
உள்துறை அமைச்சர் அமித்ஷா மாஸ்க் அணியாமல் கும்பமேளாவில் நீராடிய காட்சி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் ஆற்றில் நீராடும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மாஸ்க் போடாமல் சாப்பிட்ட பெண்ணுக்கு 200₹ அபாராதம் போட்ட ஆபீசர கூப்பிடுங்கய்யா ….!!!
இங்க பத்து பதினைஞ்சு பரதேசிபயலுவ மாஸ்க் போடமே குளிச்சிட்டு இருக்கானுவோ….!!!
வாங்க ஆபீசர் வந்து ஃபைன் போடுங்க……!!!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Kannan K என்பவர் 2021 ஏப்ரல் 19 அன்று பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பழைய கும்பமேளா படங்கள் எல்லாம் தற்போது 2021ல் எடுக்கப்பட்டது போன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
சாப்பிட்டுக்கொண்டிருந்த பெண்ணுக்கு மாஸ்க் போடவில்லை என்று அபராதம் விதித்த அதிகாரிகள், மாஸ்க் போடாமல் அமித்ஷா உள்ளிட்டவர்கள் குளிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலம் தற்போது கொரோனா 2ம் அலை பரவல் உச்சத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்டது போன்று பகிர்ந்துள்ளனர்.
இந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த புகைப்படம் 2019ம் ஆண்டிலிருந்து செய்தி ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. loksatta.com என்ற இணையதளத்தில் 2019ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி இந்த புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தனர். அதில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கும்பமேளாவில் நீராடினார் என்று இருந்தது. அதாவது, அவர் மத்திய உள்துறை அமைச்சராக ஆவதற்கு முன்பு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

அசல் பதிவைக் காண: loksatta.com I Archive
அந்த செய்தியில் அமித்ஷா வெளியிட்ட ட்வீட் பதிவுகளும் கிடைத்தன. இந்த படத்தை அமித்ஷா 2019 பிப்ரவரி 13ம் தேதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பதும் நமக்குக் கிடைத்தது.
கொரோனா பரவல் 2019 டிசம்பர் இறுதியில்தான் சீனாவில் வெளிப்பட்டது. இந்தியாவில் 2020 ஜனவரியில் தென்பட்டது. தீவிர பரவல் என்பது 2020 மார்ச் மாதம் தான் நிகழ்ந்தது. கொரோனா பரவலுக்கு முன்பு உத்தரப்பிரதேசம் அலகாபாத் கும்பமேளாவில் அமித்ஷா நீராடிய படத்தை எடுத்து, தற்போது ஹரித்வார் கும்பமேளாவில் நீராடியது போன்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில், மாஸ்க் அணியாமல் அமித்ஷா, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கும்பமேளாவில் நீராடியதாக பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
மாஸ்க் இன்றி நீராடிய அமித்ஷா என்று பரவும் படம் 2019ம் ஆண்டு பிப்ரவரியில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:மாஸ்க் அணியாமல் அமித்ஷா, யோகி ஆதித்யநாத் 2021 கும்பமேளாவில் நீராடிய படமா இது?
Fact Check By: Chendur PandianResult: False
