FactCheck: அமெரிக்காவில் மனைவிக்கு இதயத்தை தானம் கொடுத்துவிட்டு உயிர் விட்ட கணவன் இவரா?

சமூக ஊடகம் சமூகம் சர்வதேசம்

அமெரிக்காவில் கணவர் ஒருவர் தன்னுடைய இதய நோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்கு தன் இதயத்தைக் கொடுத்துவிட்டு உயிரை மாய்த்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பெண் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபர் ஒருவரைக் கட்டிப்பிடித்து அழும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன், “அமெரிக்காவில் அரங்கேறிய சம்பவம். இதய நோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்கு தன் இதயத்தை கொடுத்து உயிரை மாய்த்த கணவன். உண்மை காதலுக்கு உதாரணம் இதுவே!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பாசம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 மே 12ம் தேதி பதிவிட்டுள்ளது. இந்த புகைப்பட பதிவை பலரும் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நாம் உயிருடன் இருக்கும் போது நம்முடைய கல்லீரல், சிறுநீரகம், எலும்பு மஞ்சை என சில உறுப்புக்களை மட்டுமே நம்மால் தானம் செய்ய முடியும். மூளைச் சாவு அடைந்தவர்களிடமிருந்து மட்டுமே நுரையீரல், இதயம் உள்ளிட்டவற்றையும் தானமாகப் பெறலாம். தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தால், அல்லது உயிருடன் இருக்கும் ஒரு நபரிடமிருந்து இதயத்தை எடுத்து மற்றொரு நபருக்கு பொருத்த முடியாது. அப்படி இருக்கும் போது, அமெரிக்காவில் கணவன் ஒருவர் தன் மனைவிக்காக தன்னுடைய இதயத்தை கொடுத்து உயிரிழந்தார் என்று குறிப்பிட்டிருந்தது பற்றி ஆய்வு செய்தோம்.

இந்த புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இது ஆபாச படங்களில் நடிக்கும் ஒருவரின் புகைப்படம் என்று தெரியவந்தது. இந்த படத்தை இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக இருந்த அப்துல் பாசிட்,  “காஷ்மீரின் அனந்த்நாகை சார்ந்த யூசுப், போலீஸ் நடந்திய தாக்குதலில் கண்களை இழந்துவிட்டார்” என்று குறிப்பிட்டு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் என்று செய்தி கிடைத்தது. அது தொடர்பாக வெளியான செய்திகள் நமக்கு கிடைத்தன.

உண்மைப் பதிவைக் காண: indianexpress.com I Archive 1 I mikesouth.com I Archive 2

மேலும், தன்னுடைய படத்தை வெளியிட்டு, தனக்கு ட்விட்டரில் அதிக Followers வர காரணமாக இருந்த பாகிஸ்தானின் முன்னாள் தூதருக்கு நன்றி, என்னுடைய கண் பார்வை நன்றாகவே உள்ளது, என்று அந்த ஆபாச பட நடிகர் ட்வீட் செய்திருப்பதும் தெரிந்தது. மேலும், இந்த படம் சில ஆபாச தளங்களில் இருப்பதையும் காண முடிந்தது.

ஆபாச இணையதளத்தில் வெளியான ஆபாச படத்தின் காட்சியைப் பகிர்ந்து, அமெரிக்காவில் கணவன் ஒருவன் தன்னுடைய மனைவிக்கு இதயத்தை தானமாக வழங்கியிருக்கிறார் என்று தவறாக பகிர்ந்து வருவது தெரிந்தது. 

உண்மையில் அமெரிக்காவில் ஏதாவது மூளைச்சாவு அடைந்த கணவனின் இதயம் மனைவிக்குப் பொருத்தப்பட்டதா… அது தொடர்பாக செய்தி ஏதும் உள்ளதா என்று பார்த்தோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. இதன் மூலம் அமெரிக்காவில் மனைவிக்கு இதயத்தை தானம் கொடுத்து உயிர் விட்ட கணவன் என்று பகிரப்படும் தகவல் மற்றும் படம் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அமெரிக்காவில் மனைவிக்கு தன் இதயத்தை தானமாக வழங்கிய கணவன் என்று பகிரப்படும் படம், பதிவு தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் தவறானது என ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:FactCheck: அமெரிக்காவில் மனைவிக்கு இதயத்தை தானம் கொடுத்துவிட்டு உயிர் விட்ட கணவன் இவரா?

Fact Check By: Chendur Pandian 

Result: Satire