
மழைக்காக கருணாநிதி சமாதி முன்பு தி.மு.க-வினர் வேண்டுதல் நடத்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு…
தகவலின் விவரம்:
மழை வேண்டி திராவிடர் முன்னேற்ற கழகத்தினர்
கருணாநிதி சாமாதி முன் நடத்திய வேண்டுதல்
திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க செயலாளரும் முன்னாள் தமிழக அமைச்சருமான ஏ.வ.வேலு மற்றும் குழுவினர் கருணாநிதி நினைவிடத்தில் இசைக் கருவிகளைப் பயன்படுத்தி, பாடல்களை பாடுகின்றனர். ஆனால், சினிமா பாடல் ஒலிக்கிறது. நிலைத் தகவலில், “மழைக்காக கருணாநிதி சமாதி முன்பு தி.மு.க-வினர் வேண்டுதல் நடத்தினர்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, J.S.Kishorekumar என்பவர் ஜூன் 17, 2019 அன்று தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ J.S.Kishorekumar பகிர்ந்துள்ளது போல உள்ளது. ஆனால், வீடியோவில், விரைவுச் செய்தி என்ற தலைப்பின் கீழ், “எ.வ.வேலு தலைமையில் தி.மு.க-வினர் அஞ்சலி” என்று உள்ளது. மேலும், “கலைஞர் நினைவிடத்தில் தி.மு.க-வினர் பாடல்களை பாடி அஞ்சலி” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பாடல் சினிமா பாடல் போல உள்ளது. பாலிமர் செய்தியில், மழைக்காக கலைஞர் நினைவிடத்தில் தி.மு.க-வினர் வேண்டுதல் என்று சொல்லவில்லை. இதன் மூலம், எடிட் செய்யப்பட்ட வீடியோவாக இது இருக்கலாம் என்று தோன்றியது.
பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட அசல் வீடியோவைத் தேடினோம். “கலைஞர் நினைவிடத்தில் பாடல்கள் பாடி அஞ்சலி” என்ற கீ வார்த்தையை கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது இது தொடர்பான பல செய்திகள், வீடியோ மற்றும் பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ நமக்குக் கிடைத்தது.

கலைஞர் நினைவிடத்தில் பாடல்களை பாடி அஞ்சலி செலுத்திய நிகழ்வு 2018 ஆகஸ்ட் 21ம் தேதி நடந்துள்ளது. அதாவது கலைஞர் மரணம் அடைந்து, (ஆகஸ்ட்7, 2019) அவரது உடல் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்து (ஆகஸ்ட் 8, 2018) இரண்டு வாரங்கள் ஆன நிலையில் நடந்துள்ளது.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு இந்த பஜனை பாடல் போன்று இசை நிகழ்ச்சி நடந்துள்ளது. இது குறித்து எ.வ.வேலுவிடம் கேட்டபோது, “தலைவர் கலைஞருக்கு இசை மீது அதிக நாட்டம் உண்டு. இசையை மிகவும் ரசிப்பார். எனவே இவரது புகழை இசை மூலம் வெளிப்படுத்தி பாடினோம். தலைவரைப் புகழ்ந்தும் பஜனை பாடினோம்” என்றார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்டிருந்த வீடியோவில், “கலைஞர் நினைவிடத்தில் தி.மு.க-வினர் பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்தினர். மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்க வளாகத்தில் தி.மு.க தலைவர் மு.கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஏராளமான தி.மு.க-வினர் வரிசையில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கலைஞரின் பெருமைகளை விளக்கும் வகையிலான பாடல்களை தி.மு.க-வினர் தாங்களே எழுதியுள்ளதாக கூறியுள்ளனர். அந்த பாடல்களை தி.மு.க முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் தி.மு.க பாடினர்” என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதன் மூலம், பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோவில் ஆடியோவை மட்டும் எடிட் செய்து போலியாக வீடியோ தயாரித்து வெளியிட்டது உறுதியாகிறது.
நாம் மேற்கொண்ட ஆய்வில்,
1) கலைஞர் நினைவிடத்தில் பாடல் பாடி அஞ்சலி செலுத்தியது தொடர்பான செய்தி கிடைத்துள்ளது.
2) பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ கிடைத்துள்ளது. அதில், சினிமா பாடல் ஒலிக்கவில்லை.
3) ஒரிஜினல் வீடியோவில் ஒலியை மட்டும் மாற்றி தமிழ் சினிமா கானா பாடலை சேர்த்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
4) 2018 ஆகஸ்டில் நடந்த நிகழ்வை தற்போது மழைக்காக நடந்தது போல குறிப்பிட்டு தவறான செய்தியைப் பரப்பியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், “மழை வேண்டி திராவிட முன்னேற்ற கழகத்தினர் கருணாநிதி சாமாதி முன் நடத்திய வேண்டுதல்” என்ற வீடியோ தவறானது, விஷமத்தனமானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:“மழைக்காக கருணாநிதி சமாதி முன்பு வேண்டுதல் நடத்திய தி.மு.க-வினர்”– வீடியோ உண்மையா?
Fact Check By: Parthiban SResult: False
