FACT CHECK: ஹாத்ராஸ் பெண்ணின் தாயை மிரட்டிய போலீசார் என்று பரவும் பழைய வீடியோ!

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

ஹாத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் உயிரிழந்த இளம் பெண்ணின் உடலை வழங்க முடியாது என்று அவரது தாயாரை போலீசார் மிரட்டினர், என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

பெண் ஒருவரை போலீசார் மிரட்டுவது போன்ற வீடியொ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அதிர்ச்சி காணொளி… உத்தரபிரதேசத்தில் பாலியல் கொடுமை காரணம் உயிரிழந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்வதற்கு முன்பு, அவரது தாயார் உட்பட குடும்ப உறுப்பினர்கள் காவல்துறை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டனர்.

என் மகளின் உடலையாவது பார்க்க வேண்டும் என்று அவர் சொன்னபோது காவல்துறையினர் தாயை அடித்தனர்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை Nasir என்பவர் 2020 அக்டோபர் 3ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் மாவட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மிகக் கொடுரமாக தாக்கப்பட்டதில் இளம் பெண் பலியானார். இந்த வழக்கில் குற்றவாளிகளை தப்ப வைக்க மாநில அரசு மற்றும் காவல் துறை முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு எழவே, நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. 

இறந்த பெண்ணின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல், அவசர அவசரமாக நள்ளிரவில் போலீசாரே எரித்தது கொந்தளிப்பை அதிகரிக்கச் செய்தது. இந்த நிலையில் பெண்ணின் உடலை அளிக்காமல், பெற்றோரை போலீசார் மிரட்டிய காணொலி என்று வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

வீடியோ தெளிவில்லாமல் உள்ளது. இது உயிரிழந்த பெண்ணின் தாய் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே, இந்த வீடியோ பற்றிய ஆய்வை மேற்கொண்டோம். வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.

அப்போது, இந்த வீடியோ உத்தரப்பிரதேசத்தில் ஹமீர்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் காய்கறிக் கடையைத் திறந்து வைத்திருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை போலீசார் தாக்கிய சம்பவம் என்று குறிப்பிட்டு சிலர் பகிர்ந்து வந்ததைக் காண முடிந்தது. 

அசல் பதிவைக் காண: livehindustan.com I Archive 1 I indiatimes.com I Archive 2 I bhaskar.com I Archive 3

இதன் அடிப்படையில் உத்தரப்பிரதேசம், ஹமீர்பூர், பெண்ணை தாக்கிய போலீஸ் என பல கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி தேடினோம். அப்போது இது தொடர்பாக பல ஆங்கிலம் மற்றும் இந்தியில் வெளியான செய்திகள் கிடைத்தன.

அதில், ‘’இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. ஹாத்ராஸ் இளம் பெண் மரணத்துக்குப் பிறகு இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது,’’ என்று அதில் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், இது தொடர்பாக ஒரு ட்வீட் பதிவும் நமக்கு கிடைத்தது. ஹமீர்பூரில் போலீசார் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை எட்டி மிதித்து தாக்குவதாக கூறி பகிரப்பட்டிருந்தது. அதற்கு ஹமீர்பூர் போலீஸ் தரப்பில் இருந்து விளக்கம் அளித்து ட்வீட் செய்யப்பட்டு இருந்தது. அதில், இது பழைய சம்பவம் என்றும், பெண்ணை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Archive

இதன் மூலம் உத்தரப்பிரதேச மாநிலம் ஹமீர்பூரில் நிகழ்ந்த சம்பவத்தின் வீடியோவை ஹாத்ராஸ் பாலியல் வன்கொடுமை கொலை நிகழ்வுடன் தொடர்புபடுத்திப் பதிவு வெளியிட்டிருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில், ஹாத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் தாயை மிரட்டும் போலீஸ் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், குறிப்பிட்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் உறுதி செய்துள்ளது. நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:ஹாத்ராஸ் பெண்ணின் தாயை மிரட்டிய போலீசார் என்று பரவும் பழைய வீடியோ!

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •