இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க பரிசீலனை என்று அமித்ஷா அறிவித்தாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழகம்

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்கிறேன் என்று அமித்ஷா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

ADMK 2.png
Facebook LinkArchived Link

பிரேக்கிங் நியூஸ் கார்டு என்று ஒன்று பகிரப்பட்டுள்ளது. ஆனால், எந்த ஒரு பத்திரிகை, தொலைக்காட்சி வெளியிட்டது என்று இல்லாமல் பொதுவான நியூஸ் கார்டாக இருந்தது. அதில், “முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த வெற்றி. முதல்வர் எடப்பாடி கோரிக்கை ஏற்கிறேன். இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க பரிசீலனை தொடக்கம் – அமித்ஷா. அதிமுக-வுக்கு வெற்றி” என்று உள்ளது.

இந்த பதிவை, ஜெயம் அசோக் என்பவர் 2019 டிசம்பர் 22ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. ஆனால், அ.தி.மு.க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதை ஏற்று வாக்களித்தது. பின்னர் இது குறித்து பேசிய அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் நெருக்கடி காரணமாக வாக்களித்தோம் என்றார். 

vikatan.comArchived Link

இந்த நிலையில், இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க-வின் நிலைப்பாடு. அதனால்தான் அதை ஆதரித்தோம் என்று மற்றவர்கள் கருத்து கூறி வருகின்றனர். டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கூட இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வலியுறுத்தியதாக கூறியிருந்தார்.

ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்கிறேன் என்றும் அதன் அடிப்படையில் இரட்டை குடியுரிமை வழங்க பரிசீலனை தொடக்கம் என்று அமித்ஷா கூறியதாக இந்த நியூஸ் கார்டில் கூறியுள்ளனர். இது எந்த ஒரு செய்தி ஊடகமும் வெளியிடாத மொட்டை கடிதம் போன்ற மொட்டை நியூஸ் கார்டு. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய வேண்டிய தேவையில்லை எனவே, கருத்து உண்மையா என்ற ஆய்வு மேற்கொண்டோம். இது தொடர்பாக கூகுளில் தேடியபோது, அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியதாகவும் பரிசீலிப்பதாக அமித்ஷா கூறியதாகவும் மட்டுமே செய்தி கிடைத்தது. அதிலும் தினத்தந்தி, தினமணி போன்ற ஊடகங்களில் டாக்டர் நமது அம்மா என்ற அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளில் வெளியான செய்தியையே மேற்கொள் காட்டியிருந்தனர்.

dailythanthi.comArchived Link 1
dinamani.comArchived Link 2

டாக்டர் நமது அம்மா இணையதளத்தில் பார்த்தோம். அதில்,  “ஏற்கனவே புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, ஈழத்தில் இருந்து தமிழகம் வந்த தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி இருக்கிறார். அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதற்கு ஏதுவாக சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கேட்டுக் கொண்டார்” என்று மட்டுமே இருந்தது.

namadhuamma.netArchived Link

அதன் இ-பேப்பரைப் பார்த்தோம். லீட் பகுதியில், “இரட்டை குடியுரிமை வழங்க வேண்டுமென்று தமிழக முதலமைச்சர் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் விரைவில் சட்டதிருத்தம் கொண்டு வரப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்தார்” என்று இருந்தது.

ஆனால், செய்தியினுள் அப்படி ஒரு வரி கூட இல்லை. அதில், “ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டார். அதனை ஆர்வத்துடன் கேட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இப்பிரச்னை குறித்து விரைவில் அரசு பரிசீலிக்கும் என்றும், சரியான நேரத்தில் இதற்குரிய சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் முதலமைச்சரிடம் உறுதி அளித்தார்” என்று இருந்தது.

ADMK 3.png
e-paperArchived Link

அதாவது லீடில் பரிசீலித்து வருவதாக கூறிய அமித்ஷா, செய்தியினுள் விரைவில் பரிசீலிக்கப்படும் என்று கூறியதாக உள்ளது. 

விரைவில் சட்ட திருத்தம் கொண்டுவரப்படும் என்று லீடில் குறிப்பிட்டுள்ளனர். செய்தியினுள் சரியான நேரத்தில் இதற்குரிய சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என்ற கூறினார் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அமித்ஷா ஏற்றுக்கொண்டேன் என்று எந்த இடத்திலும் கூறவில்லை என்பது உறுதியானது.

நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கூட அ.தி.மு.க சார்பில் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தப்பட்டது. அவரும் பரிசீலனை செய்வதாக கூறினார் என்று ஓ.பன்னீர்செல்வம் முன்பு கூறியிருந்தார். ஆனால், நீட் தேர்வு இன்னும் பரிசீலனையிலேயே உள்ளது. பரிசீலிக்கிறேன் என்று கூறியதாலேயே அதை ஏற்றுக்கொள்கிறேன் என்று அமித்ஷா கூறியதாக எடுத்துக்கொள்ள முடியாது. 

dinamalar.comArchived Link

நம்முடைய ஆய்வில், ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியதும், அதை பரிசீலிப்பதாக அமித்ஷா கூறியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இரட்டை குடியுரிமையை ஏற்றுக்கொள்கிறேன் என்று எந்த இடத்திலும் அமித்ஷா கூறவில்லை. அமித்ஷா அப்படி கூறியதாக அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையும் செய்தி வெளியிடவில்லை. இதன் அடிப்படையில், ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அமித்ஷா ஏற்றக்கொண்டார், சட்டத் திருத்தம் செய்ய பரிசீலனை தொடக்கம் என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க பரிசீலனை என்று அமித்ஷா அறிவித்தாரா?

Fact Check By: Chendur Pandian 

Result:Partly False