பேச்சிப்பாறை அணையில் நீர் இடி விழும் காட்சி; வீடியோ உண்மையா?

சமூக ஊடகம்

‘’பேச்சிப்பாறை அணையில் நீர் இடி விழும் காட்சி,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு வீடியோ காட்சியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். 

தகவலின் விவரம்:

Facebook Link Archived Video Link 

அன்பான இரு உள்ளங்கள் எனும் ஃபேஸ்புக் ஐடி அக்டோபர் 21, 2019 அன்று இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. இதில், அணைக்கட்டு ஒன்றில் திடீரென நீருக்கடியில் எதோ வெடித்துச் சிதறும் காட்சி இடம்பெற்றுள்ளது. மேலே, ‘’ ⛈?⚡கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிபாறை dam-ல் இருந்து தண்ணீர் வரும் ஆற்றில் வில்லுக்குறி பக்கம் தண்ணிரில் இடி விழுவதை பாருங்க!⚡?⛈,’’ என எழுதியுள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
நீர் இடி என்றால் பொதுவாக, மழை பெய்யும் அல்லது மேகமூட்டத்துடன் காணப்படும், திடீரென வானத்தில் இருந்துதான் பூமி நோக்கி இடி இறங்கும்.

ஆனால், நாம் பார்க்கும் இந்த வீடியோவிலோ மழைமேகம் எதுவுமின்றி வானம் தெளிவாக தோன்றுகிறது. நீர்த்தேக்கத்தின் இடது ஓரமாக இருந்து பரபரவென தீப்பற்றி எரிந்தபடி நீரின் உள்ளே இறங்குவதைக் காண முடிகிறது, அடுத்த சில நொடிகளில் நீருக்கடியில் எதோ வெடித்துச் சிதறுவதையும் காணலாம். அத்துடன் இதில் தென்படும் மரங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை போல இல்லை, வீடியோவின் இடது ஓரம் மேலே கம்பெனி ஒன்றில் லோகோவும் உள்ளது.

இவற்றின் அடிப்படையில் பார்த்தால் நாம் ஆய்வு செய்யும் வீடியோ காட்சி பேச்சிப்பாறை அணையில் இருந்து எடுக்கப்பட்டது இல்லை என தெளிவாகிறது. இருந்தாலும், இது எங்கிருந்து எடுக்கப்பட்ட வீடியோ என்ற விவரம் பற்றி ஃபேஸ்புக்கிலேயே தகவல் தேடினோம்.

இதன்படி, மேற்கண்ட வீடியோ கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக ஊடகங்களில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வைரலாகி வருவதைக் காண முடிந்தது. உண்மையில் இது ஃபின்லாந்தை சேர்ந்த Rannikon Merityö எனும் நிறுவனம் கடந்த 2012ம் ஆண்டு வெளியிட்ட வீடியோவாகும். இதுபற்றி பல வதந்திகள் பரவிய நிலையில் இதன் உண்மைத்தன்மை பற்றி Snopes Video ஆய்வு செய்து, அதன் முடிவுகளை சமர்ப்பித்துள்ளது. அதன் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

Archived Link

எனவே, இது உண்மையில் பேச்சிப்பாறை அணையில் நீர் இடி விழுந்த வீடியோ இல்லை எனவும், நீர் சார்ந்த கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் ஃபின்லாந்து கம்பெனி வெளியிட்ட திட்டப் பணி பற்றிய வீடியோ எனவும் தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த வீடியோ பற்றிய தகவல் தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:பேச்சிப்பாறை அணையில் நீர் இடி விழும் காட்சி; வீடியோ உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False