FactCheck: இந்து கோயில்களில் திருமணம் செய்ய ரூ.50,000 கட்டணமா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் திருமணம் செய்ய ரூ.50,000 கட்டணம்’, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

FB Claim Link l Archived Link 

பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலம் பெண்களுக்காக, 5 விதமான திருமண உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு ஏழைப்பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம், ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் நிதியுதவி திட்டம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 

www.tnsocialwelfare.tn.gov.in link 

இத்திட்டங்கள் மூலமாக, பயனாளிகளுக்கு பணம் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தாலிக்கு தங்கம் என்ற பெயரில் பணம் மற்றும் தங்கம் வழங்கும் திட்டத்தினை கடந்த 2011-ல் தொடங்கி வைத்தார். 

இந்நிலையில், திமுக ஆட்சியில், மேற்கண்ட திட்டத்தில் பயன்பெறுவோருக்கான விதிமுறைகளில் மாற்றம் செய்வதாக, 2021ம் ஆண்டு அறிவித்தது. இது பல்வேறு தரப்பிலும் விமர்சிக்கப்பட்டது. 

tamil.oneindia link 

தற்போது, இந்து சமய அறநிலையத் துறை மூலம் கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்துக்கான செலவுத் தொகை ரூ.20,000-ல் இருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழ்நாட்டு கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணங்களுக்கு, தலா 4 கிராம் தங்கம், மணமகன் ஆடை, மணமகள் ஆடை, 20 பேருக்கு உணவு, மாலை, பூ, பீரோ, மெத்தை, கட்டில், தலையணை, கைக்கடிகாரம், மிக்ஸி, பூஜைப் பொருட்கள், பாய், பாத்திரங்கள் போன்ற பொருட்களின் செலவினை அறநிலையத் துறையே ஏற்கும். 

இதனால், அறநிலையத் துறை ஒரு திருமணத்திற்கு செலவிடும் தொகை தற்போது உள்ளதைவிட அதிகரிக்கும். எனவே, இதற்கான செலவினத் தொகை ஒதுக்கீட்டை உயர்த்துவதாக, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனையே தந்தி டிவி உள்ளிட்ட ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுளளன. 

TheHindu link l HinduTamil link

இதனை தவறாகப் புரிந்துகொண்ட ‘சமூக வலைதள மங்குனிகள்’ வழக்கம்போல, கோயில்களில் இனி இலவச திருமணம் கிடையாது; ரூ.50,000 கட்டணம் செலுத்த வேண்டும் என்று வதந்தி பரப்புகிறார்கள். 

அதாவது, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும்  கோயில்களில் ஏழை எளிய இணைகளுக்கு அரசே இலவச திருமணம் நடத்தி வைக்கிறது. இதற்கான செலவுத் தொகை ரூ.20,000-ல் இருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், ஆண்டுதோறும் ஒரு இணை ஆணையர் மண்டலத்தில் 25 ஏழை எளிய இணைகள் வீதம், 20 மண்டலங்களில் மொத்தம் 500 இணைகளுக்கு சீர்வரிசையுடன் திருமணம் செய்து வைக்கப்படும். 

கூடுதல் ஆதாரத்திற்காக, இதுபற்றி தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

தற்சமயம், ஏற்கனவே, 217 இணைகளுக்குத் திருமணம் செய்து வைத்து சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 283 ஏழை எளிய இணைகளுக்குத் திருக்கோயில் மூலம் இலவசத் திருமணம் செய்து 50,000 ரூபாய்க்கான சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. 

தவிர, இந்த திட்டம் உடனடியாக, நடைமுறைக்கு வந்துள்ளதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம். 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:FactCheck: இந்து கோயில்களில் திருமணம் செய்ய ரூ.50,000 கட்டணமா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: False