
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தும் வீடியோ என்று அமெரிக்கக் கொடியுடன் கூடிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பல வீடியோக்களை இணைத்து வீடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் காட்சிகள். போர் தற்போது உக்கிரமடைந்துள்ளது ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்தியது உக்ரைன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை Rekan Selrasa என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 பிப்ரவரி 25ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நான்கு, ஐந்து வீடியோக்களை இணைத்து ஒரே வீடியோவாக வெளியிட்டது போல உள்ளது. முதல் வீடியோவில் அமெரிக்கக் கொடியோடு ராணுவ வீரர்கள் பயணிக்கும், தாக்குதல் நடத்தும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்த போர் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடக்கிறது. இதில் அமெரிக்கா தற்போதுவரை பங்கேற்கவில்லை. எனவே, பழைய வீடியோவை பகிர்ந்திருக்கலாம் என்று கருதி இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.
வீடியோவை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். முதலில் அமெரிக்கக் கொடியுடன் வீரர்கள் செல்லும் காட்சியைத் தேடினோம். அப்போது, அது ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 2017ம் ஆண்டு தாக்குதல் நடத்திய வீடியோ என்று தெரியவந்தது. இந்த வீடியோ 2021ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதாவது, ரஷ்யா – உக்ரைன் மோதல் தொடங்குவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும், வீடியோவில் அமெரிக்கக் கொடியும் உள்ளது. இதன் மூலம் இது உக்ரைன் – ரஷ்யா போர் காட்சி இல்லை என்பது உறுதியானது.
அடுத்தது ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகளை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது அது ஜெர்மனி வீரர்கள் நடத்திய போர் பயற்சி வீடியோ என்பது தெரியவந்தது. அந்த வீடியோவும் 2021 அக்டோபர் மாதம் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மூன்றாவதாக ராணுவ டாங்குகள் பயிற்சி மேற்கொள்ளும் காட்சிகளை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அது தொடர்பாக உறுதியான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. சில கொரிய மொழி போன்ற பதிவுகளில் அந்த படம் பயன்படுத்தப்பட்டது போன்று கூகுள் ரிவர்ஸ் இமேஜில் நமக்கு முடிவுகள் கட்டப்பட்டன. ஆனாலும் அவற்றில் நமக்கு எந்த உறுதியான தகவலும் கிடைக்கவில்லை.
கடைசியாக, ராணுவ டாங்குகளில் இருந்து ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்துவது போன்று உள்ள காட்சியை பற்றித் தேடினோம். அந்த வீடியோ 2020ம் ஆண்டு யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. தென் கொரிய ராணுவம் புதிதாக தயாரித்துள்ள கே2 பிளாக் பான்தர் என்ற டாக்கை சோதனை செய்து பார்த்த காட்சி என்று அந்த யூடியூப் பதிவில் குறிப்பிட்டிருந்தனர்.
இதன் மூலம் பழைய வீடியோக்களை தொகுத்து, உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் ராணுவ தாக்குதல் காட்சி என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ரஷ்யா – உக்ரைன் போர் காட்சி என்று பகிரப்படும் வீடியோ அமெரிக்கா, ஜெர்மனி, தென் கொரியா ராணுவத்தின் வீடியோக்களின் தொகுப்பு என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:ரஷ்யா – உக்ரைன் போர் காட்சிகள் என்று பகிரப்படும் பழைய வீடியோ பதிவுகள்!
Fact Check By: Chendur PandianResult: False
