FACT CHECK: கிறிஸ்தவர்கள் தீபாவளி போனஸ் வாங்கக் கூடாது என்று மோகன் சி லாசரஸ் கூறினாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

கிறிஸ்தவர்கள் தீபாவளி போனஸை கையால் கூடத் தொடக் கூடாது என்று கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் கூறியதாக ஒரு புகைப்பட பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர் பகிரப்பட்டுள்ளது. அதில், “தீபாவளி போனஸை “கிறித்துவர்கள்” கையால் கூடத் தொடக் கூடாது..! Bro. Mohan C. Lazarus” என்று இருந்தது.

இந்த பதிவை Vishwa Hbk என்ற ஐடி கொண்ட நபர் 2021 அக்டோபர் 28ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தீபாவளி போனஸை கிறிஸ்தவர்கள் கைகளால் கூடத் தொடக் கூடாது என்று மோகன் சி லாசரஸ் கூறியதாக பகிரப்பட்டுள்ளது. உண்மையில் அவர் அப்படி கூறினாரா அல்லது எடிட் செய்து விஷமத்தனமாக பகிர்ந்துள்ளார்களா என்று ஆய்வு செய்தோம்.

இது தொடர்பாக கூகுளில் தேடினோம். மோகன் சி லாசரஸ் அல்லது வேறு எந்த ஒரு கிறிஸ்தவ மத போதகரும் போனஸ் வாங்குவது தவறு என்று கூறியதாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் மோகன் சி லாசரஸ், எஸ்ரா சற்குணம் என பல கிறிஸ்தவ போதகர்களின் பெயரில் இந்த தகவல் பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதும் தெரியவந்தது.

அசல் பதிவைக் காண: christianmedias.com I Archive

இந்த புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, உண்மையான போஸ்டர் நமக்கு கிடைத்தது. அதில், “அற்புத விடுதலை பிரார்த்தனை” என்று மட்டுமே இருந்தது. அந்த வீடியோவைப் பார்த்தோம். அதில் தீபாவளி போனஸ் வாங்கக் கூடாது என்று மோகன் சி லாசரஸ் கூறவில்லை.

இது குறித்து இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் ஊடகப் பிரிவுத் தலைவர் ரெக்ஸ் கிளமெண்ட்டை தொடர்புகொண்டு கேட்டோம். அவரும், இது உண்மையானது இல்லை; எடிட் செய்யப்பட்டது, என்று உறுதி செய்தார். 

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் தீபாவளி போனஸை கிறிஸ்தவர்கள் கையால் கூடத் தொடக் கூடாது என்று மோகன் சி லாசரஸ் கூறியதாக பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கிறிஸ்தவர்கள் தீபாவளி போனஸ் வாங்கக் கூடாது என்று கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் கூறியதாக பரவும் போஸ்டர் போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன்  ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கிறிஸ்தவர்கள் தீபாவளி போனஸ் வாங்கக் கூடாது என்று மோகன் சி லாசரஸ் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False