின் போது இடிந்து விழும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) வாசகர் ஒருவர் வீடியோ ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், கட்டிட தளம் போடும் பணி நடந்து கொண்டிருந்த போது அது இடிந்து விழும் காட்சி இருந்தது. “நாமக்கல் மருத்துவக் கல்லூரி இடிந்து விழும் காட்சி என்று இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது, இது உண்மையா” என்று கேட்டிருந்தார்.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
சமூக ஊடகங்களில் இதை யாரும் பகிர்கின்றார்களா என்று பார்த்தோம். ஃபேஸ்புக்கில் இந்த வீடியோவை சிலர் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. Authoor Seithigal Tuticorin என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 நவம்பர் 3ம் தேதி பகிர்ந்திருந்தது. எனவே, இது பற்றிய ஆய்வை மேற்கொண்டோம்.
உண்மை அறிவோம்:
நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரியின் முகப்புப் பகுதி கடந்த அக்டோபர் 30, 2020 அன்று அதிகாலை 2.30 மணி அளவில் திடீரென்று இடிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. கட்டுமானப் பணியின் தரம் தொடர்பாக பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
இந்த நிலையில் நாமக்கல் மருத்துவக் கல்லூரி கட்டிடம் இடிந்து விழும் காட்சி நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவை பலரும் வாட்ஸ் அப்பில் ஷேர் செய்து வருகின்றனர்.
போர்டிகோ பகுதி நள்ளிரவு 2.30 மணிக்கு இடிந்து விழுந்ததாக கூறப்பட்டது. ஆனால், இந்த வீடியோவோ பகல் நேரத்தில் கட்டுமானப் பணி நடந்த போது விழுந்துள்ளது. எனவே, இது நாமக்கல்லில் எடுக்கப்பட்டது இல்லை என்பது தெளிவானது.
மேலும், நாமக்கல் மருத்துவக் கல்லூரி கட்டிடம் மிக பிரம்மாண்டமானது. அதன் முகப்புப் பகுதி மட்டுமே இடிந்து விழுந்ததாக கூறப்பட்டது. அதுவும் தரை தளத்துக்கு மேல் இருந்த முகப்புப் பகுதி விழுந்தது போல படங்கள் இருந்தன. ஆனால், சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோ தரை தளம் போல உள்ளது. கட்டிடமும் சிறிய அளவில் இருந்தது. இவை அனைத்தும் இந்த வீடியோ நாமக்கல்லில் எடுக்கப்பட்டது இல்லை என்பதை உறுதி செய்தன.
அசல் பதிவைக் காண: dtnext.in I Archive
இதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோ பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரிந்தது. யூடியூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இந்த வீடியோ பகிரப்பட்டு வந்துள்ளது.
அசல் பதிவைக் காண: YouTube
அசல் வீடியோவில் இந்த சம்பவம் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி நடந்ததாக பதிவாகி இருப்பதைக் காண முடிந்தது. எனவே, இதற்கும் நாமக்கல் மருத்துவக் கல்லூரி கட்டிடம் இடிந்து விழுந்ததற்கும் தொடர்பில்லை என்று தெரிந்தது.
இந்த வீடியோ எங்கு பதிவானது என்பதைத் தெரிந்துகொள்ள தொடர்ந்து தேடினோம். இந்தியாவில் எடுக்கப்பட்டது என்றும் எத்தியோப்பியாவில் எடுக்கப்பட்டது என்றும் பலரும் பல விதங்களில் இந்த வீடியோவை யூடியூப் உள்ளிட்டவற்றில் பகிர்ந்து வருகின்றனர். எனவே, இது எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்ய முடியவில்லை.
2018ம் ஆண்டு வெளியான வீடியோவை தற்போது நாமக்கல் மருத்துவக் கல்லூரி கட்டிடம் இடிந்து விழுந்த நிகழ்வுடன் தொடர்புப்படுத்தி வெளியிட்டிருப்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாமக்கல் மருத்துவக் கல்லூரி கட்டும் பணியின் போது ஏற்பட்ட விபத்தின் பதிவு என்று பகிரப்படும் வீடியோ 2 ஆண்டுகள் பழமையானது என்பதை தகுந்த ஆதாரத்துடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:இது நாமக்கல் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணி இடிந்து விழும் காட்சி இல்லை!
Fact Check By: Chendur PandianResult: False
