
ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள பழமையான ஜின்னா டவரில் தேசிய கொடியேற்ற தடை விதிக்கப்பட்டதாகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு அடிப்படையில் அந்த கோபுரத்துக்கு தேசிய கொடியின் மூவர்ணம் பூசப்பட்டது என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இரண்டு புகைப்படங்களை ஒப்பிட்டு பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஜின்னா டவர் , ஆந்திரா குண்டூரி்ல் உள்ளது , இங்கு கடந்த ஜனவரி-26ல் இந்திய தேசிய கொடியை ஏற்ற முயன்ற நபரை, போலீசார் அடித்து கைது செய்தனர், விஷயம் அமித்ஷா அவர்களின் கவணத்திற்கு கொண்டு செல்லப்பட்டது, அதன் விளைவாக நேற்று பி்ப்-1ல் அந்த டவருக்கு இந்திய கொடியின் மூவர்ண வர்ணம் பூசப்பட்டது ,..!
ஜெய் ஹிந்த்..! பாரத் மாதா கி ஜெய்..!” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை Asokan V என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 பிப்ரவரி 2ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஆந்திர மாநிலத்தில் இந்திய தேசியக் கொடியை ஏற்ற எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக பதிவு உள்ளது. எனவே, இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்ய தொடங்கினோம். இந்த பதிவில் ஆந்திர மாநிலம் குண்டூர், ஜின்னா டவர், குடியரசு தினம் என்று குறிப்பிடப்பட்டு இருப்பதால், இந்த கீ வார்த்தைகளை வைத்து தேடினோம். அப்போது இது தொடர்பான பல செய்திகள் நமக்குக் கிடைத்தன.
2021ம் ஆண்டு குடியரசு தினத்தின் போது இந்த ஜின்னா கோபுரத்தில் கொடியேற்ற எதிர்ப்பு கிளம்பியதாக எந்த தகவலும் இல்லை. இந்த ஆண்டு (2022) குடியரசு தினத்தின் போது இந்த கோபுரத்தில் தேசியக் கொடியை ஏற்றப் போவதாக சில இந்து அமைப்புக்கள் கிளம்பியதாகவும் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதாகவும் செய்தி கிடைத்தது.
இது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியா டுடே உள்ளிட்ட எல்லா முன்னணி ஊடகங்களிலும் செய்தி வெளியாகி இருந்தது. அவற்றைப் பார்த்தோம். குடியரசு தினத்தன்று ஜின்னா டவரில் தேசிய கொடி ஏற்றப் போவதாக இந்து அமைப்புகள் அறிவித்தன. மத மோதல் வந்துவிடக் கூடாது என்பதற்காக அங்கு மக்கள் கூட போலீசார் தடை விதித்திருந்தார். ஆனால், இந்து வாஹினி என்ற இந்து அமைப்பு தடையை மீறி கொடியேற்ற முடிவு செய்தது. தடையை மீறி கூட்டம் (3 பேர்) கூடியதால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதை மிகப்பெரிய பிரச்னையாக மாற்ற பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்புகள் முயற்சி செய்தன.

உண்மைப் பதிவைக் காண: indiatoday.in I Archive 1 I deccanherald.com I Archive 2 I thenewsminute.com I Archive 3
இதைத் தொடர்ந்து ஆந்திர பிரதேசத்தை ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும்படி அந்த பகுதியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ முகமது முஸ்தபாவுக்கு அறிவுறுத்தியது.
இதைத் தொடர்ந்து குண்டூர் மாவட்ட நிர்வாகம், குண்டூர் மாநகராட்சி உள்ளிட்டவர்களை கலந்து பேசிய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ முகமது முஸ்தபா ஜின்னா டவருக்கு இந்திய தேசிய கொடியின் மூவர்ணத்தை அடிப்பது என்று முடிவெடுத்துள்ளார். இதன் அடிப்படையில் ஜின்னா டவருக்கு ஆரஞ்சு, வெள்ளை, பச்சை நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜின்னா கோபுரத்துக்கு முன்பாக கொடி கம்பமும் நிறுவப்பட்டு முகமது முஸ்தபா தேசியக் கொடியை ஏற்றியுள்ளார். தினமும் தேசியக் கொடியை ஏற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது என்று செய்திகள் கிடைத்தன. இதன் மூலம் இந்த விவகாரத்தில் பிரச்னை செய்ய நினைத்த அமைப்புகளுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் இருப்பினும் நிறம் மாறியதே தங்களுக்கு கிடைத்த வெற்றிதான் என்று இந்து அமைப்புகள் கூறிவருவதாகவும் செய்தி கிடைத்தது.
தீவிர வலதுசாரி ஆதரவு ஊடகங்களிலும் கூட 2021ம் ஆண்டு இங்கு தேசியக் கொடி ஏற்ற எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவோ, அமித்ஷா தலையிட்டு அந்த கோபுரத்தின் நிறத்தை மாற்ற உத்தரவிட்டதாகவோ குறிப்பிடவில்லை. விஷமத்தை பரப்பும் வகையில் தவறான தகவலை வேண்டுமென்றே பகிர்ந்திருப்பது இதன் மூலம் தெளிவாகிறது.
உண்மைப் பதிவைக் காண: opindia.com I Archive
அந்த கோபுரத்துக்கு ஏன் ஜின்னா பெயர் வைக்கப்பட்டது என்று தெலுங்கு ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது. இந்திய சுதந்திர போராட்டத்தின் போது 1942ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கம் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டது. அப்போது எம்.எல்.ஏ-வாக இருந்த லால் ஜான் பாஷா என்பவர் குண்டூரில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை மிகப்பெரிய அளவில் நடத்த திட்டமிட்டார். இதற்காக முகமது அலி ஜின்னாவை அழைத்திருந்தார். அவர் வருவார் என்று எதிர்பார்த்து அதன் நினைவாக இந்த கோபுரத்தைக் கட்டியுள்ளார். ஆனால் கடைசி நிமிடத்தில் எதிர்பாராத நிகழ்வு காரணமாக ஜின்னாவால் குண்டூரில் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. சுதந்திரப் போராட்ட வீரர்கள் அந்த ஜின்னா கோபுரத்தைத் திறந்து வைத்துள்ளனர். சுதந்திரத்துக்குப் பிறகும் சிலர் பிரச்னை கிளப்பினாலும் யாரும் அதை பெரிதுபடுத்தவில்லை.
தற்போது மீண்டும் ஜின்னா கோபுரத்தை மிகப்பெரிய பிரச்னையாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாருக்கும் பிரச்னை வராமல் இருக்க அந்த கோபுரத்துக்கு தேசிய கொடியின் மூவர்ணம் அடிக்கப்பட்டுள்ளது. மேலும், தினமும் தேசிய கொடி ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஓராண்டுக்கு முன்பு அங்கு தேசிய கொடி ஏற்ற எதிர்ப்பு கிளம்பியதாகவும், உள்துறை அமைச்சர்அமித்ஷா உத்தரவிட்டு அங்கு கொடி ஏற்றப்பட்டதாகவும் பரவும் தகவல் தவறானது என்று உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஜின்னா கோபுரத்தில் தேசிய கொடியேற்ற எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும், உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவின் அடிப்படையில் அந்த கோபுரத்தின் நிறம் தேசிய கொடியின் நிறமாக மாற்றப்பட்டது என்றும் பகிரப்படும் தகவல் தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:ஆந்திரா குண்டூர் ஜின்னா கோபுரத்தில் அமித்ஷா உத்தரவால் தேசிய கொடி வர்ணம் பூசப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: Partly False
