
மோகினி டே பாஸ் வாசிக்கும் அழகை ரசித்துச் சிரித்து மகிழ்ந்த ஏ.ஆர்.ரஹ்மான் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Facebook I Archive
ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் குழுவில் பணியாற்றிய மோகினி டே என்பவர் பாஸ் இசைக் கருவியை இசைக்கும் அழகை ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோவில் பார்த்து ரசிப்பது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மியூசிக் கேட்டு சிரிக்கறவன இப்பதான் பார்க்குறேன்….😁 பொஞ்சாதி ஏன் தலாக் தலாக் தலாக் சொல்லமாட்டா !?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மற்றொரு பதிவில், “பாய் இசை புயல் இல்ல இசை சிற்பி அங்கம் அங்கமா ரசிச்சு தான் டியூன் போடுவாப்டி” என்று கொச்சையாக பதிவிடப்பட்டிருந்தது. இதே போன்று பலரும் சமூக ஊடகங்களில் இந்த வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சமீபத்தில் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டார். அதே நேரத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் குழுவில் பணியாற்றி வந்த பாஸ் (Bass) இசைக் கலைஞர் மோகினி டே என்பவரும் தன்னுடைய விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் மீது வன்மத்திலிருந்து வந்த பலரும் இந்த இரண்டு நிகழ்வையும் தொடர்புபடுத்தி, பதிவிட்டனர். அதன் உச்சமாக, மோகினி டே-வை மிகவும் ஆபாசமாக ஏ.ஆர்.ரஹ்மான் ரசித்துப் பார்ப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.
இந்த வீடியோ பார்க்கும் போதே எடிட் செய்யப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. இரண்டு வீடியோவும் வேறு வேறு இடங்களில் எடுக்கப்பட்டிருப்பது தெரிகிறது. உண்மையில் ஆபாசத்தை ரசிக்கும் நபராக இருந்திருந்தால் அதைத் தனிமையில் செய்திருக்கலாம், அதை வீடியோவாக எடுத்து வெளியிட மாட்டார்கள். எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோவை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆடுஜீவிதம் கொண்டாட்டம் என்று பதிவை அவர் வெளியிட்டிருந்தார். ஏப்ரல் 12, 2024 அன்று பதிவு வெளியாகி இருந்தது. அதில் ஆடுஜீவிதம் படத்தின் இயக்குநர் பிளஸ்ஸி வந்துள்ளார் என்று ஏ.ஆர்.ரஹ்மான் குறிப்பிடுகிறார்.
உண்மைப் பதிவைக் காண: instagram.com
அடுத்ததாக மோகினி டே வீடியோவை தேடினோம். அந்த வீடியோ மோகினி டே-வின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து கிடைத்தது. 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் தேதி இந்த வீடியோவை மோகினி டே வெளியிட்டிருந்தார். அதில், “6 ஆண்டுகளுக்கு முன்பு @abhijithpsn இன் ‘சரஸ்வதி அட் மாண்ட்ரீக்ஸ்’ பாடலுக்காக இந்த பாஸ் பார்ட் எழுதினேன். சரஸ்வதி அறிவு, இசை, கலை, பேச்சு, ஞானம் மற்றும் கற்றலின் இந்து தெய்வம்” என்று குறிப்பிட்டிருந்தார். இரண்டு வீடியோவுக்கும் இடையே கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் இடைவெளி இருந்தது.
உண்மைப் பதிவைக் காண: instagram.com
2023ம் ஆண்டு அக்டோபரில் மோகினி டே வெளியிட்ட வீடியோவையும் 2024 ஏப்ரல் மாதம் ஆடுஜீவிதம் படத்தின் இயக்குநர் உடனான ஏ.ஆர்.ரஹ்மானின் சந்திப்பு வீடியோவையும் ஒன்று சேர்த்து மோகினி டே-வை ரசித்த ரஹ்மான் என்று ஆபாசமாக, தங்கள் மனதிலிருந்த வக்கிரங்களை வைத்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியிருப்பது இதன் மூலம் உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஏ.ஆர்.ரஹ்மான், மோகினி டே என இருவரின் தனித்தனி வீடியோக்களை எடுத்து ஒன்று சேர்த்து இருவர் பற்றியும் அவதூறான வதந்தியை பரப்பியிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…\
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:மோகினி டே இசைக்கருவியை வாசிக்கும் அழகை ரசித்த ஏ.ஆர்.ரஹ்மான் என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: Altered
