
ஆருத்ரா மோசடி விவகாரத்தில் அமர்பிரசாத் ரெட்டி, பால் கனகராஜ் உள்ளிட்டோர் ரூ.84 கோடி பெற்றதாக பா.ஜ.க நிர்வாகி அலெக்ஸ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தினமலர் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஆருத்ரா மோசடி – பாஜக நிர்வாகி ஒப்புதல்! பாஜக நிர்வாகி அலெக்ஸ் பொருளாதார குற்றப்பிரிவில் ஆஜர். அமர்பிரசாத் ரெட்டி, பால் கனகராஜ், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் ஹரிஷிடம் ரூ.84 கோடியை பெற்றதாக ஒப்புதல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை Gowri Gurunathan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஏப்ரல் 13ம் தேதி பதிவிட்டிருந்தார். அவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
ஆருத்ரா மோசடி விவகாரத்தை வைத்து பல்வேறு போலியான நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. தற்போது ரூ.84 கோடியை பாஜக நிர்வாகிகள் பெற்றதாக விசாரணைக்கு ஆஜரான பா.ஜ.க நிர்வாகி அலெக்ஸ் என்பவர் கூறியதாக தினமலர் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நியூஸ் கார்டு பார்க்க தினமலர் வெளியிட்டது போல உள்ளது. ஆனால், அதன் ஃபாண்ட், டிசைன் சற்று வித்தியாசமாக இருந்தது. எனவே, இதை தினமலர் வெளியிட்டதா என்று அறிய அதன் சமூக ஊடக பக்கங்களைப் பார்வையிட்டோம். ஏப்ரல் 12, 2023ம் தேதி இப்படி எந்த ஒரு நியூஸ் கார்டையும் தினமலர் வெளியிடவில்லை.
இதை உறுதி செய்துகொள்வதற்காக தினமலர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய நிர்வாகி ஒருவர் இந்த நியூஸ் கார்டை நாங்கள் வெளியிடவில்லை. எங்கள் வாட்ஸ் அப் எண்ணுக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்புங்கள் என்றனர். அவர்கள் கூறியபடி அந்த நியூஸ் கார்டை அனுப்பிவைத்தோம். இது போலியானது என்று மீண்டும் உறுதி செய்தனர்.
ஆருத்ரா வழக்கு விசாரணை நடந்துகொண்டே இருக்கிறது. வழக்கு விசாரணையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதற்குள்ளாகச் செல்லவில்லை. பாஜக நிர்வாகிகள் ஹரிஷிடமிருந்து ரூ.84 கோடி பெற்றதாக பாஜக நிர்வாகி அலெக்ஸ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் என்று தினமலர் நாளிதழ் வெளியிட்டதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பாஜக நிர்வாகிகளுக்கு ஆருத்ரா மோசடி பணம் ரூ.84 கோடி வழங்கப்பட்டது என்று பரவும் தினமலர் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:ஆருத்ரா மோசடி: அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் ரூ.84 கோடி பெற்றனர் என்று தினமலர் செய்தி வெளியிட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False
