அம்மா உணவகத்தால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என சென்னை மேயர் கூறினாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

அம்மா உணவகத்தால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என்று சென்னை மேயர் பிரியா கூறினார் என ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அம்மா உணவகம் முன்பு மக்கள் நிற்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அம்மா உணவகத்தால் யாருக்கும் எந்த பயனும் இல்லை!  – சென்னை மாநகர மேயர்.! ஏழை எளிய மக்களுக்கு தான் தெரியும் பசியின் வலி.!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Hindu Samayam என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 மே 8ம் தேதி பதிவிட்டுள்ளது.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அதே போன்று சென்னை மேயர் பிரியா பேசும் வீடியோ பதிவுடன் மற்றொரு பதிவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. நிலைத் தகவலில், “அம்மா உணவகத்தால் யாருக்கும் எந்த  பயனும் இல்லை – சென்னை மேயர் பிரியா 

பசியையும் வறுமையும் பற்றி உனக்கு என்ன தாயீ தெரியும்??? அம்மா உணவகம் அனாதை இல்லங்களின் அன்புக்கு நிகரானது அரசியல் கலந்து அம்மா உணவகத்தை மூட

அன்றாடம் உழைக்கும் அன்பானர்கள் பசியாற்றும் அம்மா உணவக மூடல்? அதற்குத் தரும் விளக்கம் அனைவராலும் ஏற்கக்கூடியதில்லை.. தவறான பேச்சு. பசித்தவனுக்குத்தான் பசியின் அருமை தெரியும்.பணம்,பதவி,புகழ் பெற்றவர்களுக்கு பசியின் அருமை தெரியாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை Thangaraj S Thangaraj Kodumanal என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 மே 7ம் தேதி பதிவிட்டுள்ளார். இதையும் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஏழை மக்களுக்கு ஒரு ரூபாயில் உணவு வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது தொடங்கிவைத்தார். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகும் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. தி.மு.க-வினர் சிலர் ஒன்றிரண்டு அம்மா உணவகங்கள் மீது தாக்குதல் நடத்தினாலும், மற்ற இடங்களில் வழக்கம் போல அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அம்மா உணவகத்தால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறினார் என்று பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். பிரியா அப்படிக் கூறினாரா என ஆய்வு செய்தோம். முதலில் பிரியா அளித்த பேட்டி வீடியோவை பார்த்தோம். விகடன் லோகோ இருந்ததால், அந்த வீடியோவை தேடி எடுத்தோம். அதில், “”அம்மா உணவகத்தால் பயனில்லை” – Priya | Chennai Mayor” என்று இருந்தது. பிரியாவின் பேட்டியில் அம்மா உணவகத்தால் பயனில்லை என்று குறிப்பிடவில்லை. எனவே, வேறு யாராவது முழு வீடியோ வெளியிட்டுள்ளார்களா என்று பார்த்தோம்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஏபிபி நாடு அந்த வீடியோவை மே 7ம் தேதி பதிவேற்றம் செய்திருந்தது. அதில் அம்மா உணவகம் பற்றி துணை மேயர் மகேஷ் பேசினார். அப்போது, “அம்மா உணவகத்தை பொது மக்கள் சரியாக பயன்படுத்துவது இல்லை. கிட்டத்தட்ட 300 ரூபாய்க்கு, 500 ரூபாய்க்கு ஒரு நாளைக்கு வியாபாரம் ஆகும் அளவில் 50க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் உள்ளன. 325 அம்மா உணவகங்களில் 1500 ரூபாய்க்கு உள்ளாகத்தான் வியாபாரம் நடக்கிறது. ஒரு அம்மா உணவகத்துக்குக் குறைந்தபட்சம் ஒன்றேகாலில் இருந்து ஒன்றரை லட்சம் செலவாகிறது.  மாதத்துக்கு 30 ஆயிரம் என்ற அளவில்தான் வருகிறது. ஒரு லட்ச ரூபாய் அளவுக்கு நஷ்டம் வருகிறது. முன்னாள் முதல்வர் ஆரம்பித்த திட்டம் என்றாலும் பொது மக்கள் பயன்பாட்டுக்காகத் தொடரட்டும் என்று பெருந்தன்மையாக நடத்திக்கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து மேயர் பிரியா பேசினார். அப்போது, “வாடிக்கையாளர் குறைந்ததால் தான் அம்மா உணவகம் நிறைய இடங்களில் பயனில்லாமல் இருக்கிறது. சில இடங்களில் எல்லாம் போய் பார்த்தீர்கள் என்றால் பூட்டே கூட திறக்காமல் உள்ளனர் மாதக்கணக்கில். ஆனால், அதற்கான பில் மாநகராட்சிக்கு அளித்து வருகின்றனர். எனவே, அம்மா உணவகம் தற்போது எது எது செயல்பாட்டில் உள்ளது, செயல்படாமல் உள்ளது என்ற தகவலை முதலமைச்சரிடம் வழங்கி, அவர் என்ன ஆலோசனை வழங்குகிறாரோ அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

கடைகள் பூட்டப்பட்டிருக்கிறது என்றால் அது மாநகராட்சியின் தவறுதானே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் “நாங்கள் அதை ஒப்பந்ததாரர்களிடம் வழங்கிவிட்டோம். அதை அவர்கள் செயல்படுத்த வேண்டும் இல்லையா?” என்று தெரிவித்தார்.

உடன் குறுக்கிட்டு சமாளித்த துணை மேயர், “அம்மா உணவகத்தை பொது மக்கள் பயன்பாட்டுக்காகத்தான் நாங்கள் வைத்திருக்கிறோம். ஆனால், பொது மக்கள் பயன்படுத்திக்கொள்வது இல்லை. அதனால் நஷ்டங்கள்தான் மாநகராட்சிக்கு வருகிறது” என்றார்.

பொது மக்கள் வருகை குறைந்ததால் பல இடங்களில் அம்மா உணவகம் பயனில்லாமல் மூடப்பட்டுள்ளது என்று மேயர் பிரியா கூறினார். அதாவது ஒரு சில அம்மா உணவகங்கள் மட்டுமே பயனில்லாமல் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளாரே தவிர, ஒட்டுமொத்தத்தில் அம்மா உணவகத்தால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என்று கூறவில்லை. அதுவே, அம்மா உணவகத்தால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என்று அவர் கூறியிருந்தார் அந்த திட்டமே தேவையற்றது என்று அர்த்தம் வருகிறது. அவர் அப்படி கூறிவிட்டதாக கருதி பசி என்றால் தெரியுமா, ஏழைகளின் கஷ்டம் தெரியுமா என்று பலரும் வசைபாடி வருவதை காண முடிகிறது.

இந்து தமிழ் திசையில், “அம்மா உணவகங்கள் பலவும் செயல்படாமல் பூட்டிதான் உள்ளன: சென்னை மேயர் பிரியா” என செய்தி வெளியிட்டிருந்தது.  தீவிர வலதுசாரி ஆதரவு யூடியூப் ஊடகமான சாணக்கியா கூட “அம்மா உணவகங்கள் மூடி இருக்கின்றன – சென்னை மேயர் பிரியா வாக்குமூலம்” என்று செய்தி வெளியிட்டிருந்தது. 

மக்கள் வருகை குறைந்ததால் பல அம்மா உணவகங்கள் பயனில்லாமல் மூடிக்கிடக்கிறது என்று மேயர் பிரியா கூறியதைத் திரித்து, அம்மா உணவகத்தால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என்று மேயர் கூறியதாக தவறான தகவலைப் பகிர்ந்திருக்கின்றனர். இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

வாடிக்கையாளர்கள் குறைந்ததால் பல இடங்களில் அம்மா உணவகம் பயனில்லாமல் இருக்கிறது என்று கூறியதை, அம்மா உணவத்தால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என்று சென்னை மேயர் கூறினார் என திரித்து வதந்தி பரப்பி வருவதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அம்மா உணவகத்தால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என சென்னை மேயர் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: Misleading

Leave a Reply