
குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில், தொண்டர்களுக்கு மது விநியோகிக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பா.ஜ.க தொப்பி அணிந்த ஒருவர் மற்றவர்களுக்கு கிளாஸில் மது ஊற்றிக் கொடுக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் மேற்படி பாஜக கூட்டத்தில்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோவை Senthil Kumar Devaraj என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 நவம்பர் 16ம் தேதி பதிவிட்டுள்ளார்.
உண்மை அறிவோம்:
குஜராத் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அங்கு பாஜக கூட்டத்தில் மது விநியோகிக்கப்பட்டது என்று சிலர் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், இந்த வீடியோவை முன்பு பல முறை பார்த்த நினைவு இருந்தது.
தெலங்கானாவில் இந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் மது விநியோகிக்கப்பட்டது என்று இந்த வீடியோவை வட இந்தியாவில் பலரும் பரப்பியிருந்தனர். எனவே, இது குஜராத்தில் எடுக்கப்பட்டது இல்லை என்பது நமக்குத் தெரியும். இதை உறுதி செய்வதற்காக ஆய்வை நடத்தினோம்.
வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில் இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சியினர் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தது தெரிந்தது. உத்தரப்பிரதேச காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த வீடியோ 2021 டிசம்பர் 20ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. யோகி ஆதித்யநாத் மற்றும் மோடியைக் கிண்டல் செய்யும் வகையில் பதிவிடப்பட்டிருந்தது. காங்கிரஸ் நிர்வாகிகளும் இந்த வீடியோவை பகிர்ந்திருந்தனர். இது என்ன புனித கங்கை நீர் விநியோகமா என்று ஸ்மிருதி இரானியை கேட்டு ஒரு காங்கிரஸ் நிர்வாகி பதிவிட்டிருந்தார். ஆனால், இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்று அவர்கள் குறிப்பிடவில்லை.
தொடர்ந்து தேடிய போது தினக் பாஸ்கர் என்ற இந்தி ஊடகத்தில் இது தொடர்பாக செய்தி வெளியாகி இருப்பது தெரிந்தது. அந்த செய்தியைப் பார்த்த போது, காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருவது பற்றிக் குறிப்பிட்டிருப்பது தெரிந்தது. மேலும், இந்த வீடியோ உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் எடுக்கப்பட்டது என்றும், பாஜக தேசிய தலைவர் நட்டா பங்கேற்கும் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு மது விநியோகிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
இதன் அடிப்படையில் நட்டா, ஹரித்துவார், பாஜக, மது விநியோகம் என சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது, 2021 டிசம்பர் 18ம் தேதி ஹரித்துவாரில் பாஜக பேரணி நடந்ததாக வீடியோ ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. மேலும், ஒரே ஒரு ஊடகம் மட்டும் இந்த பேரணி தொடங்குவதற்கு முன்பு மது விநியோகம் செய்யப்பட்டதாகக் காங்கிரஸ் நிர்வாகி ஒருவரின் பேட்டியை எடுத்து செய்தி வெளியிட்டிருந்தது. அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ காட்சி இருந்தது.
நம்முடைய ஆய்வில் 2021ல் ஹரித்துவாரில் பா.ஜ.க கூட்டத்தில் மது விநியோகம் செய்யப்பட்ட வீடியோவை எடுத்து குஜராத்தில் நடந்ததாகத் தவறாகப் பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் குஜராத்தில் பூரண மது விலக்கு உள்ள நிலையில் பாஜக தொண்டர்களுக்கு மது விநியோகம் செய்யப்பட்டதாகப் பரவும் வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
குஜராத்தில் பாஜக கூட்டத்தில் மது விநியோகிக்கப்பட்டது என்று பரவும் வீடியோ, உண்மையில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் 2021ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:குஜராத் பா.ஜ.க கூட்டத்தில் மது விநியோகிக்கப்பட்டது என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
