FACT CHECK: மகாராஷ்டிராவின் மிதி ஆறு என்று பா.ஜ.க-வினரால் பகிரப்படும் பிலிப்பைன்ஸ் படம்!

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

மகாராஷ்டிராவில் ரூ.1000ம் கோடி செலவில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்ட மிதி ஆற்றின் படம் என்று ஒரு படத்தை சிலர் சமூக ஊடகங்களில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

குஜராத் மாநிலம் சபர்மதி ஆறு மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் மிதி ஆறு என இரண்டு படங்களை ஒப்பிட்டு பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “படம் 1 – சபரமதி ஆறு , அகமதாபாத், குஜராத் (குஜராத் மாநிலம் செலவழித்த நிதி:  1400 கோடி) படம் 2 – மிதி நதி, மும்பை, மகாராஷ்டிரா (பி.எம்.சி & எம்.எம்.ஆர்.டி.ஏ செலவழித்த நிதி: 1000 + கோடி)” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Coimbatore BJP என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 ஜூன் 27ம் தேதி பகிர்ந்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் சபர்மதி ஆற்றங்கரையின் அழகிய படத்தை பகிர்ந்துள்ளனர். பிளாஸ்டிக் கழிவுகளால் மூழ்கடிக்கப்பட்ட மும்பையில் பாயும் மிதி நதி என்று மற்றொரு படம் பகிரப்பட்டுள்ளது. இந்த படங்கள் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

2019ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை மகாராஷ்டிரா மாநிலத்தை ஐந்து ஆண்டுகளுக்கு பா.ஜ.க தான் ஆட்சி செய்தது. அவர்கள் ஆட்சியிலேயே ஆறு மாசு அடைந்துவிட்டது என்று கூறுகிறார்களா அல்லது அவர்கள் ஆட்சி அகன்றதால் நதி மாசு அடைந்துவிட்டது என்று கூறுகிறார்களா என்பது தெரியவில்லை. இந்த படம் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் எடுக்கப்பட்டதா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.

சபர்மதி ஆற்றங்கரை என்று பகிரப்பட்ட படத்தை ரிவர்ஸ் செய்து தேடினோம். 2013ம் ஆண்டிலேயே அகமதாபாத் சபர்மதி ஆற்றங்கரை என்று குறிப்பிட்டு செய்தி வெளியாகி இருப்பது தெரிந்தது. எக்கனாமிக் டைம்ஸ் இதழ் இந்த படத்தை 2013ம் ஆண்டு வெளியிட்டிருந்தது. இதன் மூலம் இந்த படம் சபர்மதி ஆற்றங்கரை படம் என்பது உறுதியானது.

அசல் பதிவைக் காண: economictimes.indiatimes.com I Archive

மகாராஷ்டிராவின் மிதி ஆறு என்று பகிரப்பட்ட படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, ஆசியாவில் பிளாஸ்டிக் கழிவுகளால் பாழாகும் ஆறுகள் என்று குறிப்பிட்டு இந்த படத்தை பல ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. ஆனால் எந்த ஆறு, எங்கு எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை. தொடர்ந்து தேடியபோது ஷட்டர் ஸ்டாக் என்ற புகைப்படம் விற்பனை தளத்தில் இந்த படம் இருந்தது. அதில், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நதி பிளாஸ்டிக் கழிவுகளால் மாசடைந்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: shutterstock.com I Archive

இதன் அடிப்படையில் மணிலா, நதி, பிளாஸ்டிக் கழிவு என்று பல கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது, AFP News Agency மணிலாவில் எடுத்த வீடியோ நமக்குக் கிடைத்தது. அதில் ஆறு முழுக்க பிளாஸ்டிக்கால் நிறைந்திருப்பதையும், ஒரு பக்கத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற வீடுகள் இருப்பதையும் காண முடிந்தது.

இந்த புகைப்படத்தை எடுத்தது tonyoquias என்று ஒரு இணையதளத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் தேடியபோது Antonio V. Oquias என்பவர் இந்த படத்தை எடுத்ததையும் அவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் வசித்து வருவதும் தெரியவந்தது. இதன் மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மிதி நதி என்று பகிரப்படும் படம் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள நதியின் படம் என்பது உறுதியானது.

மிதி ஆற்றை  ரூ.1000ம் கோடியில் சீரமைக்கும் திட்டம் நடந்ததா என்று பார்த்தோம். ஆனால் 2005ம் ஆண்டில் இருந்து , மழை வெள்ள பாதிப்பின் போது மழை நீரை மிதி ஆற்றின் வழியாக வெளியேற்ற, அந்த ஆற்றை அழகுபடுத்த என பல திட்டங்கள் தீட்டப்பட்டு வருவது தெரிந்தது. 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் மத்திய அரசு இத்திட்டத்துக்கு ரூ.1657.11 கோடி வழங்குவதாக அறிவித்தது. ஆனால் 2005ம் ஆண்டில் இருந்து ஒரு பைசா கூட வரவில்லை என்று தெரியவந்ததாக குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: deccanherald.com I Archive I thehindu.com I Archive

சபர்மதி ஆற்றங்கரை படம் உண்மையானதுதான். ஆனால், மிதி ஆறு என்று பகிரப்பட்ட படம் மகாராஷ்டிராவில் எடுக்கப்பட்டது இல்லை. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் உண்மையுடன் தவறான தகவலும் கலந்து பதிவிடப்பட்டுள்ளது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு உண்மையுடன் தவறான தகவலும் கலந்தது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மகாராஷ்டிராவின் மிதி ஆறு என்று பகிரப்படும் படம் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள ஆற்றின் படம் என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மகாராஷ்டிராவின் மிதி ஆறு என்று பா.ஜ.க-வினரால் பகிரப்படும் பிலிப்பைன்ஸ் படம்!

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False