இந்தோ- சீனப் போரில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் புகைப்படம் உண்மையா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

இந்தோ – சீன பேரில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ் வீரர்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட் பாட் எண்ணுக்கு ஒரு புகைப்படத்தை அனுப்பி, அது உண்மையா என்று கேட்டிருந்தார். சீக்கிய ராணுவ வீரர்களின் புகைப்படம் அது. அதற்கு கீழ் தமிழில், “1965 சீனாவுடனான யுத்தத்தின் போது போர் முனையில் ஸ்வயம்சேவகர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பதிவைக் காண: Facebook I Archive

ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இதை யாராவது பகிர்ந்துள்ளார்களா என்று பார்த்தோம். பலரும் இதைப் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. MR.Gandhi fan’s என்ற ஃபேஸ்புக் பக்கம் இந்த படத்தை 2022 அக்டோபர் 2ம் தேதி பதிவிட்டிருந்தது. நிலைத்தகவலில், “பஞ்சு மெத்தையில் படுத்துக்கொண்டு பல்லவி பாடும் காங்கிரசுன்னு நெனச்சியா…இல்ல… ஊரெல்லாம் உண்டியல் குலுக்கி உலையில் போடும் சீன கைத்தடி கம்யூனிஸ்ட் னு நெனச்சியா…? 1965 சீனாவுடனான யுத்தத்தின் போது போர் முனையில் ஸ்வயம் சேவகர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

உண்மை அறிவோம்:

ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் இந்தோ – சீன போரில் பங்கேற்றார்கள் என்று குறிப்பிட்டு படம் பகிரப்பட்டுள்ளது. ஆனால், படத்தில் உள்ளவர்கள் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் போல இல்லை. சீக்கிய ராணுவ வீரர்கள் போல அவர்கள் தெரிந்தனர். ஒரு சீக்கிய ராணுவ அதிகாரி முழு சீருடையில் இருக்கிறார். மற்றவர்கள் தங்கள் சீருடை சட்டையை கழற்றி வைத்துள்ளது தெரிகிறது. ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அணியும் வெள்ளைச் சட்டையை இவர்கள் அணிந்திருக்கவில்லை. 

ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுவாகக் காக்கி அரைக்கால் சட்டை அல்லது முழுக்கால் சட்டை மற்றும் வெள்ளை சட்டை அணிவார்கள். ஆனால் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தில் உள்ளவர்கள் வெள்ளை உள் பனியன் அணிந்துள்ளனர். ஒருவர் முழு சீருடையில் உள்ளார். அவரது சீருடையில் ராணுவ வீரர் என்பதற்கான நட்சத்திரம் போன்ற சின்னம் இருப்பதைக் காண முடிந்தது. 

ஆர்.எஸ்.எஸ்-ல் சீக்கியர் பிரிவு உள்ளதா என்று பார்த்தோம். 1986ம் ஆண்டு சீக்கியர் பிரிவான ராஷ்டிரிய சீக் சங்கத் (Rashtriya Sikh Sangat) தொடங்கப்பட்டது என்று தகவல் கிடைத்தது. ஆர்.எஸ்.எஸ்-ல் சீக்கியர்கள் இருந்திருக்கலாம், ஆனால் காக்கி அரைக்கால் சட்டை, வெள்ளை சட்டை அணிந்த வீரர்கள் ஒருவர் கூட இந்த படத்தில் இல்லாதது சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, இந்த படத்தை ஆய்வு செய்தோம்.

இந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 1962ம் ஆண்டு இந்தோ – சீன போரின் போது இந்திய ராணுவ வீரர்கள் அஸ்ஸாமில் பயிற்சியில் ஈடுபட்ட படம் என்று குறிப்பிட்டு பிரபல டைம் இதழ் உள்ளிட்ட முன்னணி ஊடகங்களில் இந்த புகைப்படம் வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. 

உண்மைப் பதிவைக் காண: time.com I Archive 1 I defenceforumindia.com I Archive 2 I oldindianphotos.in I Archive 3

பல நம்பகமான ஊடகங்களில் 1962ல் போர் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய ராணுவ வீரர்கள் என்று குறிப்பிட்டு இந்த படத்தைப் பகிர்ந்திருப்பதைக் காண முடிகிறது. அதே நேரத்தில், இவர்கள் ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் இந்த படத்தை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில் இவர்கள் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் என்பதற்கு எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை. அதே நேரத்தில் இந்த படத்தை வெளியிட்டுள்ள டைம் இதழ் இவர்கள் இந்திய ராணுவ வீரர்கள் என்றும், இவர்கள் போர் முணையில் இல்லை, அஸ்ஸாமில் பயிற்சியில் ஈடுபட்டனர் என்றும் தெரிவிக்கிறது. இதன் அடிப்படையில் இந்த படம் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இந்திய ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்ட படத்தை இந்தோ சீன போரில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் பங்கேற்ற காட்சி என்று தவறாக பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:இந்தோ- சீனப் போரில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False