எலிசபெத் ராணி இறுதிச் சடங்கில் இந்து மந்திரங்கள் ஓதப்பட்டதா?

சமயம் சமூக ஊடகம் சர்வதேசம்

இங்கிலாந்தின் எலிசபெத் ராணி இறுதிச் சடங்கின் போது இந்து மந்திரங்கள் ஓதப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இங்கிலாந்து பக்கிங்ஹாம் அரண்மனை முன்பு, மாணவர்கள் சமஸ்கிருத பாடலை பாடுகின்றனர். வீடியோவின் தொடக்கத்தில் டெல்லியில் கடந்த 2010ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியின் லோகோவோடு பெயர் போடப்படுகிறது. அதில், புனித ஜேம்ஸ் பள்ளி பாடல் குழு என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

நிலைத் தகவலில், “மறைந்த ராணி – எலிசபெத் – இறுதிச் சடங்கில் ஒலித்த – ஹிந்து மந்திரங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை காசிஆனந்தம் கொம்மடிக்கோட்டை என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 செப்டம்பர் 12ம் தேதி வெளியிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இங்கிலாந்து அரசி எலிசபெத் காலமானதைத் தொடர்ந்து அவர் தொடர்பான வீடியோக்கள் பல சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இங்கிலாந்து அரசியின் இறுதிச் சடங்கில் இந்து மந்திரங்கள் என்று ஒரு வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இங்கிலாந்து அரசி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு செப்டம்பர் 19, 2022 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அப்படி இருக்கும் போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு மீது சந்தேகம் ஏற்பட்டது.

மேலும், இறுதிச் சடங்கில் மாணவர்கள் பாட வேண்டிய அவசியம் இல்லை. அதுவும் 2010ம் ஆண்டு நடந்த டெல்லி காமன்வெல்த் போட்டியின் லோகோ அதில் இடம் பெறத் தேவையும் இல்லை. எனவே, இந்த வீடியோவை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ இங்கிலாந்து அரசி எலிசபெத் இறுதிச் சடங்கின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பது தெரியவந்தது. மேலும், இது 2009-10ம் ஆண்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஆகும்.

WildFilmsIndia என்ற யூடியூப் சேனல் இந்த வீடியோவை 2019ம் ஆண்டு பதிவேற்றம் செய்திருப்பது தெரிந்தது. அதில், காமன்வெல்த் போட்டியைத் தொடங்கி வைக்கும் மரபின் அடிப்படையில் 2009ம் ஆண்டு பக்கிங்காம் அரண்மனையில் நடந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்து மாணவர்கள் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பாடினர் என்று குறிப்பிட்டிருந்தனர். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவிலும் Wildfilmsindia.com என்ற வாட்டர் மார்க் இருந்தது. இது எல்லாம் இந்த வீடியோ 2009ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்தன.

இது தொடர்பாக செய்தி ஏதும் உள்ளதா என்று பார்த்தோம். 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி வெளியான சில செய்திகள் கிடைத்தன. அதில் டெல்லி 2010 காமன்வெல்த் விளையாட்டு போட்டி தொடங்குவதை முன்னிட்டு, அதற்கான தீபத்தை ஏந்திச் செல்லும் தொடர் ஓட்ட நிகழ்வை 2009ல் எலிசபெத் ராணி, மற்றும் அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் ஆகியோர் தொடங்கிவைத்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: insidethegames.biz I Archive

2010 டெல்லி காமன்வெல்த் போட்டிக்கான கவுன்ட் டவுன் தீப தொடர் ஓட்டத்தை 2009ம் ஆண்டின் இறுதியில் எலிசபெத் ராணி தொடங்கி வைத்த நிகழ்ச்சியின்போது, பள்ளி மாணவர்கள் சமஸ்கிருதத்தில் பாடியுள்ளனர். இந்த வீடியோவை எடுத்து, எலிசபெத் ராணியின் இறுதிச் சடங்கில் சமஸ்கிருத ஸ்லோகம் ஓதப்பட்டது என்று, தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இங்கிலாந்து அரசி மறைந்த எலிசபெத்தின் இறுதி சடங்கின் போது சமஸ்கிருத இந்து மத மந்திரங்கள் பாடப்பட்டதாக பகிரப்படும் வீடியோ டெல்லி காமன்வெல் போட்டியையொட்டியை எலிசபெத் லண்டனில் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்த நிகழ்வின்போது எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:எலிசபெத் ராணி இறுதிச் சடங்கில் இந்து மந்திரங்கள் ஓதப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False

Leave a Reply