
நடிகர் கார்த்தியிடம் திரள் நிதி கேட்டு சீமான் மிரட்டியது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
நடிகர் கார்த்திக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போன் செய்து திரள் நிதி கேட்பது போன்றும், சீமான் ஒரு சீட்டிங் ஆசாமி என்று நடிகர் கார்த்தியின் மனசாட்சி கூறுவது போலவும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திரள் நிதிக்காக ஒரு இனத்தை வைத்து தமிழ்நாட்டு இளைஞர்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை ஏமாற்றி ஈனப் பிழைப்பு நடத்தும் சீமானின் சுயரூபம் பற்றி நடிகர் கார்த்தி முதல் முறையாக மனம் திறந்திருக்கிறார் ” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வீடியோவை பார்க்கும் போதே எடிட் செய்யப்பட்டிருப்பது தெரிகிறது. கார்த்தியின் வாய் அசைப்புக்கும், அவர் பேசுவதற்கும் மிக எளிதாக வேறுபாட்டை காண முடிகிறது. இருப்பினும் அரசியல் காரணங்களுக்காக பலரும் இந்த வீடியோவை பதிவிட்டு வருவதை காண முடிகிறது.
சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத் துறையிலிருந்து அழைக்கிறோம் என்று கூறி பொது மக்களை டிஜிட்டல் கைது என்று கூறி பயமுறுத்தி, ஒரு கும்பல் நிதி மோசடியில் ஈடுபட்டு வருகிறது. அது தொடர்பாக தமிழ்நாடு காவல் துறை வெளியிட்டிருந்த வீடியோவை எடிட் செய்து சீமான் பற்றி நடிகர் கார்த்தி பேசுவது போன்று வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு பள்ளி, கல்லூரிக்கு அருகே போதை மருந்த விற்பனை செய்யப்படுகிறது என்று தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை வெளியிட்டதாக வதந்தி பரவியது. அப்போது தமிழ்நாடு காவல்துறையின் சமூக ஊடக பக்கங்களை பார்வையிட்ட போது, நடிகர் கார்த்தியின் வீடியோவை பார்த்தோம். அதன் அடிப்படையில் அந்த வீடியோவை தேடி எடுத்தோம்.
“இணையதள மோசடிகள், போலியான அழைப்புகள், டிஜிட்டல் அரெஸ்ட் பற்றிய தமிழ்நாடு காவல்துறையின் விழிப்புணர்வு காணொளி” என்று குறிப்பிட்டு 2025 ஜனவரி 29ம் தேதி அந்த வீடியோவை தமிழ்நாடு காவல்துறை தன்னுடைய சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டிருந்தது. அதில், எந்த இடத்திலும் சீமானைப் பற்றி கார்த்தி குறிப்பிடவில்லை.
உண்மையில் சீமான் பற்றி கார்த்தி பேசி அதை தமிழ்நாடு காவல் துறை வெளியிட்டிருந்தால் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், எடிட் செய்யப்பட்டது என்பதால் அப்படி எந்த பிரச்னையும் எழவில்லை. நம்முடைய ஆய்வில் தமிழ்நாடு காவல் துறை வௌியிட்ட உண்மையான வீடியோவை ஆதாரமாக அளித்துள்ளோம். இதன் அடிப்படையில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைப் பற்றி நடிகர் கார்த்தி விமர்சித்து வீடியோ வெளியிட்டார் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
‘’டிஜிட்டல் அரெஸ்ட்” தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோவை எடிட் செய்து நடிகர் கார்த்தி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை மோசடி பேர்வழி என்று விமர்சித்தது போன்று உருவாக்கி சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:நடிகர் கார்த்தியிடம் திரள் நிதி கேட்ட சீமான் என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: Altered
