“நடந்தது பாலியல் பலாத்காரம் இல்லை… ஞான சடங்கு!” – பிஷப் பிராங்கோ கூறியதாக வதந்தி!

சமூக ஊடகம் சமூகம்

“நடந்தது பாலியல் பலாத்காரம் அல்ல… ஞான சடங்கு” என்று கேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிஷப் பிரான்கோ முலக்கல் விளக்கம் அளித்துள்ளதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Bishop Franco 2.png

 Facebook Link I Archived Link

 பிஷப் பிரான்கோ முலக்கல் படம் வைக்கப்பட்டுள்ளது. அதன் மேல், “கன்னியாஸ்திரிகளை ஏசு எனக்குள் வந்து சல்லாபித்தார். உடம்பு என்னுடையது… உள்ளிருந்து செயல்பட்டது இயேசு. நடந்தது பாலியல் பலாத்காரம் அல்ல ஞானச் சடங்கு!” என்று அவர் பிரான்கோ கூறியதாக உள்ளது.

மேலும், “எனக்கும் அந்த கன்னியாஸ்திரிக்கும் இடையே என்ன நடந்ததோ அது பாலியல் பலாத்காரம் அல்ல. உச்ச நிலையில் இயேசுவின் அற்புத இருப்பை உணரச் செய்யும் புனிதமான ஞான சடங்கு” என்று கூறியதாகவும் உள்ளது.

இந்த பதிவை சமுத்திரக்கனி☑ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Bharath Vaj என்பவர் 2019 ஜூன் 27ம் தேதி வெளியிட்டுள்ளார். இதற்கு எந்த ஒரு செய்தி இணைப்பு, ஆதாரம் எதையும் அளிக்கவில்லை. இது உண்மை என்று நம்பி பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கிறிஸ்தவ கத்தோலிக்க சபையில், ஜலந்தர் கத்தோலிக்க மறைமாவட்ட பிஷப்பாக இருந்தவர் பிரான்கோ முலக்கல். இவர் மீது கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்கார புகாரை எழுப்பினார். 2014 முதல் 2016ம் ஆண்டு வரை பிஷப் பிராங்கோ தன்னை பலமுறை பலாத்காரம் செய்தார் என்று தெரிவித்தார். ஆனால், பிஷப் மீது நடவடிக்கை எடுக்க தாமதம் ஆனதால், கேரளாவில் போராட்டம் எழுந்தது. இதைத் தொடர்ந்து பிஷப் பிராங்கோவை கேரள போலீசார் கைது செய்தனர். அவரை, தற்காலிகமாக பொறுப்புகளிலிருந்து விலக்கி வைப்பதாக கத்தோலிக்க சபை அறிவித்தது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

தன் மீதான குற்றச்சாட்டுகளை பிராங்கோ மறுத்துவருகிறார். குறிப்பிட்ட கன்னியாஸ்திரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து இட மாற்றம் செய்ததால் தன் மீது தவறான குற்றச்சாட்டை அவர் தெரிவித்துள்ளார் என்று பிராங்கோ விளக்கம் அளித்தார். இந்த நிலையில், அவர் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் அவரை கேரள போலீசார் கைது செய்தனர். அக்டோபர் 15ம் தேதி அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது கேரள நீதிமன்றம். அதன்படி, அவர் கேளராவுக்குள் இருக்கக் கூடாது, விசாரணை அதிகாரி அழைக்கும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் பிஷப் பிராங்கோ மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கொலை மிரட்டல், பாலியல் பலாத்காரம், இயற்கைக்கு மாறான உறவு, சிறைபிடித்தல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

அதில் எந்த இடத்திலும், பாலியல் பலாத்காரம் இல்லை, நடந்தது ஞான சடங்கு என்று பிராங்கோ ஒப்புக்கொண்டதாக குறிப்பிடப்படவில்லை. அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக எந்த தகவலும் இல்லை. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பிராங்கோவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டது போன்று, பிராங்கோ வேறு எங்காவது பேசினாரா, பத்திரிகைக்கு பேட்டி அளித்தாரா என்று கூகுளில் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

கேரளாவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய வழக்கு இது. மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ளது போன்று பிராங்கோ பேசியிருந்தால் அது மிகப்பெரிய பரபரப்பான செய்தியாகி இருக்கும். ஆனால், நம்முடைய தேடலில், ஒரு வரி செய்தியாகக் கூட எதுவும் கிடைக்கவில்லை. இதன் மூலம் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பொய்யானது, விஷமத்தனமானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:“நடந்தது பாலியல் பலாத்காரம் இல்லை… ஞான சடங்கு!” – பிஷப் பிராங்கோ கூறியதாக வதந்தி!

Fact Check By: Praveen Kumar 

Result: False