
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “தமிழ்நாட்டில் ஏப்.19ல் ஒரே கட்டமாக தேர்தல். ஜூன் 4-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில், “*தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு* தமிழ்நாட்டில் ஏப்ரல் 19_ல் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை ஜூன் _4. ::- தேர்தல் ஆணையம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு என்று கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை பிரதமர் மோடி மார்ச் 1ம் தேதி திறந்து வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் ஆகவில்லை. பிப்ரவரி 17ம் தேதி தான் தாக்கல் செய்யப்பட உள்ளது. எனவே, இவை எல்லாம் முடியும் வரை தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பில்லை.
தற்போதுதான் தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது என்றால் முன்னதாகவே செய்தியாளர்கள் சந்திப்புக்கு அழைப்புவிடுக்கப்படும். அந்த செய்தியாளர் சந்திப்பில்தான் தேர்தல் தேதியைத் தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பார். இன்று (பிப்ரவரி 7, 2026) அப்படி எந்த ஒரு சந்திப்புக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை, அவசர சந்திப்பு எதுவும் நடக்கவும் இல்லை. எனவே, இந்த ஸ்கிரீன்ஷாட் பழைய வீடியோவுடையதாக இருக்கலாம் என்று ஆய்வு செய்தோம்.
2024 நாடாளுமன்றத் தேர்தல் எப்போது நடந்தது என்று தேதியை அறிய ஆய்வு செய்தோம். தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடந்திருப்பது தெரிந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஸ்கிரீன்ஷாட்டில் ஜூன் 4 செவ்வாய்க்கிழமை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 2024ம் ஆண்டு ஜூன் 4 செவ்வாய்க்கிழமையாக இருந்தது. இந்த ஆண்டு வியாழக்கிழமையாக உள்ளது. எனவே, இது பழைய செய்திதான் என்பது உறுதியானது.
அடுத்ததாக இந்த ஸ்கிரீன்ஷாட்டை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றி தேடினோம். இதை சன் நியூஸ் வெளியிட்டிருப்பது தெரியவந்தது. இதை நியூஸ் கார்டாக சன் நியூஸ் தன்னுடைய சமூக ஊடக பக்கங்களில் 2024ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி வெளியிட்டிருந்தது. இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்பதை உறுதி செய்தன.
முடிவு:
2024 நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பின் ஸ்கிரீன்ஷாட்டை 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு என்று சமூக ஊடகங்களில் தவறாக பதிவிட்டு வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
FacebookI X PostI Google News ChannelI Instagram
Title:தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 19ல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False


