ட்விட்டரில் முதலிடம் பிடித்த விஸ்வாசம்- வைரல் செய்தி உண்மையா?
"ட்விட்டரில் இந்தியாவிலேயே முதல் இடத்தை பிடித்த அஜித், உச்சகட்ட கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்" என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link 1 | Article Link | Archived Link 2 |
இந்தியாவிலேயே முதல் ஐந்து இடத்தில் முதலிடத்தைப் பிடித்த அஜித்! உச்சகட்ட கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள் என்ற தலைப்புடன் கூடிய செய்தி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது.
இந்த செய்தியை, Tamil360Newz என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 நவம்பர் 13ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ட்விட்டர் இந்தியாவில் 2019ம் ஆண்டு அதிக தாக்கத்தை ஏற்படுத்திய ஐந்து விஷயங்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அந்த பட்டியலில் முதல் இடத்தில் விஸ்வாசம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் அந்த படத்தை அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வந்தனர். இதை அடிப்படையாகக் கொண்டு பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட செய்தியை யுஆர்எல்-ஐ கிளிக் செய்து பார்த்தோம். அதில், Most Influential Moments என்ற பெயரில் பட்டியல் ஒன்றை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் அந்த செய்தியில், "ட்விட்டர் வெளியிட்ட பட்டியலில் அஜித்தின் விஸ்வாசம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வருடம் சர்க்கார் படம் முதலிடத்தைப் பிடித்தது போல் இந்த வருடம் விஸ்வாசம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதுபற்றி சத்யஜோதி நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளது" என்று குறிப்பிட்டிருந்தனர். சத்யஜோதி வெளியிட்ட ட்வீட்டையும் எம்பெட் செய்து கொடுத்திருந்தனர். செய்தியில் குறிப்பிட்டது போல, படம் இருந்தது. ஆனால், அதை ட்விட்டர்தான் வெளியிட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
உண்மையில் இந்த பட்டியலை ட்விட்டர் இந்தியா வெளியிட்டதா என்தை அறிந்துகொள்ள முயற்சி செய்தோம். ட்விட்டர் இந்தியாவின் ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்தபோது, யாரோ ஒருவர் செய்திருந்த ட்வீட்டை ரீட்வீட் செய்து ட்விட்டர் இந்தியா பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், இந்த ட்வீட்டைக் கண்டு நீங்கள் அதீத உற்சாகம் அடைந்திருப்பதைக் கண்டு நாங்களும் உற்சாகம் அடைந்துள்ளோம். இருப்பினும் இது இந்த ஆண்டு தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவங்கள் தொடர்பான ஒரு எடுத்துக்காட்டுக்காகக் காண்பிக்கப்பட்ட படம் மட்டுமே. 2019ம் ஆண்டுக்கான அதிகம் ட்வீட் செய்யப்பட்ட விஷயம் தொடர்பான ட்விட்டர் இந்தியாவின் அதிகாரப்பூர்வமான பட்டியலைக் காண கொஞ்சம் காலம் காத்திருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பான செய்தி இந்து தமிழிலும் வெளியாகி இருந்தது.
Archived Link 1 | Hindu Tamil | Archived Link 2 |
யாரோ ஒருவர் விஷயம் தெரியாமல் செய்த பதிவு, சமூக ஊடகத்தில் எந்த அளவுக்கு வைரலாக பரவியுள்ளது என்பதற்கு இதுவே உதாரணம். பதிவை ரீட்வீட் செய்தவர்கள், செய்தி வெளியிட்டவர்கள் இது தொடர்பாக ட்விட்டர் இந்தியா பக்கத்தை கொஞ்சம் சரிபார்த்திருந்தால் இதுபோன்ற வதந்திகள் பரவுவதைத் தவிர்த்திருக்கலாம்.
நம்முடைய ஆய்வில், ட்விட்டர் இந்தியா ‘2019ம் ஆண்டுக்கான அதிக ட்வீட் செய்யப்பட்ட விஷயங்கள் பட்டியலை வெளியிடவில்லை’ என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், 2019ம் ஆண்டில் ட்விட்டரில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய விஷயங்கள் பட்டியலில் விஸ்வாசம் முதல் இடத்தைப் பிடித்தது என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Title:ட்விட்டரில் முதலிடம் பிடித்த விஸ்வாசம்- வைரல் செய்தி உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False