
‘’பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசிய எச்.ராஜா,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதில், எச்ச ராஜா திமிர் பேச்சு என்று கூறி நியூஸ்18 தமிழ்நாடு பெயரில் வெளியான வீடியோ காட்சியை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’பள்ளனும், பறையனும் கோயிலுக்குள் நுழையக் கூடாது. அப்படி நடந்தால், சூத்திரன் தாழ்ந்து போவான். பார்ப்பான் அளவுக்கு சூத்திரனால் உயர்வு பெற முடியாது,’’ என்று எச்.ராஜா பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது.
இதனை பலரும் உண்மை என்று நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
முதலில், இந்த வீடியோ சமீபத்தில் எடுக்கப்பட்டதா அல்லது பழைய காட்சியா என்று சந்தேகம் ஏற்பட்டது. இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, இந்த வீடியோவை 2020 முதலே பலரும் பகிர்ந்து, எச்.ராஜாவுக்குக் கண்டனம் தெரிவித்து வருவதைக் கண்டோம்.

எனவே, நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி தரப்பில் இதுதொடர்பாக விசாரித்தோம். அப்போது, அவர்கள் ‘மக்கள் சபை’ என்ற பெயரில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றின் வீடியோ இது என்றும், மிகப் பழையது என்றும் குறிப்பிட்டனர்.
இதையடுத்து, நியூஸ்18 தமிழ்நாடு டிவியின் அதிகாரப்பூர்வ யூடியுப் பக்கம் சென்று, மக்கள் சபை என்ற பெயரில் பதிவேற்றப்பட்டுள்ள வீடியோ இணைப்புகளை கண்டோம்.
அதில், கடந்த பிப்ரவரி 18, 2020 அன்று வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றின் லிங்க் கிடைத்தது. Makkal Sabai: 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகத்திற்கு வளர்ச்சியா? வீழ்ச்சியா? எனும் தலைப்பில் பகிரப்பட்டுள்ள அந்த மறு ஒளிபரப்பு வீடியோவில், எச்.ராஜா, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலரும் பங்கேற்று விவாதிக்கிறார்கள்.
முழு வீடியோ கீழே தரப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில், எச்.ராஜா 2 முறை பேசுகிறார். அதில், 2வது முறை, அதாவது, வீடியோவின் இறுதியாக, 1:02:53 மணிநேரத்தில் தொடங்கி 1:04:02 மணிநேரம் வரை எச்.ராஜா குறிப்பிட்ட விசயத்தைப் பேசுகிறார்.

அதாவது, ‘’நண்பர்களே, ஒரே ஒரு விசயத்தை நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன். நான், திராவிடம் என்ற இனம் உள்ளதை ஒப்புக் கொண்டும் கூட, அதை இங்கே விமர்சிக்கிறார்கள் என்றால் அவர்கள் உண்மையை ஏற்க விரும்பவில்லை என்பது புரிகிறது. இந்த ஆணவக் கொலையை பற்றி உண்மையை சொன்னால், கோபப்படக்கூடாது. திராவிட இயக்கங்கள் சீண்டி சீண்டித்தான் ஆணவக் கொலையே வருகிறது. காரணம், அவர்களின் அடிப்படை சித்தாந்தம் பட்டியல் சமுதாய மக்களுக்கு விரோதமானது. ஏனெனில், மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலில் பட்டியல் சமுதாய மக்களை கூட்டிக் கொண்டு வைத்தியநாத அய்யர் உள்ளே போகும்பொழுது உடன் இருந்தவர் பெரியவர் முத்துராமலிங்க தேவர். ஆனால், அதை எதிர்த்தவர் ஈவெரா. அவர் சொன்ன வார்த்தை அப்போது என்னவென்றால், அதில் எனக்கு உடன்பாடு இல்லாதபோதும் இங்கே சொல்கிறேன், காரணம், உண்மை தமிழக மக்களுக்கு, இளைய சமுதாயத்திற்கு புரியனும். பள்ளனும், பறையனும் கோயிலுக்கு போகக்கூடாது. கோயிலுக்குள் நுழையக் கூடாது. அப்படி நுழைந்தால் சூத்திரன் பாப்பான் அளவு உயர மாட்டான், பள்ளன் பறையன் அளவு தாழ்ந்துபோவான் என்று ஈவெரா பேசி, தலித் அதாவது எஸ்சி மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டவர்கள்,’’ என்று எச்.ராஜா பேசுகிறார்.
அதன்பின் நிகழ்ச்சி அரங்கில் பெரும் சலசலப்பு எழுவதைக் காண முடிகிறது.
எச்.ராஜா பேசியது அவரது சொந்தக் கருத்து அல்ல; பெரியார் இவ்வாறு கூறினார் என்றுதான் மேற்கோள் காட்டிப் பேசுகிறார். எடிட் செய்த வீடியோவையும், முழு வீடியோவையும் ஒப்பீடு செய்து மீண்டும் ஒருமுறை வாசகர்களுக்காக நாம் கீழே பகிர்ந்துள்ளோம்.
எனவே, கடந்த ஜனவரி 7, 2018 அன்று நியூஸ்18 தமிழ் ஊடகம் சேலத்தில் நடத்திய மக்கள் சபை என்ற விவாத நிகழ்ச்சியில் எச்.ராஜா பங்கேற்று பேசியதை எடுத்து, எடிட் செய்து, தவறான தகவலை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் எச்.ராஜா பேசினாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
