வாட்ஸ்அப் பயன்படுத்தும் நேரத்தை குறைக்க மோடி அரசு முடிவு செய்துள்ளதா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social

இந்தியாவில் வாட்ஸ் அப் செயலியை குறிப்பிட்ட நேரத்துக்கு தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றும் மாத கட்டணம் ரூ.500 வசூலிக்க வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளது என்றும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்-அப் சாட்பாட் எண்ணுக்கு ஒரு வீடியோவை அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார். நியூஸ்7 தமிழ் வெளியிட்டது போன்று வீடியோவில் லோகோ இருந்தது. 

அதில் பேசிய நபர், “இரவு 11.30 மணி முதல் காலை 6 மணி வரைவாட்ஸ் அப் செயலியை நிறுத்திவைக்க மத்திய அரசே முடிவெடுத்துள்ளது. இது பிரதமர் நரேந்திர மோடியால் எடுக்கப்பட்ட முடிவு. பயனர்கள் அனைவரும் தங்கள் கான்டாக்ட் லிஸ்டில் உள்ள அனைவருக்கும் இந்த மெசேஜை உடனடியாக அனுப்ப வேண்டும். இந்த மெசேஜை தங்கள் லிஸ்டில் உள்ளவர்களுக்கு அனுப்பாத வாட்ஸ்அப் பக்கம் 48 மணி நேரத்தில் டெலிட் செய்யப்படும். அதன் பிறகு வாட்ஸ்அப் செயலியால் உங்கள் அக்கவுண்ட் அங்கீகரிக்கப்படமாட்டாது. அக்கவுண்டை டெலிட் செய்த பிறகு ஆக்டிவேட் செய்தால் அதன் பிறகு மாதாமாதம் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்” என்று நீட்டி முழக்குகிறார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் யாராவது பகிர்ந்துள்ளார்களா என்று பார்த்தோம். Abdul Malik Malik என்ற ஐடி கொண்ட நபர் 2022 நவம்பர் 14ம் தேதி இந்த வீடியோவை பகிர்ந்திருந்தார். அவரைப் போல பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.

உண்மை அறிவோம்:

வாட்ஸ் அப் செயலிக்குத் தடை என்று தொடங்கி, நிறுத்தம், தற்காலிக நிறுத்தம், மீண்டும் செயல்படாது, செயல்பட மாதம்தோறும் ரூ.500 செலுத்த வேண்டும், காண்டாக்ட் லிஸ்டில் உள்ள அனைவருக்கும் இந்த மெசேஜை அனுப்ப வேண்டும், 10 பேருக்கு இந்த மெசேஜை அனுப்ப வேண்டும் என்று சராமரியாக, குழப்பமான தகவல் கொண்ட வீடியோவாக இருக்கிறது. எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.

சமூக ஊடகங்களில் தேடிய போது இந்த வீடியோ 2019ம் ஆண்டிலிருந்து பலரும் பகிர்ந்து வந்திருப்பதைக் காண முடிந்தது. கூகுளில் வாட்ஸ்-அப் செயலிக்குத் தடை விதிக்க மோடி முடிவு என்று ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினால், பல ஆண்டுகளாக இந்த வதந்தி பரவி வருவதாக வெளியான செய்திகள் கிடைத்தன.

உண்மைப் பதிவைக் காண: financialexpress.com I Archive

2013ம் ஆண்டிலிருந்தே வாட்ஸ்அப் முடக்கப்படுகிறது என்று வதந்தி பரவி வருவதாகச் செய்திகள் கிடைத்தன. ஆனால், வாட்ஸ்-அப் நிறுவனத்திடம் இருந்தோ, மத்திய அரசிடமிருந்தோ இப்படி எந்த ஒரு அறிவிப்பு வெளிவரவில்லை. 

இந்த வீடியோவில் நியூஸ் 7 தமிழ் லோகோ இருந்தது. எனவே, இது பற்றி அறிய நியூஸ்7 தமிழைத் தொடர்புகொண்டு கேட்டோம். அப்போது, இந்த வீடியோவை நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது. ஆனால் முழு வீடியோவை பகிராமல் எடிட் செய்து வெளியிட்டுள்ளனர் என்று கூறி முழு வீடியோ லிங்கை அனுப்பினர்.

“வாட்சப் புரளி | இனி இவ்வளவு நேரம்தான் WhatsApp பயன்படுத்த முடியுமா?” என்று 2019 டிசம்பர் 16ம் தேதி அந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தனர். அந்த வீடியோவை பார்த்தோம். வீடியோ வெளியானதற்கு முந்தைய நாள் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டா-வில் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்ய முடியாமல் முடங்கியதாகக் குறிப்பிட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து வாட்ஸ்அப் பற்றிய வதந்தி வாட்ஸ்அப்-பிலேயே பரவ ஆரம்பித்தது என்று குறிப்பிட்டு அதில் உள்ளதைப் படித்தனர். கடைசியில் சமூக ஊடகங்களில் புரளிகளைப் பரப்ப வேண்டாம் என்றும், அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொள்வது அவசியம் என்றும் கூறி முடித்தனர்.

வாட்ஸ் அப் மீது கட்டுப்பாடுகள் அல்லது தடை விதிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது என்று எந்த செய்தியும் இல்லை. 2019ம் ஆண்டு வாட்ஸ்அப், ஃபேஸ்புக் முடங்கிய போது பரவிய வதந்தி பற்றி நியூஸ்7 தமிழ் வெளியிட்ட செய்தியை முழுமையாகப் பகிராமல், குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் மூலம் வாட்ஸ் அப் செயலி நிறுத்தப்படுகிறது என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சமூக ஊடகங்களில் பரவும் வதந்தி என்று நியூஸ்7 தமிழ் வெளியிட்ட வீடியோவையே எடிட் செய்து வாட்ஸ்அப்-பை முடக்க பிரதமர் மோடி முடிவு வதந்தி பரப்பியிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:வாட்ஸ்அப் பயன்படுத்தும் நேரத்தை குறைக்க மோடி அரசு முடிவு செய்துள்ளதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False